குலசாமி – விமர்சனம்

நடிப்பு: விமல், தான்யா ஹோப், கீர்த்தனா,  திருநாவுக்கரசு,  ஜனனி பாலு, வினோதினி, போஸ் வெங்கட், முத்துப்பாண்டி, லாவண்யா, சூர்யா, ஓய்வு பெற்ற டிஜிபி ஜாங்கிட் (சிறப்பு தோற்றம்) மற்றும் பலர்

 இயக்கம் – ‘குட்டிப்புலி’ ஷரவண ஷக்தி

 ஒளிப்பதிவு  – ‘Wide angle’ ரவி ஷங்கர்

 படத் தொகுப்பு – கோபி கிருஷ்ணன்

 இசை – வி.எம்.மகாலிங்கம்

 பத்திரிகை தொடர்பு – தியாகு

பாலியல் வன்கொடுமையில் ஈடுபடும் குற்றவாளிகளுக்கு இந்தியாவில் தற்போது வழங்கப்படும் சிறை தண்டனையெல்லாம் போதாது; அவர்களைக் கொடூரமாக சித்ரவதை செய்து கொலை செய்ய வேண்டும் என்ற கருத்தைக் கூற வந்திருக்கிறது ‘குலசாமி’ திரைப்படம்.

தங்கையின் படிப்புக்காக ஊரைவிட்டு மதுரைக்கு வந்து ஆட்டோ ஓட்டி வருகிறார் சூரசங்கு (விமல்). இவரின் தங்கை மருத்துவக் கல்லூரி மாணவி கலை (கீர்த்தனா). இவர் கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும்போதே பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்படுகிறார். தங்கையின் விருப்பப்படியே அவரது உடலை அதே மருத்துவக் கல்லூரிக்கு தானம் செய்கிறார் அண்ணன். ஆனாலும் தினமும் மதியம் 1 மணிக்கு அந்தக் கல்லூரியின் சவக்கிடங்கிற்கு வந்து தனது தங்கையைப் பார்த்துவிட்டுப் போவார் சூரசங்கு.

இந்த நேரத்தில் அதே கல்லூரியில் மீண்டும் ஒரு பாலியல் கொலை சம்பவம் நடைபெறுகிறது. இந்த முறை இந்தக் கொலையில் சம்பந்தப்பட்ட நபர் கோர்ட்டிலேயே படுகொலை செய்யப்படுகிறார்.

இந்தக் கொலையை செய்தது சூரசங்குதான் என்று நினைத்து போலீஸ் அவரைக் கைது செய்து கோர்ட்டில் நிறுத்துகிறது. ஆனால், போதிய ஆதாரங்கள் இல்லாததால் நீதிமன்றம் அவரை நிரபராதி என விடுதலை செய்கிறது. இதைத் தொடர்ந்து, மேலும் சில பாலியல் கொலைகள் நடக்கின்றன. இதன் தொடர்ச்சியாய் இந்தக் கொலைகளை செய்த குற்றவாளிகளும் வரிசையாக, கொடூரமாகக் கொலை செய்யப்படுகிறார்கள்.

இந்தக் கொலைகளையெல்லாம் செய்வது யார்..? அந்தக் கொலையாளிக்கும் சூரசங்குவிற்கும் உள்ள தொடர்பு என்ன..? சூரசங்குவின் தங்கையைக் கொன்றது யார்..? போன்ற கேள்விகளுக்கு விடைதான் இந்த ‘குலசாமி’ திரைப்படம்.

இதுவரையிலும் விமலை காமெடி நாயகன் வேடத்திலேயே பார்த்த ரசிகர்களுக்கு இந்தப் படத்தில் வேறுவிதமாக தோன்றுகிறார். கொஞ்சம் கூடுதலாக உடம்பைக் கூட்டி, மீசையை முறுக்கி, தாடியை வளர்த்து ஆள் லேசாக மாறிய தோற்றத்தில் நடித்திருக்கிறார் விமல். மது குடித்துக் கொண்டேயிருப்பது.. தங்கையின் மீது பாசத்தைக் கொட்டுவது.. மற்றைய பெண்களிடம் நல்லவனாக நடந்து கொள்வது.. பாசம் மிகுதியாகி கதறி அழுவது.. பழி வாங்கும் குணத்தை மறைத்துக் கொண்டு நல்லவனாக காட்டிக் கொள்வது.. என்று பல்வேறு வகையான நடிப்பினையும் காட்டியிருக்கிறார் விமல்.

நாயகி தன்யா ஹோப்பிற்கு பெரிய அளவுக்கு ஸ்கோப் இல்லை. ஆனால் கதையை நகர்த்துவதற்கு இவரும் பெரிதும் உதவியிருக்கிறார். விமலைக் காதலிப்பது, “குடிக்காதே” என்று அட்வைஸ் செய்து அவரைத் திருத்துவது, விமலுக்கு தைரியம் கொடுத்து ஊக்கப்படுத்துவது.. கிளைமாக்ஸில் வில்லனிடம் மாட்டிக் கொண்டு நாயகனால் காப்பாற்றப்படுவது என்று வழக்கமான நாயகிக்கான சடங்கையே இந்தப் படத்திலும் செய்திருக்கிறார் தன்யா ஹோப்.

அருப்புக்கோட்டை பேராசிரியை நிர்மலா தேவியை நினைவூட்டும் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் வினோதினிதான் படத்தில் பேசப்பட்டிருக்கும் கலைஞர். நல்லவரா, கெட்டவரா என்பதை யூகிக்கவே முடியாத வகையில் இருக்கிறது இவரது நடிப்பு. பாராட்டுக்கள்.

விமலின் தங்கையாக நடித்திருக்கும் கீர்த்தனாவும், கல்லூரி மாணவியாக வரும் லாவண்யா மாணிக்கமும் பரிதாபமாக உயிரைவிட்டாலும் சிறப்பான கவனத்தை ஈர்க்கும்வகையில் நடித்திருக்கிறார்கள்.

போஸ் வெங்கட், கொடூர வில்லன்களில் ஒருவராக நடித்திருக்கும் இயக்குநரின் மகன் சூர்யா, வில்லனாக நடித்திருக்கும் ஜனனி பாலு, கூட இருந்தே குழி பறிக்கும் சப் இன்ஸ்பெக்டர் என்று மற்றவர்களும் இயக்குநர் சொல்லிக் கொடுத்தது போலவே நடித்திருக்கிறார்கள்.

ஒளிப்பதிவாளர் ‘வைட் ஆங்கிள்’ ரவியின் ஒளிப்பதிவில் குறையுமில்லை. மிகையுமில்லை. புதுமுக இசையமைப்பாளரான வி.எம்.மகாலிங்கத்தின் பாடல்களின் இசையும், பின்னணியிசையும் சுமார்தான். டைட்டில் பாடல் மட்டும் கவனம் பெறுகிறது.

பொள்ளாச்சி பாலியல் கொடுமை, அருப்புக்கோட்டையில் கல்லூரி பேராசிரியை நிர்மலா தேவி மாணவிகளை பாலியல் தொழிலுக்கு அழைத்தது என்ற இந்த இரண்டு நிஜக் கதைகளை வைத்துதான் மொத்தப் படத்தையும் எடுத்திருக்கிறார் இயக்குநர். ஆனால், இதில் சுவாரஸ்யமே இல்லை என்பதுதான் உண்மை. பாலியல் வன்கொடுமை காட்சிகளைக் காட்சிப்படுத்திய விதமும், அந்தக் குற்றவாளிகளுக்குக் கொடுக்கும் தண்டனையும் வக்கிரத்தின் உச்சமாக இருப்பதால் ரசிக்க முடியவில்லை.

’குலசாமி’ – ஒருமுறை பார்க்கலாம்!