பாயும் ஒளி நீ எனக்கு – விமர்சனம்
நடிப்பு: விக்ரம் பிரபு, வாணி போஜன், தல்லி தனஞ்செயா, விவேக் பிரசன்னா, வேல ராமமூர்த்தி, ஆனந்த் மற்றும் பலர்
இயக்கம்: கார்த்திக் அத்வைத்
ஒளிப்பதிவு: ஸ்ரீதர்
படத்தொகுப்பு: பிரேம் குமார்
இசை: சாகர்
தயாரிப்பு: ’கார்த்திக் மூவி ஹவுஸ்’ கார்த்திக் அத்வைத்
பத்திரிகை தொடர்பு: சதீஷ் – சதீஷ் குமார் – சிவா (டீம் எய்ம்)
”பாயுமொளி நீ எனக்கு பார்க்கும் விழி நான் உனக்கு
தோயும் மது நீ எனக்கு தும்பியடி நான் உனக்கு
வாயுரைக்க வருகுவதில்லை வாழிநின்றன் மேன்மை எல்லாம்
தூய சுடர் வானொலியே சூரையமுதே கண்ணம்மா”
என்பது மகாகவி பாரதியின் பாடல். காதல் த்தும்பும் இந்த பாடலின் தொடக்கத்தைத் தலைப்பாக வைத்து, அதிரடியான ஆக்சன் படத்தைக் கொடுத்திருக்கிறார் இயக்குனர் கார்த்திக் அத்வைத்.
ஐ.டி.யில் சாப்ட்வேர் வடிவமைப்பாளராக இருக்கும் நாயகன் விக்ரம் பிரபு பார்வைக் குறைபாடு உள்ளவர். நல்ல வெளிச்சத்தில் மட்டுமே அவருக்கு நன்றாக கண் தெரியும்; குறைந்த வெளிச்சம் என்றால் மிகவும் மங்கலாகத் தான் தெரியும். என்றாலும், சிறு வயதிலிருந்தே அவரை வளர்த்துவரும் சித்தப்பா ஆனந்த், தன்னம்பிக்கை ஊட்டி வளர்த்திருப்பதால், தன்னுடைய பார்வை குறைபாடு பற்றி எந்தவொரு கவலையும் இல்லாமல் வாழ்ந்து வருகிறார் விக்ரம் பிரபு.
ஒரு நாள் இரவு. டாஸ்மாக் கடைக்குப் பக்கத்தில் இருக்கும் ஒதுக்குப்புறமான இடத்தில், மனநலம் குன்றிய ஒரு பிச்சைக்காரப் பெண்ணை இரண்டு துஷ்டர்கள் பாலியல் வல்லுறவு செய்ய முயல, அவர்களைத் துரத்தியடிக்கிறார் விக்ரம் பிரபு. இந்த விவகாரம் அடுத்தடுத்து வளர்ந்து, பல பிரச்சினைகளுக்குள் விக்ரம் பிரபுவை இழுத்து விடுகிறது.
இந்நிலையில், விழாக்களுக்கு டெக்ரேஷன் செய்பவராக இருக்கிறார் நாயகி வாணி போஜன். அவர் விக்ரம் பிரபுவின் தங்கையின் மணவிழாவுக்கான டெக்ரேஷன் விஷயமாக வரும்போது விக்ரம் பிரபுவை சந்திக்கிறார். இதன்பின் இருவருக்கும் இடையில் நடக்கும் சந்திப்புகளின் விளைவாக காதலர்கள் ஆகிறார்கள்.
இந்த நேரத்தில் திடீரென்று விக்ரம் பிரபுவின் சித்தப்பா மிகக் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்படுகிறார்.
இதற்கிடையில், ஆளுங்கட்சித் தலைவரான வேல ராமமூர்த்தியின் வளர்ப்பு மகன் தல்லி தனஞ்செயா, அப்பாவுக்குப் பிறகு தான்தான் அரசியல் வாரிசாக இருக்க வேண்டும் என்று நினைப்பவர். கொலைகளுக்கு அஞ்சாதவர். இவரும் ஒரு கட்டத்தில் விக்ரம் பிரபுவின் வாழ்க்கையில் குறுக்கிடுகிறார். தன்னுடைய சித்தப்பாவின் கொலையில் தல்லி தனஞ்செயாவுக்குத் தொடர்பு இருக்கலாம் என்று விக்ரம் பிரபு சந்தேகப்படுகிறார்.
இந்த சந்தேகத்தைத் தொடர்ந்து பயணிக்கும் விக்ரம் பிரபுவுக்கு யார் எதிரிகள் என்பதே தெரியாத வகையில் எதிர்ப்புகள் ஏற்படுகிறது. இந்த எதிர்ப்புகளையெல்லாம் பார்வைக் குறைபாடு உடைய விக்ரம் பிரபு கடந்தாரா? அவருடைய சித்தப்பா கொலைக்கு என்ன காரணம்..? கொலையாளிகளை விக்ரம் பிரபுவால் பழி வாங்க முடிந்ததா? என்பன போன்ற கேள்விகளுக்கு விடை அளிக்கிறது ‘பாயும் ஒளி நீ எனக்கு’ திரைப்படத்தின் மீதிக்கதை.
முகம் நிறைய தாடியுடன் புதிய கெட்டப்பில் வருகிறார் நாயகன் விக்ரம்பிரபு. தோற்றம் மட்டுமின்றி நடிப்பிலும் வித்தியாசம் காட்டியிருக்கிறார். சண்டைக்காட்சிகளில் உக்கிரம் காட்டியிருக்கிறார். மங்கலான பார்வையுடன் தீயவர்களுடன் பயங்கரமாக மோதும் காட்சிகளில் பார்வையாளர்களை மெய்சிலிர்க்கச் செய்கிறார்.
நாயகியாக வரும் வாணிபோஜன், பாடல் காட்சிகளில் அழகுப் பதுமையாக வண்ணமயமாக வருகிறார். கொடுக்கப்பட்ட வேடத்துக்கு ஏற்ப சிறப்பாக நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.
நண்பராக வரும் விவேக் பிரசன்னா, சித்தப்பாவாக வரும் ஆனந்த், அரசியல் தலைவராக வரும் வேல ராம்மூர்த்தி, அவரது மகனாக வரும் தல்லி தனஞ்செயா உள்ளிட்டோர் தத்தமது கதாபாத்திரத்துக்குத் தேவையான நடிப்பை வழங்கியுள்ளார்கள்.
பார்வை குறைபாடுடைய நாயகன், தனக்கு நேர்ந்த இழப்புக்காக எப்படி பழி தீர்க்கிறான் என்ற சுவாரஸ்யமான கதைக்கருவை வைத்துக்கொண்டு, அருமையான காட்சிகள் அமைத்து, விறுவிறுப்பாக, படத்தை நகர்த்திச் சென்றிருக்கிறார் இயக்குனர் கார்த்திக் அத்வைத். நாயகன் – நாயகி காதல் ட்ராக்கை இன்னும் கொஞ்சம் மெனக்கெட்டு சுவாரஸ்யப்படுத்தியிருந்தால், இன்னும் சிறந்த பொழுதுபோக்கு படமாக இது இருந்திருக்கும்.
ஸ்ரீதரின் ஒளிப்பதிவு சிறப்பு. குறிப்பாக, லைட்டிங்கில் அவர் செய்திருக்கும் மாற்றங்கள் பாராட்டுக்குரியது. சாகர் இசையமைப்பில் பாடல்கள் ஓ.கே. ரகம். பின்னணி இசை காட்சிகளுக்கு வலு சேர்த்திருக்கிறது.
‘பாயும் ஒளி நீ எனக்கு’ – முற்றிலும் வித்தியாசமான சண்டைக் காட்சி அமைப்புகளுக்காக பார்த்து ரசிக்கலாம்!