‘பிச்சைக்காரன் 2’ மே 19 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது
விஜய் ஆண்டனியின் ‘பிச்சைக்காரன் 2 – ஆன்டி பிகிலி’ டிரெய்லர் ஏப்ரல்29, 2023 அன்று வெளியாகி குறுகிய காலத்தில் 3 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளைப் பெற்றதன் மூலம் ரசிகர்களிடையே அமோக வரவேற்பைப் பெற்றுள்ளது. ஸ்டைலான காட்சிகள், நேர்த்தியான எடிட்டிங், ‘பிச்சைக்காரன்’ படத்திற்கான சிக்னேச்சர் இசை மற்றும் எல்லாவற்றிற்கும் மேலாக, விஜய் ஆண்டனியின் பிரமிக்க வைக்கும் திரை பிரசன்ஸ் உட்பட எண்ணற்ற அற்புதமான ஃப்ளாஷ் பாயிண்ட்களை டிரெய்லர் கொண்டுள்ளது. அனைத்து மொழிகளிலும் வெளியாகி டிரெய்லர் 24 மணி நேரத்திற்குள் 7 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளைப் பெற்றுள்ளது.
மேலும், இப்படம் மே 19, 2023 அன்று உலகம் முழுவதும் வெளியாகும் என்று படக்குழு மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளது.
விஜய் ஆண்டனி ஃபிலிம் கார்ப்பரேஷன் சார்பில் பாத்திமா விஜய் ஆண்டனி தயாரித்துள்ள ‘பிச்சைக்காரன் 2- ஆன்டி பிகிலி’ படத்தை விஜய் ஆண்டனி இயக்கி, இசையமைத்து, படத்தொகுப்புப் பணிகளை மேற்கொண்டுள்ளார். இந்தப் படத்தில் விஜய் ஆண்டனி கதாநாயகனாக நடித்துள்ளார். காவ்யா தாப்பர், டத்தோ ராதா ரவி, ஒய் ஜீ மகேந்திரன், மன்சூர் அலி கான், ஹரீஷ் பெராடி, ஜான் விஜய், தேவ் கில், யோகி பாபு மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
சமீபத்தில் வெளியான ‘பிகிலி’ மற்றும் ‘கோயில் சிலையே’ பாடல்கள் அமோக வரவேற்பை பெற்றுள்ளது.
விஜய் ஆண்டனி ஃபிலிம் கார்ப்பரேஷனின் பாத்திமா விஜய் ஆண்டனி, தனித்துவமான கதைகள் மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களுடன் கூடிய படங்களை தொடர்ச்சியாகத் தயாரித்து, விமர்சகர்களின் பாராட்டுக்களைப் பெற்றதோடு, பாக்ஸ் ஆபிஸிலும் நல்ல வசூலை தந்துள்ளார். ‘பிச்சைக்காரன் 2’ படத்தின் மீது எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ள நிலையில், இப்படம் மிகப்பெரிய அளவில் பேசப்பட்டு வெற்றியைத் தரும் என்று வர்த்தக வட்டாரங்கள் ஏற்கனவே அறிவித்துள்ளன.
இதனிடையே, இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை பிரசாத் லேப் திரையரங்கில் நடைபெற்றது. இதில் படக்குழுவினர் கலந்து கொண்டனர். இந்நிகழ்வில் நடிகர் விஜய் ஆண்டனி பேசியதாவது:
நான் திரைப்பட இயக்குநர் ஆனது எதிர்பார்க்காத ஒன்று. இயக்குநராவேன் என நினைக்கவேயில்லை. இது ஒரு விபத்து தான் என்று கூற வேண்டும். இயக்குநர் சசியிடம் கேட்டேன். ஆனால், அவர் வேறு படத்தில் பிசியாகிவிட்டதால் நானே படத்தை இயக்க வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டேன்.
இந்தப் படத்திற்காக கடுமையாக உழைத்துள்ளோம். 5 மொழிகளில் படத்தை வெளியிடுகிறேன். இந்தி மொழியில் மட்டும் ஒரு வாரம் கழித்து வெளியாகும்.
மலேசியாவில் இந்தப் படத்தின் படப்பிடிப்பின்போது எனக்கு விபத்து ஏற்பட்டது. வழக்கமான ஆக்ஷன் காட்சிகளில்தான் விபத்து ஏற்படும். ஆனால் எனக்கு லவ் சீக்வன்ஸில் விபத்து ஏற்பட்டுள்ளது. லவ் சாங் ஒன்றில் நாயகியுடன் போட்டில் சென்றுகொண்டிருந்தேன். அப்போது நான் சென்ற போட் கேமராமேனின் போட்டின் விளிம்பில் மோதி என் மூக்கு, தாடை எல்லாம் உடைந்து நடுக்கடலில் மயக்கம் போட்டு விழுந்துவிட்டேன். எனக்கு சுயநினைவேயில்லை.
அப்போது நாயகியும், இன்னொருவரும் சேர்ந்துதான் என்னை காப்பாற்றினார்கள். மிகப்பெரிய சீரியசான விஷயத்தில் இருந்து வெளியில் வந்திருக்கிறேன். நான் மீண்டு வந்ததற்கு காரணம் அவர்கள் தான்.
ஐசியூவில் கண் முழித்து எழுந்து இரண்டாவது நாள் மருத்துவரிடம் சண்டைப்போட்டு லேப்டாப் வாங்கி வேலை செய்தேன். என்னை பார்க்க வந்தவர்களுக்கு நான் தைரியம் சொன்னேன். என் உடம்பில் நிறைய இடங்களில் ப்ளேட் வைத்துள்ளார்கள்.
மற்றபடி தற்போது நன்றாக இருக்கிறேன். சொல்லப்போனால் தற்போது மிகுந்த புத்துணர்ச்சியுடன் இருக்கிறேன். மனதளவில் பலமாக இருக்கிறேன். பயப்படும் அளவிற்கு ஒன்றுமில்லை. நன்றாக இருக்கிறேன். யாரும் கவலைப்பட வேண்டாம்” என்றார்.
தொழில்நுட்ப குழு:
லைன் புரொடியூசர்: சாண்ட்ரா ஜான்சன்,
நிர்வாக தயாரிப்பாளர்: நவீன்குமார்.டி,
ஒளிப்பதிவாளர்: ஓம் நாராயண் அசோசியேட்,
விளம்பர வடிவமைப்பாளர்: தானி ஏலே,
கலை இயக்குநர்: ஆறுசாமி,
ஸ்டைலிஸ்ட்: ஜி அனுஷா மீனாட்சி,
நடன இயக்குநர்கள்: அசார், ஹரி கிரண், கல்யாண்,
சண்டை பயிற்சி: ராஜசேகர், மகேஷ் மேத்யூ,
டிஜிட்டல் ஆலோசகர் : ஜி. பாலாஜி,
ரைட்டர்ஸ்: விஜய் ஆண்டனி, கே பழனி, பால் ஆண்டனி,
பாடலாசிரியர்: அருண் பாரதி,
வசனம்: கே பழனி,
மக்கள் தொடர்பு: சுரேஷ் சந்திரா, ரேகா டி’ஒன்