டக்கர் – விமர்சனம்
நடிப்பு: சித்தார்த், திவ்யான்ஷா, அபிமன்யுசிங், யோகிபாபு, விக்னேஷ்காந்த், முனீஸ்காந்த் மற்றும் பலர்
இயக்கம்: கார்த்திக் ஜி கிரிஷ்
ஒளிப்பதிவு: வாஞ்சிநாதன் முருகேசன்
படத்தொகுப்பு: ஜி.ஏ.கௌதம்
இசை: நிவாஸ் கே பிரசன்னா
தயாரிப்பு: பேஷன் ஸ்டூடியோஸ்
பத்திரிகை தொடர்பு: சுரேஷ் சந்திரா, ரேகா (டிஒன்)
பணம் தான் எல்லாம் என்ற நினைப்பில் பணக்காரன் ஆக முயலும் ஏழை இளைஞனும், பணத்தைக் குவிப்பதில் பலன் ஒன்றும் இல்லை என்ற விரக்தியில் இருக்கும் பணக்கார இளைஞியும் சந்தித்தால்… சேர்ந்து பயணித்தால்… அவர்களின் வாழ்க்கையில் என்னவெல்லாம் நிகழும் என்பது தான் ‘டக்கர்’ திரைப்படம்.
அம்மா, பள்ளி செல்லும் தங்கை ஆகியோருடன் கிராமத்தில் வறுமையில் வாழும் நாயகன் குணசேகரன் (சித்தார்த்), பணக்காரன் ஆக வேண்டும் என்ற லட்சியத்துடன் சென்னைக்கு கிளம்பி வருகிறார். ரெஸ்டாரெண்ட், பார், ஜிம் என்று ஒவ்வொரு இடமாக வேலை செய்கிறார். அங்கெல்லாம் தனது தன்மானத்தை விட்டுக்கொடுக்காமல் இருப்பதால் அவரால் அந்த வேலைகளில் நிரந்தரமாக இருக்க முடியவில்லை. எல்லா வேலைகளையும் விட்டுவிட்டு கடைசியில் பென்ஸ் கார் ஒன்றிற்கு டிரைவராக இருக்கிறார்.
சென்னையில் போதைப்பொருள் கடத்தல், ஆள் கடத்தல், ரவுடியிஸம் ஆகிய அனைத்து அட்டூழியங்களும் நடக்கும் இடம் ஒன்று இருக்கிறது. சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக அந்த இடத்துக்கு வரும் குணசேகரன், அங்கிருந்த கார் ஒன்றை அபேஸ் பண்ணி எடுத்துச் செல்கிறார். அந்த காரின் டிக்கியில் கடத்தப்பட்ட பணக்காரப் பெண் நாயகி மகாலட்சுமி (திவ்யான்ஷா கௌஷிக்) கிடத்தப்பட்டிருக்கிறார். அவர் பணத்தின் மீதும், மனிதர்கள் மீதும் நம்பிக்கையற்றவராக இருக்கிறார். இவ்விருவரின் முரண்பட்ட குணாதிசயங்கள் இவர்களின் வாழ்வில் என்னென்ன மாற்றங்களை ஏற்படுத்துகின்றன? மறுபுறம், தங்களைத் துரத்திவரும் வில்லன் & கோ-விடமிருந்து எப்படி தப்பிக்கிறார்கள்? நாயகன் குணசேகரன், பணக்காரன் ஆக வேண்டும் என்ற தன் லட்சியத்தை அடைந்தாரா? என்பன போன்ற கேள்விகளுக்கு விடை அளிக்கிறது ‘டக்கர்’ படத்தின் மீதிக்கதை.
பணக்காரன் ஆக வேண்டும் என அல்லாடும் துடிப்பான இளைஞனாகவும், காதலில் மயங்கும் காதலனாகவும், ஆக்ஷன் நாயகனாகவும் தனக்குக் கொடுக்கப்பட்ட குணசேகரன் கதாபாத்திரத்தை சிறப்பாகச் செய்திருக்கிறார் சித்தார்த்.
நாயகனுக்குச் சமமாகவே பயணிக்கிறது தியான்ஷா கௌஷிக்கின் நாயகி பாத்திரம். மகாலட்சுமி என்ற தனது கதாபாத்திரப் பெயருக்கு முரண்பாடாக தம் அடிப்பது, சரக்கு அடிப்பது, செக்ஸை சாதாரணமாக எடுத்துக்கொள்வது போன்ற அல்ட்ரா மாடர்ன் மேனரிஸத்தால் ரசிக்க வைக்கிறார்.
காமெடிக்கு யோகி பாபு, விக்னேஷ் காந்த், முனீஸ்காந்த் என மூன்று பேர் இருக்கிறார்கள். இவர்களில் யோகிபாபு மட்டும் சில இடங்களில் சிரிக்க வைக்கிறார். வில்லனாக வரும் அபிமன்யு சிங்கின் கதாபாத்திரம் அழுத்தமாக இல்லாததால் அவருக்கு பெரிதாக வேலை ஒன்றும் இல்லை.
நாயகன், நாயகி, வில்லன் என ஒவ்வொரு கதாபாத்திரமாக அறிமுகப்படுத்துவதற்குள் படத்தின் முதல்பாதி முடிந்து விடுகிறது.
இரண்டாம் பாதியிலாவது கொஞ்சம் விறுவிறுப்பான கதையைப் பார்க்கலாம் என்று எதிர்பார்த்தால் ரொம்ப நிதானமாக கதையை நகர்த்தியுள்ளார் இயக்குநர் கார்த்திக். வில்லன்களின் கூட்டத்தில் இருக்கும் யோகிபாபுவின் நகைச்சுவை, சில சண்டைக் காட்சிகள் மற்றும் சில பாடல்கள் மட்டுமே படத்திற்கு ஆறுதலாக அமைந்துள்ளன. மற்றபடி இத்தனைக் கால காத்திருப்புக்கு பின் வெளியாகும் சித்தார்த்தின் ’டக்கர்’ படத்தில் எதிர்பார்த்த அளவுக்கு புதிதாக ஒன்றும் இல்லை.
ஒளிப்பதிவாளர் வாஞ்சிநாதன் முருகேசனும், படத்தொகுப்பாளர் ஜி.ஏ.கௌதமும் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட வேலையை நிறைவாகச் செய்திருக்கிறார்கள். நிவாஸ் கே.பிரசன்னாவின் இசையில் ‘நிரா நிரா’ பாடல் மட்டும் முணுமுணுக்க வைக்கிறது. பின்னணி இசை ரொமான்ஸ் காட்சிகளில் மட்டும் கவனம் பெறுகிறது.
’டக்கர்’ – சண்டைக் காட்சிகளுக்காக பார்க்கலாம்.