சந்திரயான்-3 எடுத்த நிலவின் புதிய புகைப்படங்கள்: இஸ்ரோ வெளியிட்டது

சந்திரயான்-3 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் எடுத்த நிலவின் புதிய புகைப்படங்கள் சிலவற்றை இஸ்ரோ தனது எக்ஸ் தளத்தில் இன்று வெளியிட்டுள்ளது. நிலவில் லேண்டர் தரையிறங்கத் தோதான இடங்களை லேண்டர் தொடர்ந்து புகைப்படம் எடுத்து அனுப்பி வருகிறது.

அந்த வகையில், நாளை மறுநாள் (ஆகஸ்டு 23) மாலை 6.04 மணிக்கு லேண்டர் தரையிறங்கவுள்ள நிலையில், இன்று லேண்டர் எடுத்த புதிய புகைப்படங்கள் சில வெளியிடப்பட்டுள்ளன. இந்தப் புகைப்படங்கள் ஆகஸ்ட் 19ஆம் தேதி எடுக்கப்பட்டவையாகும். தற்போது சந்திரயான் 3 நிலவில் இருந்து 25 km x 134 km குறைக்கப்பட்ட தூரத்தில் உலவி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக, நிலவுக்கு ரஷ்யா அனுப்பிய லூனா-25 விண்கலம், தரை இறங்குவதற்கு முந்தைய சுற்றுவட்டப் பாதையில் நுழையும்போது கட்டுப்பாட்டை இழந்து, கீழே விழுந்து நொறுங்கியது. இதனால் தற்போது ஒட்டுமொத்த விண்வெளி ஆராய்ச்சி உலகின் கவனமும் இஸ்ரோவின் சந்திரயான் 3-ன் மீது திரும்பியுள்ளது.

இந்நிலையில் இது போன்ற அசம்பாவிதங்களைத் தவிர்க்கவே லேண்டர் எந்தப் பகுதியை தவிர்க்கலாம், எது தோதான இடமாக இருக்கும் போன்றவற்றை ஆராய்ந்து படம் எடுத்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.