இனியேனும் காங்கிரஸ் தெற்கிலிருந்து இந்தியாவை அணுகட்டும்!
தபால் வாக்குகள் முடிந்து வாக்கு இயந்திர வாக்குகள் எண்ணத் தொடங்கியும் காங்கிரஸ் கட்சி முன்னணி இருக்கத் தொடங்கிய சந்தோஷத்தில் அனைவரும் இருக்க, பிரியங்கா காந்தி ஒரு கோவிலில் அமர்ந்து கடவுளுக்கு ஆராதனை காட்டிக் கொண்டிருந்தார். மேலும் அவர் ட்விட்டரில் ட்வீட் இடுவதும் பேசுவதும் பெரும்பாலும் இந்தி மொழியைத்தான் பயன்படுத்துகிறார். உத்தரப்பிரதேச கவனத்தை ஈர்ப்பதாக இருக்கலாம். ஆனால் உத்தரப்பிரதேச பிரேமைதான் இந்தி திணிப்பு, ராமர் கோவில் என்றெல்லாம் இட்டுச் செல்லவும் செய்யும் என்பதை காங்கிரஸ் புரிந்து கொள்ள வேண்டும்.
ராகுல் காந்தி உண்மையிலேயே கடும் உழைப்பை கொடுத்திருந்தார். ‘இந்திய ஒற்றுமை பயணம்’ ஒரு விளம்பர உத்தியாக தொடங்கப்பட்டாலும் ஓரளவுக்கு இந்திய மக்களுக்கு நம்பிக்கை தரும் விஷயமாகவே அமைந்திருந்தது. மோடி முன்வைத்த இறுக்கமான, ஆண்மை நிறைந்த, முரட்டுத்தனமான நிலப்பிரபுத்துவ பிம்பத்துக்கு அப்படியே எதிராக நெகிழ்வான, புன்னகை நிரம்பிய, எளிமையான, மக்களுடன் இயைகிற ஒரு Global and Liberal இளைஞனுக்கான பிம்பத்தை ராகுல் காந்திக்கு உருவாக்கினார்கள். அது அவருக்கு நன்றாக பொருந்தவே செய்தது. அவரும் அத்தனமையை ஓரளவுக்கு பெற்றவரென்றே நம்பும் சாத்தியங்களும் உருவாகின.
இவை எல்லாவற்றையும் தாண்டி காங்கிரஸ் கிட்டத்தட்ட காலாவதியான நிலையில்தான் ஒரு வருடம் முன் வரை இருந்ததை நாம் மறந்துவிடக் கூடாது. ராகுல் காந்தி மட்டும் அவ்வப்போது சரியாக பேசும்போது கூட ‘நல்லா வாழ்ந்த வீட்டுப் புள்ள’ என்கிற அளவில்தான் இந்திய மக்களின் கனிவு அவரின்பால் இருந்தது. மற்றபடி அக்கட்சி கோஷ்டி பூசலில் ததும்பிக் கொண்டிருந்தது. தமிழ்நாட்டின் சத்யமூர்த்தி பவனின் நிலை சொல்லவே வேண்டாம்.
ஆனாலும் ஒரு முக்கியமான மாற்றம் நேர்ந்தது. காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவிக்கு எல்லா பக்கங்களிலிருந்தும் பல முதலைகள் முட்டிக் கொண்டிருந்தபோது மல்லிகார்ஜுன கார்கே தலைவரானார். அதுதான் காங்கிரஸ் கட்சியின் முக்கியமான மாற்றம். உயர்சாதி மற்றும் உயர்வர்க்க கோணங்களிலிருந்து மட்டுமே சமூகத்தைப் பார்த்துக் கொண்டிருந்த கட்சியின் பார்வை தலைகீழாக மாறும் தன்மை ஏற்பட்டது.
கட்சியில் மாற்றம் என்பது வெறும் பெயரளவு மாற்றமாக இன்றி, கட்சித் திட்டமே கார்கே வந்த பிறகு மாறுதலுக்குள்ளானது. காங்கிரஸ் கட்சி பொறுப்புகளில் தலித் மற்றும் பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீடு கொண்டு வரப்பட்டது. இந்த இட ஒதுக்கீட்டை கேட்டு, அது மறுக்கப்பட்டதால்தான் பெரியார் காங்கிரஸை விட்டு வெளியேறினார் என்பது குறிப்பிடத்தக்கது. கர்நாடக தேர்தல் வாக்குறுதியில் கூட உச்சநீதிமன்றத்தின் இட ஒதுக்கீடு வரம்பான 50% என்பது 75% உயர்த்தப்பட சட்டதிருத்தம் கொண்டு வரும் உறுதியும் இருந்தது.
இன்னொரு முக்கியமான காரணம் தேர்தல் உத்திகள்.
கர்நாடகாவின் சமூகம், அரசியல் பிரக்ஞை முதலியவற்றையும் இந்திய அரசியலுக்கான தேவையையும் உள்ளடக்கும் தேர்தல் உத்திகள், சசிகாந்த் செந்தில் போன்ற இந்திய நிர்வாக அனுபவம் பெற்றவர்களால் வடிவமைக்கப்பட்டு முன்னெடுக்கப்பட்டன. கட்சியின் கொழுத்த முதலைகளின் முட்டுக்கட்டைகள் அம்முயற்சிகளை பாதிக்காத வண்ணம் தடுக்கப்பட்டன.
மேலும் கர்நாடகாவில் பாஜக மூட்ட முயற்சித்த மதவாத நெருப்பும் கர்நாடகாவின் anti incumbency மட்டுமின்றி மொத்த இந்தியாவின் anti incumbency-யும் சேர்ந்து இந்த முக்கியமான வெற்றியை காங்கிரஸுக்கு வழங்கியிருக்கிறது.
Crony Capitalism-மை எதிர்த்து, இந்தி ஆதிக்கத்தை மறுத்து, மதவாதத்தை புறக்கணித்து ஆட்சிக்கு வருபவர்கள் முன்பு அவை எல்லாவற்றின் பக்கமும் இருந்தவர்கள் என்பதையும் மறந்து விட வேண்டியதில்லை. இப்போதும் கூட கூட்டாட்சியை வலியுறுத்திக் கொண்டே மேகதாது அணை கட்டப்படுமென்றும் வாக்குறுதி கொடுத்திருக்கிறார்கள்.
பாஜகவுக்கு இது எப்படி பெரும் பாடமோ அதே போல காங்கிரஸுக்கும் பெரும் பாடம்தான்.
தில்லியிலிருந்தோ உபியிலிருந்தோ இந்தியாவை பார்க்காமல் இனியேனும் காங்கிரஸ் தெற்கிலிருந்து இந்தியாவை அணுகட்டும்.
பாடத்தை காங்கிரஸ் கற்றுக் கொண்டிருக்கும் என நம்புவோமாக!
RAJASANGEETHAN