அநீதி – விமர்சனம்

நடிப்பு: அர்ஜுன் தாஸ், துஷாரா விஜயன், காளி வெங்கட், வனிதா விஜயகுமார், அர்ஜுன் சிதம்பரம், பரணி, ஷா ரா, அறந்தாங்கி நிஷா, சாந்தா தனஞ்செயன், டி.சிவா மற்றும் பலர்

எழுத்து & இயக்கம்: ஜி.வசந்தபாலன்

ஒளிப்பதிவு: எட்வின் சகாய்

படத்தொகுப்பு: ரவிகுமார்.எம்

இசை: ஜி.வி.பிரகாஷ் குமார்

தயாரிப்பு: ’அர்பன் பாய்ஸ் ஸ்டூடியோஸ்’ சார்பில் எம்.கிருஷ்ணகுமார், முருகன் ஞானவேல், வரதராஜன் மாணிக்கம், ஜி.வசந்தபாலன்

பத்திரிகை தொடர்பு: நிகில் முருகன்

உறவு என சொல்லிக்கொள்ள யாருமில்லாத நாயகன் திருமேனி (அர்ஜுன் தாஸ்), சென்னையில் உணவு வினியோகம் செய்யும் வேலை பார்க்கிறார். சிறு வயதில் நடந்த கசப்பான அனுபவத்திலிருந்தே மன உளைச்சலுடன் இருக்கும் அவர், உணவு வினியோகம் செய்யும்போது ஏற்படும் சிறு சிறு தவறுகளுக்கு, உணவை ஆர்டர் செய்தவர்களின் கண்ணியமற்ற வார்த்தைகளால் கூடுதல் மனஉளைச்சலுக்கு ஆளாகி, அவரது மூளையில் கொலைவெறியைத் தூண்டும் ஓசிடி எனும் மனநோய்க்கு ஆளாகிறார். இதனை கேள்விப்பட்ட அவருடைய நண்பர்களும் அவர் மீது அச்சம் கொள்கிறார்கள்.

மனநல மருத்துவரின் மருந்து குணப்படுத்த முடியாத திருமேனியின் ஓசிடி மனநோய், பணக்கார பெண்மணியான மங்கையர்க்கரசியின் (சாந்தா தனஞ்செயன்) வீட்டில் வீட்டுவேலை செய்யும் நாயகி சுப்புலட்சுமியை (துஷாரா விஜயன்) பார்த்து, பேசி, பழகும்போது குணமடைகிறது. நாளடைவில் இருவருக்கும் காதல் மலர்கிறது. சுப்புலட்சுமியை திருமேனி சந்திப்பதை,  முதலாளியம்மா மங்கையர்க்கரசி பார்த்து விடுகிறார். காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்போவதாக மிரட்டி திருமேனியை துரத்தி விடுகிறார்.

தற்செயலாக மங்கையர்க்கரசி திடீரென இறந்துவிட, அமெரிக்காவிலிருந்து வந்திருக்கும் அவரது மகள் அனிதா (வனிதா விஜயகுமார்), மகன் அஜீ (அர்ஜுன் சிதம்பரம்) உள்ளிட்ட உறவினர்கள், சுப்புலட்சுமியும், திருமேனியும் சேர்ந்து பணத்திற்காக அவரைக் கொன்று விட்டதாக அவர்கள் மீது கொலைப்பழி சுமத்துகிறார்கள். இந்த கொலைப் பழியிலிருந்து இருவரும் மீண்டார்களா? அல்லது  கொலைப்பழியை சுமந்து சிறைக்குச் சென்றார்களா? என்பது ‘அநீதி’ திரைப்படத்தின் மீதிக்கதை.

0a1e

திருமேனி என்ற நாயகன் கதாபாத்திரத்தில் வரும் அர்ஜுன் தாஸ், ஓசிடி மனநோயால் பாதிக்கப்பட்ட இளைஞர் என்ற பலம் வாய்ந்த கதாபாத்திரத்தை மிக கவனமாக கையாண்டு, சிறப்பாக நடித்துள்ளார். அவரது தனித்துவமான குரல் அவருடைய கதாபாத்திரத்துக்கு வலு சேர்க்கிறது.  எளிய மக்களை இழிவாக நடத்துபவர்களைப் பார்த்தால் அவர்கள் மீது கொலைவெறி கொள்வது, யாருடனும் அதிகம் பேசாமல் இறுக்கமாக இருப்பது, காதலிக்கத் தொடங்கிய உடன் தனது மனநிலையில் நடைபெறும் மாற்றத்தை வெளிப்படுத்துவது என அனைத்து இடங்களிலும் மிகச் சிறப்பாக நடித்திருப்பவர், தனது அப்பாவை நினைத்து அழும் காட்சியில், பார்வையாளர்களையும் கண் கலங்க வைக்கிறார். ஆக்‌ஷன் படங்களை மட்டும் இன்றி, காதல் மற்றும் எமோஷனல் படங்களையும் தன்னால் சிறப்பாக கையாள முடியும் என்பதை அர்ஜுன் தாஸ் இப்படத்தின் மூலம் நிரூபித்துள்ளார்.

சுப்புலட்சுமி என்ற நாயகி கதாபாத்திரத்தில் வரும் துஷாரா விஜயன், தன் குடும்பத்தின் வறுமை காரணமாக வீட்டு வேலை செய்யும் வேலைக்காரப் பெண்ணாகவே மாறியிருக்கிறார். முதலாளியம்மாவைக் கண்டு அஞ்சும் காட்சிகளிலும், அடிவாங்கி பதறும்போதும், நாயகனிடம் காதலை வெளிப்படுத்தும் காட்சியிலும், தன்னை பரிசோதிக்கும் முதலாளியம்மாவின் முன் ஆடையை விலக்கிக் காட்டி நியாயம் பேசும் காட்சியிலும் பார்வையாளர்களின் ஒட்டுமொத்த கவனத்தையும் தன் பக்கம் ஈர்த்து விடுகிறார் துஷாரா.

பிளாஷ்பேக்கில் நாயகனின் அப்பாவித்தனமான அப்பா சிவசங்கரனாக வருகிறார் காளி வெங்கட். தன் மகனுக்கு ஒரு சாக்லேட் வாங்கித் தர இயலாத அப்பாவாக நிறைவான நடிப்பை வழங்கியிருக்கிறார்.

நாயகனின் நண்பர்களாக வரும் பரணி, ஷா ரா, கடை முதலாளியாக வரும் சிவா, பணக்கார பெண்மணியாக வரும் சாந்தா தனஞ்செயன், அவரது மகளாக வரும் வனிதா விஜயகுமார், மகனாக வரும் அர்ஜுன் சிதம்பரம்,, மற்றும் சுரேஷ் சக்கரவர்த்தி, ஜேஎஸ்கே, அற ந்தாங்கி நிஷா உள்ளிட்டோர் தங்கள் கதாபாத்திரம் உணர்ந்து நடித்திருக்கிறார்கள்.

‘வெயில்’, ‘அங்காடி தெரு’, ‘ஜெயில்’ போன்ற தனது படங்களில் எளியவர்களின் வாழ்க்கையையும், அவர்களுக்கு இழைக்கப்படும் அநீதியையும் தொடர்ந்து பதிவு செய்து வரும் இயக்குநர் வசந்தபாலன், இந்த படத்திலும் எளியவர்களின் வாழ்க்கையை மையமாக வைத்து, உழைப்பாளிகளுக்கு செல்வந்தர்கள் இழைக்கும் அநீதிகள் பற்றி அழுத்தமாக பதிவு செய்திருக்கிறார். செல்வந்தர்களால் தொழிலாளர்கள் ஓசிடி எனும் மனநோய்க்கு ஆளாவதையும், மன்னிக்கும் மனநிலை குறைந்து அனாதைகள் உருவாகும் அவலத்தையும், தொழிலாளர்கள் கண்ணியமாக நடத்தப்பட வேண்டும் என்பதையும், காவல்துறையில் நீதி மறுக்கப்படுவதையும், தனியார் மயமாக்கலால் நாம் சந்திக்கும் பிரச்சினைகளையும் ,குடும்பச் சுமை நம்மை கொத்தடிமைகளாக மாற்றி வருவதையும், பணத்தால் மனிதர்கள் மிருகமாய் மாறுவதையும், தன்னுடைய ’அநீதி’யில் பதிவு செய்திருக்கிறார் இயக்குனர். அநீதி தொடர்ந்தால் சமூகத்தில் அமைதி குறையும், வன்முறை கூடும் என்றும் எச்சரிக்கிறார். பாராட்டுகள்.

எட்வினின் ஒளிப்பதிவு, ஜி.வி.பிரகாஷ் குமாரின் இசை, ரவிகுமாரின் படத்தொகுப்பு ஆகியவை படத்திற்கு பலம் சேர்க்கும் வகையில் பயணித்திருக்கின்றன.

’அநீதி’ – எளியவர்களுக்கு இழைக்கப்படும் அநீதிக்கு எதிராக மீண்டும் ஒரு முறை உரக்க குரல் கொடுத்திருக்கிறர் இயக்குநர் வசந்தபாலன். கண்டு களிக்கலாம்!