மாவீரன் – விமர்சனம்

நடிப்பு: சிவகார்த்திகேயன், அதிதி ஷங்கர், சரிதா, மிஷ்கின், சுனில், மோனிஷா பிளஸ்ஸி, யோகி பாபு, பாலாஜி சக்திவேல், அருவி மதன், விஜய் சேதுபதி (குரல்) மற்றும் பலர்
இயக்கம்: மடோன் அஷ்வின்
ஒளிப்பதிவு: விது அய்யண்ணா
படத்தொகுப்பு: பிலோமின் ராஜ்
இசை: பரத் சங்கர்
தயாரிப்பு: ‘சாந்தி டாக்கீஸ்’ அருண் விஸ்வா
தமிழக வெளியீடு: ரெட் ஜெயண்ட் மூவிஸ்
பத்திரிகை தொடர்பு: சுரேஷ் சந்திரா, ரேகா (டிஒன்)
தினத்தந்தி நாளிதழில் பல்லாண்டு காலமாக வெளிவரும் ‘கன்னித்தீவு’ என்ற சித்திரக்கதை தொடர், அதிமுக ஆட்சிக்காலத்தில் சென்னை புளியந்தோப்பில் தரமற்று கட்டப்பட்ட குடிசை மாற்று வாரிய அடுக்குமாடி குடியிருப்பு தொடர்பான பிரச்சனை, ஒரு கொரியன் திரைப்படத்தில் இடம் பெற்றுள்ள ‘அமானுஷ்யமான அசரீரி குரலால் வழி நடத்தப்படும் கதாநாயகன்’ என்ற புதுமையான ஐடியா – இவற்றின் இன்ஸ்பிரேஷனில், சிவகார்த்திகேயனையும் மனதில் வைத்து, சமூக பொறுப்புள்ள, ஃபேண்டஸியான, ரசிக்கத் தக்க பொழுதுபோக்குப் படமாக இயக்குனர் மடோன் அஷ்வின் உருவாக்கியிருக்கும் திரைப்படம் தான் ‘மாவீரன்’.
சென்னையில், கழிவுநீர் ஓடும் கூவம் நதிக்கரையில் உள்ள குடிசைப் பகுதியில், தன் அம்மா (சரிதா), தங்கை (மோனிஷா பிளஸ்ஸி) ஆகியோருடன் வாழ்ந்து வருகிறார் சத்யா (சிவகார்த்திகேயன்). பயந்த சுபாவம் கொண்ட அவர், எந்த வம்பு தும்புக்கும் போகாமல், எவ்வளவு பிரச்சனைகள் வந்தாலும் எல்லாவற்றையும் சகித்துக்கொண்டு ஒதுங்கிப்போகும் இயல்பு உடையவர்.
சித்திரக்கதை ஓவியரான சத்யா, வயிற்றுப் பிழைப்புக்காக வரைந்து கொடுக்கும் ஓவியம், ‘தினத்தீ’ என்ற நாளிதழில் வேறொருவர் பெயரில் ‘மாவீரன்’ என்ற சித்திரக்கதை தொடராக வெளிவருகிறது. இந்நிலையில் மாநகரப் பேருந்தில் போகும்போது அவருக்கு அறிமுகமாகும் நிலா (அதிதி ஷங்கர்) என்ற ‘தினத்தீ’ நாளிதழின் துணை ஆசிரியர் மூலம் அதே நாளிதழில், சத்யா பெயரிலேயே ‘மாவீரன்’ சித்திரக்கதை தொடருக்கு ஓவியம் தீட்டும் வேலை கிடைக்கிறது.
இதற்கிடையே, கூவம் நதிக்கரையில் வசிக்கும் குடிசைப்பகுதி மக்களை அங்கிருந்து வெளியேற்றி, அவர்களை வேறொரு இடத்தில் புதிதாகக் கட்டப்பட்ட ‘மக்கள் மாளிகை’ என்ற அடுக்குமாடிக் குடியிருப்பில் மறுகுடியேற்றம் செய்கிறது அரசு. ஊழல் முறைகேடு காரணமாக தரமற்று கட்டப்பட்ட அந்த அடுக்குமாடி குடியிருப்பின் சுவரைத் தொட்டாலே காரை பெயர்ந்து விடுவது, கூரைத் தளம் உதிர்ந்து விழுவது, பாத்ரூம் கதவின் கைபிடி பிய்ந்து விடுவது என பல சிரமங்களை சத்யாவின் குடும்பத்தினர் உள்ளிட்ட அம்மக்கள் அனுபவிக்கிறார்கள். புதிய அடுக்குமாடி குடியிருப்பு இவ்விதம் தரமற்று கட்டப்பட்டதற்குப் பின்னணியில் ஊழல் அமைச்சர் ஜெயக்கொடி (மிஷ்கின்) இருக்கிறார். இது தெரிந்தாலும், அந்த ஊழல் அமைச்சரையும், அவரது அல்லக்கைகளையும் எதிர்த்துப் போராட துணிச்சலின்றி இருக்கிறார் சத்யா.
சத்யாவின் கோழைத்தனத்தை சகித்துக்கொள்ள முடியாத அவரது அம்மா, ஒரு கட்டத்தில் பயங்கரமாகத் திட்டிவிட, அதை தாங்கிக்கொள்ள முடியாமல் சத்யா மொட்டை மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்துகொள்ள முயலுகிறார். இதில் உயிர்பிழைக்கும் சத்யாவுக்கு, திடீரென அவரது காதில் மட்டும் ஒரு அமானுஷ்யமான அசரீரி குரல் (விஜய் சேதுபதி குரல்) கேட்கத் தொடங்குகிறது. அந்தக் குரல் கோழையாக இருக்கும் சத்யாவை எப்படி மாவீரன் ஆக்குகிறது? அவரும் ஊழல் அமைச்சர் ஜெயக்கொடியும் எப்படியெல்லாம் மோதுகிறார்கள்? இறுதியில் அந்த அமைச்சர் என்ன ஆனார்? தரமற்ற, மிகவும் ஆபத்தான அந்த குடியிருப்பில் வசிக்கும் மக்களை சத்யா காப்பாற்றினாரா? என்பன போன்ற கேள்விகளுக்கு சுவாரஸ்யமாக விடை அளிக்கிறது ‘மாவீரன்’ திரைப்படத்தின் மீதிக்கதை.
சத்யா என்ற கதாபாத்திரத்தில் பயந்த சுபாவம் கொண்ட சித்திரக்கதை ஓவியராகவும், அசரீரி கொடுக்கும் உந்துதலில் அடித்துச் சாய்க்கும் மாவீரனாகவும் அசத்தியிருக்கிறார் சிவகார்த்திகேயன். இவ்விரு உணர்வு நிலைகளிலும் நொடிக்கு நொடி அவர் மாறி மாறி நடித்திருப்பது சிறப்பு. வழக்கமான பாணியிலிருந்து முற்றிலும் விலகி, ஆட்டம், பாட்டம், நையாண்டி என்றில்லாமல், சிறுவர் முதல் பெரியவர் வரை அனைத்துத் தரப்பினரும் ரசிக்கத் தக்க விதத்தில் மிகவும் வித்தியாசமாக நடித்திருக்கிறார். பாராட்டுகள்.
நிலா என்ற கதாபாத்திரத்தில் ‘தினத்தீ’ நாளிதழின் துணை ஆசிரியராக வரும் அதிதி ஷங்கர், நாயகனுக்கு வேலை வாங்கிக் கொடுக்கிறார் என்பதோடு அவரது முக்கியத்துவம் முடிந்துவிடுகிறது. அதன்பிறகு அவ்வப்போது வந்து போகிறார், அவ்வளவு தான். அவரது கதாபாத்திரத்தை இன்னும் கொஞ்சம் வலிமையாக்கி, அவரது நடிப்பை சிறப்பாக பயன்படுத்தியிருக்கலாம்.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு நடிக்க வந்திருக்கும் சரிதா, நாயகனின் அம்மாவாக, பூ கட்டும் நடுத்தர வயது விளிம்புநிலைப் பெண்மணியாக, மிகவும் பொருத்தமான கதாபாத்திரத்தில் அனுபவ நடிப்பை வழங்கியிருக்கிறார். தப்பு என தெரிந்தால் உடனே ஆவேசப்பட்டு தட்டிக் கேட்கக் கிளம்பி, நாயகனை பதட்டமடையச் செய்யும் அவரது கதாபாத்திரம், யதார்த்தத்துக்கு மிகவும் நெருக்கமான பாத்திரம். அதை புரிந்துகொண்டு அற்புதமாக நடித்திருக்கிறார்.
நாயகனின் தங்கையாக வரும் மோனிஷா பிளஸ்ஸிக்கு பெரிய வேலை இல்லை என்றாலும் படம் முழுக்க வருகிறார். அளவாக நடித்திருக்கிறார்.
ஊழல் அமைச்சர் ஜெயக்கொடியாக வரும் மிஷ்கின் வழக்கமான தமிழ் சினிமா வில்லனாக வருகிறார். எதற்கெடுத்தாலும் கோபப்படுகிறார். புத்திகெட்டதனமாய் எதையாவது செய்கிறார். தனது பெரிய கண்களை உருட்டி பார்வையாளர்களையும் மிரட்டுகிறார். நாயகனிடம் அடிக்கடி ‘பல்பு’ வாங்குகிறார்.
அமைச்சர் ஜெயக்கொடியின் பி.ஏ.வாக சுனில் வருகிறார். அமைச்சரை பொதுவெளியில் ”சார்” என்றும், தனியாக இருக்கும்போது “நீ, வா, போ” என்றும் அழைப்பதோடு, “நான் சொல்றதை மட்டும் பண்ணு” என்று அமைச்சரையே கட்டுப்படுத்தும் சுவாரஸ்யமான கதாபாத்திரத்தில் அவர் அருமையாக நடித்திருக்கிறார்.
கட்டிட விரிசல்களைப் பூசி சரி பண்ணும் ‘பேட்ச் ஒர்க்’ தொழிலாளியாக குமார் என்ற கதாபாத்திரத்தில் வருகிறார் யோகி பாபு. அவர் வரும் காட்சிகளிலெல்லாம் மொத்த திரையரங்கும் சிரிப்பலையில் அதிர்கிறது. சில படங்களில் ஏமாற்றத்தை தந்திருக்கும் அவர், அதற்கும் சேர்த்து இந்த படத்தில் காமெடியை வாரி வழங்கியிருக்கிறார்.
முதலமைச்சராக வரும் பாலாஜி சக்திவேல், கட்டிட என்ஜினியராக வரும் அருவி மதன் உள்ளிட்டோரும் கவனம் பெறுகிறார்கள்.
முதல் பாதியின் இறுதியில் அசரீரியின் குரலாக ஒலிக்கத் துவங்கும் விஜய் சேதுபதியின் குரல், இப்படத்தை புதிய தளத்துக்கு எடுத்துச் சென்று ரசிக்க வைக்கிறது. நாயகனை ஆட்டிப் படைக்கும் அந்த குரல், அபூர்வமான மேஜிக்.
யோகி பாபு நாயகனாக நடித்த ‘மண்டேலா’ என்ற சமூக அக்கறையுள்ள படத்தின் இயக்குனராக அறிமுகமாகி, ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களின் பாராட்டுகளைப் பெற்ற மடோன் அஷ்வின் இயக்கியுள்ள இரண்டாவது படம் இந்த ’மாவீரன்’. இதிலும் சமூக அக்கறையுள்ள கதைக்கருவை தேர்ந்தெடுத்து தன்னை அடையாளப்படுத்தியிருக்கும் இயக்குனர் மடோன் அஷ்வின், மாஸ் ஹீரோவான சிவகார்த்திகேயனுக்கு பொருந்தும் விதத்தில் அதற்கு திரைக்கதை அமைத்து ஒரு வெற்றிப்படமாக இதை படைத்தளித்திருக்கிறார். எனினும், முதல் பாதியை தனித்தன்மை உள்ளதாக உருவாக்கியதைப் போல, இரண்டாம் பாதியையும் கொஞ்சம் மெனக்கெட்டு உருவாக்கியிருந்தால் இன்னும் நன்றாக ரசித்திருக்கலாம்.
விது அய்யண்ணாவின் ஒளிப்பதிவு, பிலோமின் ராஜின் படத்தொகுப்பு, பரத் சங்கரின் பாடலிசை மற்றும் பின்னணி இசை, குமார் கங்கப்பன், அருண் வெஞ்சரமூடு ஆகியோரின் கலை இயக்கம், ராம் மூர்த்தியின் சித்திரைக்கதை ஓவியங்கள், ஃபீனிக்ஸ் பிரபுவின் சண்டை இயக்கம் ஆகியவை இப்படத்தின் தரத்தை உயர்த்துவதற்கு உறுதுணையாக இருந்திருக்கின்றன.
‘மாவீரன்’ – குடும்பத்துடன் திரையரங்கம் சென்று கண்டு களிக்கலாம்!