மோடியை வரலாறு இப்படித்தான் நினைவு கூரும்!
மோடியின் ஆட்சியில்தான் புலம்பெயர் தொழிலாளர்களை பெருமளவு இந்தியா அறிந்து கொண்டது. கோவிட் தொற்றுக்காலத்தில் எறும்புகளை போல் வரிசை கட்டி பல்லாயிரம் மைல்களை நடந்து ஊருக்கு செல்லும்போதுதான் யார் இவர்கள் என நாம் யோசித்தோம்.
ஊடகவியலாளர் பி.சாய்நாத்தின் வார்த்தைகளில் சொல்வதெனில் அவர்கள் அனைவரும் நமக்கான வேலைகளைதான் செய்து கொண்டிருந்தனர். வீட்டுக் கட்டுமானங்கள், பொது கட்டடக் கட்டுமானங்கள், செங்கற்கள் செய்தல், உணவகங்கள், முடி திருத்த நிலையங்கள், பாஸ்ட் புட் கடைகள் என நாம் பார்க்காத பல இடங்களிலிருந்து தொடர்ந்து இயங்கி நமக்கான சேவைப்பணிகளை செய்து கொண்டிருந்தனர். கோவிட் சமயத்தில்தான் தடாலென அவர்கள் நம் கண்களில் தெரிந்து நாம் அக்கறை காட்டுவதாக பாவ்லா செய்வதாக பி.சாய்நாத் கூறினார்.
ஒரு நகரம், வணிக வளாகம், ரயில் பாதை, அரசுக் கட்டடங்கள், மேம்பாலங்கள் எல்லாம் கட்டியெழுப்பவென அபரிமிதமான உழைப்பு தேவை. தமிழ்நாட்டிலும் தெற்கிலும் மக்கள் ஓரளவுக்கு உடலுழைப்பை தாண்டி விட்டோம். மத்திய இந்தியாவில் இன்னும் இல்லை. பல்லாண்டு காலமாக அவர்கள் எந்தவித முன்னேற்றமே தொழிலாலர் பலனோ கல்வியோ இல்லாமல் இருக்கிறார்கள். இயல்பாகவே அவர்கள் பாசிச சக்திகளுக்கு lumpenproletariat-ஆக திரளுகின்றனர். பாபர் மசூதியின் உச்சியில் ஏறி நின்று இடித்தவர்கள் அனைவரும் இத்தகைய அறியாமையிலும் வேலையின்மையிலும் இருத்தி வைக்கப்பட்ட, அரசியல்படுத்தப்படாத பாட்டாளிகள்தாம்.
ஆனால் நடையாய் நடந்து அவர்கள் சென்ற மாநிலங்களில் அவர்கள் போட்ட ஓட்டு ஆனால் பாஜகவுக்குதான். காரணம் மோடி சொல்லும் டீக்கடை சாமானியன், சாதி மற்றும் மதக் கதைகள். சமீபத்தில் நடந்த மத்திய மாநில பள்ளித் தேர்வுகளின் முடிவுகளும் அவர்களை அரசுகள் எந்தளவுக்கு அறியாமையில் இருத்தி வைப்பதையே பிரதானமாக கருதுகின்றன என்பதை எடுத்துக் காட்டுவதாக இருந்தது.
இச்சூழலில் இப்போது நேர்ந்திருக்கும் இந்த ரயில் விபத்து. உயிரிழந்தவர்களில் பெரும்பான்மைக்கும் பெரும்பான்மை புலம்பெயர் தொழிலாளர்கள் என்பதில் சந்தேகம் இருக்க முடியாது. போகிறவர்களும் வருகிறவர்களும் ரயில்களை எப்படி நிரப்பி செல்வார்கள் என்பதை நாம் பார்த்திருக்கிறோம். தற்போது சொல்லப்படும் அதிகாரப்பூர்வ எண்ணிக்கையை தாண்டியும் உயிருழப்பு இருக்கவே சாத்தியம் அதிகம்.
ரயில் மோதலை தவிர்ப்பதற்கான செயல்முறையாக ‘கவாச்’ என்கிற முறையை பின்பற்றப்போவதாக சொல்லிய ஒன்றிய அரசு பிறகு அம்முறையை எல்லா ரயில்களுக்கும் அமல்படுத்துவதை நிறுத்தி அப்பணத்தில் ‘வந்தே பாரத்’ ரயில்களை உருவாக்க செலவழித்திருக்கிறதாம். இவையன்றி மூன்று ரயில்கள் பற்றிய தகவல்களை உடனடியாக பரிமாறிக் கொள்ள முடியாதளவுக்குதான் ரயில் போக்குவரத்து நிர்வாகம் இருக்கிறது. இந்த லட்சணத்திக்தான் இவர்கள் ரயில்வேயை தனியார்மயம் வேறு செய்யப் போகிறார்கள்.
புதிய நாடாளுமன்றம், செங்கோல் என ஆட்டமாய் ஆடும் மோடி மட்டி தன் வாக்கு வங்கியாக தொடர வேண்டுமென அறியாமையிலும் ஏழ்மையிலும் மத்திய மாநில மக்களை இருத்தி வைத்ததும் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகமாவதற்கான காரணமாக புரிந்து கொள்ளப்பட வேண்டும்.
வாக்களிக்காதவர்களை மட்டுமல்ல, வாக்களிப்பவர்களையும் கொன்றழித்தவராகவே மோடியை வரலாறு நினைவுகூரும்.
RAJASANGEETHAN