பொன்னியின் செல்வன் பாகம் 2 – விமர்சனம்
நடிப்பு: விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, விக்ரம் பிரபு, பிரகாஷ்ராஜ், சரத்குமார், பார்த்திபன், ரகுமான், கிஷோர், பிரபு, லால், ஜெயராம், ஐஸ்வர்யா ராய், திரிஷா, ஐஸ்வர்யா லட்சுமி, சோபிதா மற்றும் பலர்
இயக்கம்: மணிரத்னம்
ஒளிப்பதிவு: ரவி வர்மன்
படத்தொகுப்பு: ஸ்ரீகர் பிரசாத்
இசை: ஏ.ஆர்.ரஹ்மான்
கலை: தோட்டா தரணி
மூலக்கதை: கல்கி
தயாரிப்பு: ‘லைகா புரொடக்சன்ஸ்’ சுபாஸ்கரன்
அமரர் கல்கியின் பிரசித்தி பெற்ற ‘பொன்னியின் செல்வன்’ நாவலைத் தழுவி, மிகுந்த பொருட்செலவில் பிரமாண்ட திரைப்படமாக தயாரிக்கப்பட்டு, பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியிடப்பட்ட ‘பொன்னியின் செல்வன் பாகம் 1’, கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் வெளியாகி ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களின் அமோக வரவேற்பைப் பெற்றது. இந்த வெற்றி ‘பொன்னியின் செல்வன் பாகம் 2’ மீதும் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. இப்போது திரைக்கு வந்திருக்கும் ‘பொன்னியின் செல்வன் பாகம் 2’ அந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்கிறதா? பார்க்கலாம்…
’பொன்னியின் செல்வன் பாகம் 1’-ல், சோழப் பேரரசின் பட்டத்து இளவரசனான ஆதித்த கரிகாலன் (விக்ரம்), தங்களது ஆட்சிக்கு எதிராக சூழ்ச்சிகள் நடப்பது குறித்து ஒரு ரகசிய ஓலை எழுதி, அதை தனது தங்கையும் இளவரசியுமான குந்தவையிடம் (திரிஷாவிடம்) சேர்ப்பிக்குமாறு தன் நம்பிக்கைக்குரிய நண்பன் வந்தியத்தேவனிடம் (கார்த்தியிடம்) கொடுத்தனுப்புகிறான். வந்தியத்தேவன் வழி நெடுகிலும் பல்வேறு பிரச்சனைகள் மற்றும் எதிர்பாராத நிகழ்வுகளைச் சந்தித்து, அதன்பின் குந்தவையிடம் அந்த ஓலையை சேர்ப்பிக்கிறான்.
அதை பெற்றுக்கொள்ளும் குந்தவை, இன்னொரு ஓலையை வந்தியத்தேவனிடம் கொடுத்து, அதை இலங்கையில் இருக்கும் தனது தம்பி அருள்மொழி வர்மன் என்ற பொன்னியின் செல்வனிடம் (ஜெயம் ரவியிடம்) சேர்ப்பித்து, அவனை தஞ்சைக்கு அழைத்து வரவேண்டும் என கட்டளையிடுகிறாள்.
பல்வேறு இடர்பாடுகளுக்குப்பின் அருள்மொழிவர்மனை வந்தியத்தேவன் சந்தித்து, குந்தவை கொடுத்த ஓலையை ஒப்படைத்து, அவனை கப்பலில் அழைத்து வருகையில், அவர்களது எதிரிகளான பாண்டியர்கள் திடீர் தாக்குதல் நடத்துகிறார்கள். இந்த களேபரத்தில் அருண்மொழி வர்மன், வந்தியத்தேவன் ஆகிய இருவரும் ஆபத்தில் சிக்கி, கடலில் மூழ்குகிறார்கள். அவர்களை நோக்கி ஊமைராணி எனப்படும் மந்தாகினி (முதிய ஐஸ்வர்யா ராய்) நீந்திச் செல்கிறாள் என்பதோடு முதல் பாகம் முடிகிறது….
’பொன்னியின் செல்வன் பாகம் 2’-ல், அருள்மொழிவர்மன், வந்தியத்தேவன் ஆகிய இருவரும் கடலில் மூழ்கி இறந்துவிட்டதாக தகவல் வர தஞ்சை அதிர்ச்சி அடைந்து சோகமயமாகிறது.
மறுபுறம், ஊமைராணியால் காப்பாற்றப்பட்ட அருண்மொழி வர்மனும், வந்தியத்தேவனும் பாண்டியர்களிடமிருந்து தப்பித்து, மருத்துவ சிகிச்சைக்காக புத்த துறவிகளிடம் தஞ்சம் அடைகின்றனர். ஒரு கட்டத்தில், அவர்கள் உயிருடன் இருக்கும் செய்தி தஞ்சையை சென்றடைகிறது.
இந்நிலையில், தனது முன்னாள் காதலனும், பட்டத்து இளவரசனுமான ஆதித்த கரிகாலனைக் கொல்ல காத்திருக்கும் நந்தினி, அவனை கடம்பூர் அரண்மனைக்கு வரச்செய்கிறாள். நந்தினியாலும், பாண்டியர்களாலும் தான் கொல்லப்படும் அபாயம் இருப்பதை அறிந்திருந்தபோதிலும் கடம்பூர் அரண்மனைக்கு வருகிறான் ஆதித்த கரிகாலன்.
அங்கு என்ன நடந்தது? ஆதித்த கரிகாலனை நந்தினி தீர்த்துக் கட்டினாளா? அருண்மொழி வர்மன், வந்தியத்தேவன் ஆகிய இருவரையும் காப்பாற்றிய ஊமை ராணி யார்? அவளால் காப்பாற்றப்பட்ட அருண்மொழி வர்மனும், வந்தியத்தேவனும் அதன்பின் செய்யும் சாகசங்கள் என்ன? இறுதியில் மணிமகுடம் சூடியது யார்? என்பன போன்ற கேள்விகளுக்கு சுவாரஸ்யமாக விடை அளிக்கிறது ‘பொன்னியின் செல்வன் பாகம் 2’ திரைப்படத்தின் மீதிக்கதை.
பட்டத்து இளவரசன் ஆதித்த கரிகாலனாக வரும் விக்ரம் வீரத்தில் கம்பீரமும், காதலில் நெகிழ்வும் காட்டி சிறப்பாக நடித்திருக்கிறார். இந்த கதாபாத்திரத்துக்கு இவரைத் தவிர வேறு எந்த நடிகரும் பொருத்தமாக இருக்க மாட்டார் என்று எண்ணுமளவுக்கு அழுத்தமான நடிப்பை அற்புதமாக வெளிப்படுத்தியிருக்கிறார்.
நந்தினி என்ற கதாபாத்திரத்தில் இளமையாகவும், ஊமைராணி எனப்படும் மந்தாகினி என்ற கதாபாத்திரத்தில் முதுமைக்கோலத்திலும் வரும் ஐஸ்வர்யா ராய், இரண்டு வேடங்களிலும் பார்வையாளர்களின் மனதை கொள்ளை கொள்கிறார்.
அருண்மொழி வர்மன் என்ற பொன்னியின் செல்வனாக வரும் ஜெயம் ரவிக்கு, ’பொன்னியின் செல்வன் பாகம்1’-ஐ விட, இதில் நடிப்பதற்கு கூடுதல் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்டுள்ளார்.
வந்தியத்தேவனாக வரும் கார்த்தி முதல் பாகத்தைப் போல இதிலும் படத்துக்கு கூடுதல் பலம் சேர்க்கிறார்.
திரிஷா, விக்ரம் பிரபு, கிஷோர், பிரகாஷ்ராஜ், ஐஸ்வர்யா லட்சுமி, ஜெயராம், சோபிதா, பிரபு, சரத்குமார், பார்த்திபன், லால், ரகுமான் உள்ளிட்ட ஏனைய நடிப்புக் கலைஞர்கள் அனைவரும் தத்தமது கதாபாத்திரத்துக்கு தேவையான நடிப்பை வழங்கியிருக்கிறார்கள்.
’பொன்னியின் செல்வன் பாகம் 1’ போலவே ‘பொன்னியின் செல்வன் பாகம் 2’-ஐயும் விறுவிறுப்பாகவும், ரசிக்கும் விதமாகவும் சிறப்பாக இயக்கியிருக்கிறார் மணிரத்னம். ஒவ்வொரு காட்சியும் உயிரோவியம் போல உயிரோட்டத்துடன் இருப்பது பாராட்டுக்கு உரியது. குறிப்பாக, ஆதித்த கரிகாலன் – நந்தினி இடையிலான காதல் காட்சிகள், சின்னஞ்சிறு தீவில் வந்தியத்தேவனை குந்தவை சந்திக்கும் காட்சி, கடம்பூர் அரண்மனைக்கு வரும் ஆதித்த கரிகாலன் குதிரை மீது அமர்ந்தபடியே குத்தலாகப் பேசும் காட்சி, ஆதித்த கரிகாலனும் நந்தினியும் இறுதியாக சந்திக்கும் காட்சி… என மனம் கவரும் அற்புதக் காட்சிகளை அடுக்கிக்கொண்டே போகலாம். இயக்குனர் மணிரத்னத்தின் மாஸ்டர் பீஸ் ’பொன்னியின் செல்வன்’ என்பது காலகாலத்துக்கும் நிலைத்து நிற்கும்.
ரவி வர்மனின் ஒளிப்பதிவு, ஏ.ஆர்.ரஹ்மானின் இசை, ஸ்ரீகர் பிரசாத்தின் படத்தொகுப்பு, தோட்டா தரணியின் கலை இயக்கம் ஆகியவை படத்தின் வெற்றிக்கு உறுதுணையாக இருக்கின்றன.
‘பொன்னியின் செல்வன் பாகம் 2’ – சோழர் கால சோழ ராஜ்ஜியத்துக்கே நம்மை அழைத்துச் செல்கிறது. பரவசத்துடன் கண்டு களிக்கலாம்!