“பழந்தமிழர் வரலாற்றை ரத்தவெறி பிடித்த அதிகாரப் போட்டியாக நிறுத்துவது மட்டும் தான் ‘யாத்திசை’ படத்தின் நோக்கம்!”

யாருப்பா யாத்திசை சூப்பர்னு சொன்னது?

ஒரு வழியாய் படத்தை பார்த்தோம். பாண்டியப் பேரரசை வென்று தன்னாட்சி மலர்த்திட முயலும் எயினர் சிறுகுடி போராட்டம்தான் கதை என சொல்லி விடலாம்.

தன்னாட்சி, பேரரசு என்றெல்லாம் சொல்வதாலேயே இப்படம் உங்களுக்கு ஈழத்தை நினைவுபடுத்தக் கூடும். கதையைக் கேள்விப்பட்டபோதே எனக்கு நினைவுக்கு வந்தது ஈழப்போரும் அதன் முடிவும்தான்.

செல்வராகவனின் ‘ஆயிரத்தில் ஒருவன்’ ஈழப்போரை உருவகப்படுத்திய முக்கியமான படம். ஈழப்போரின் வலி ஏற்பட்டிருந்த சமயத்தில் வெளியான படம் அது. கதையாக வழக்கமான ‘Indiana Jones’ கதையாக தொடங்கப்பட்டு, ஈழப்போர் ஏற்படுத்திய தாக்கத்தில், கதையை அந்தப் பக்கத்துக்கு திருப்பி உருவகித்திருப்பார் செல்வராகவன்.

ரீமா சென்னின் துரோகம், அவருடனான ராணுவம், புலி சின்னம், இறுதியில் மக்கள் அகதிகளாக்கப்பட்டு, ராணுவம் அவர்களின் மனித உரிமைகளை போட்டு நசுக்கி, இறுதியில் தலைவன் தன்னுயிரை ஈவது வரை படத்தின் இரண்டாம் பாதி, ஈழப் போர் அளித்திருந்த கையறுநிலையின் கேவலாக இருந்தது.

இதிலும் பேரரசை எதிர்க்கும் சிறு குழுவென ஒரு கூட்டம் வருகிறது. இயக்குநர் கதை தொடங்கும்போதே ‘தன்னாட்சிக்கான இவர்களின் போரும் பொது உயிர்களை காவு வாங்கப் போகிறது’ என தன் நிலைப்பாட்டை தெளிவாக அறிவித்து விடுகிறார். ‘யாத்திசை’ என்றால் தென்திசை என அர்த்தமாம். இயக்குநரை பொறுத்தவரை எப்போதும் தென்திசை சண்டைக்காடாக இருக்கிறதாம். அதிகாரப் போட்டி மட்டும்தான் இங்கிருந்த ஒரே வரலாற்றுச் சூழலாம்.

போகட்டும்.

படத்தில் வரலாறு, காலம் யாவும் மாறுகிறது, ஆயினும் புனைவு என எடுத்துக் கொள்ளலாம். ஆனால் ஆக்கத்துக்காக என அவர் எடுத்திருக்கும் பல விஷயங்கள் எந்த ஆய்வுக்குள்ளும் செல்லாமல் நேரடியாக பிற உலகப் படங்களிலிருந்து தூக்கப்பட்டவைதாம்.

உடை, சண்டைக்காட்சி, நிலப்பரப்பு போன்றவற்றை நீங்கள் குறைந்தபட்சம் 300, Apocalypto போன்ற படங்களில் பார்த்திருக்கலாம். Ertugrul தொடரை பார்த்து உருப்படியாக inspire ஆகாமல், காட்சிகளை லவட்டியிருக்கிறார்கள். இசையமைப்பாளர் கோபமாகி ‘நானும் எடுக்கிறேன் பார்’ என Ertugrul தொடரில் வரும் Noyan பாத்திரத்துக்கான இசையை எடுத்து கையாண்டிருக்கிறார்.

பாண்டிய மன்னன் ஒரு பதினைந்து பேருடன் காட்டுக்குள் walking வந்து சிக்குவதெல்லாம் லோகமகா நகைச்சுவையாக்கும். அந்த சண்டையிலும் அவர்களின் ஒரே உத்தி, Gladiator படத்தில் கேடயங்களை தங்கள் தலைகள் மீது கவிழ்த்து அம்புகளிலிருந்து காத்துக் கொள்வதுதான். Budget Friendly-யாக Gladiator-ல் இன்னும் சில உத்திகள் காண்பிக்கப்பட்டிருந்தால் ரணதீரனின் போர்த்தொழிலை இன்னும் அற்புதமாக பார்த்திருக்கலாம் போலிருக்கிறது.

பிரதானமாக படத்தில் இரு சண்டைக் காட்சிகள். மிச்ச படம் அந்த சண்டைகளுக்கு தயாராவது மட்டும்தான். வீழ்ச்சி, கோபம், தயக்கம், பதற்றம், குற்றவுணர்வு, பொறாமை என பாத்திரங்களின் உணர்வுகளிலிருந்து கதைக்களம் செலுத்தப்படாமல், கதைக்களம் தீர்மானிக்கப்பட்டு பாத்திரங்கள் அதை நோக்கி செலுத்தப்படுகின்றன. எனவே அவை உணர்வற்று இருக்கின்றன.

‘சார்.. ஏன் நீங்க கத்திக்கிட்டே இருக்கீங்க’ என ஏதேனும் ஒரு பாத்திரத்திடம் கேட்டால், அப்பாத்திரத்தின் பதில், ‘தெரியல சார். டைரக்டர் கத்த சொன்னார், அதான் கத்துனேன், ‘ என்பதாகவே இருக்கும்.

படத்தின் முக்கியமான பிரச்சினை, அதன் அரசியலற்றதன்மை. லிபரல்வாத அரசியல் என சொல்லலாம்.

‘அந்நியன்’ படத்தில் அம்பி கதாபாத்திரம் சொல்லுமே ‘லோகத்துல எல்லாரும் கெட்டவாளா இருக்கா…’ என, அதுபோல இயக்குநர் உலகிலுள்ள எல்லா பிரச்சினைகளையும் ‘அதிகாரம்’ என்கிற வார்த்தைக்குள் சுருக்குகிறார். ஒடுக்கப்படுபவர் மீதான ஆதிக்க சாதியின் தாக்குதலை ‘இரு பிரிவினருக்கு இடையே மோதல்’ என செய்தி வாசிப்பதை போன்ற தட்டையான அரசியல் புரிதலை கொண்டிருக்கிறார் இயக்குநர்.

தன்னாட்சி விரும்பும் தொல்குடி போராட்டத்தையும் பாண்டிய பேரரசின் போரையும் அதிகார வெறியினால் ஏற்படுவதாக தீர்மானிக்கிறார் இயக்குநர். அதற்கேற்ப ‘நிலம், மண், உரிமை என்றெல்லாம், அதிகாரம் துய்க்கும் போர்களுக்கு பெயர் சூட்டப்படுகின்றன’ என ஒரு மாட்டுமூளை வசனம் வேறு.

மக்களுக்கான அதிகாரம் இருக்கிறது. பாட்டாளிகளுக்கான அதிகாரம் இருக்கிறது. முதலாளிகளுக்கான அதிகாரம் இருக்கிறது. சாதிகளுக்கான அதிகாரம் இருக்கிறது. பேரின அதிகாரம் இருக்கிறது. வருண அதிகாரம் இருக்கிறது. இவை எல்லாவற்றுக்கும் தனித்தனியே ஓர் அரசியல் இருக்கிறது. அந்த அரசியலுக்கென சித்தாந்தங்கள் இருக்கின்றன. எல்லாவற்றையும் ஒன்றாக கட்டி தூக்கி பரண் மேல் போடுவது, ‘அரசியலே சாக்கடை’ என்பதற்கு ஒப்பு.

இயக்குநருக்கு தெற்கு மீதும் அபிமானம் இல்லை. தமிழ் மீதும் அபிமானம் இல்லை. பேரரசு மீதும் அபிமானம் இல்லை. தேசிய இன உரிமை மீதும் அபிமானம் இல்லை. பேரரசால் ஒடுக்கப்படும் தொல்குடியின் உரிமை மீதும் அபிமானம் இல்லை.

முக்கியமாக படத்தில் கத்திக் கொண்டே இருக்கிறார்கள். போராடுபவர்கள் அல்லது போரிடுபவர்கள் அல்லது தொல்குடிகள் கத்திக் கொண்டே இருப்பார்கள் என்பது அப்பட்டமான மேற்கத்திய லிபரல்வாத பார்வை. சமூகவியல் பார்வையற்றவரின் பார்வை.

உச்சக்கட்டமாக, எல்லா பெண்களும் வர்க்க பேதமற்று பொத்தாம்பொதுவாக எல்லா ஆடவர்களின் அதிகாரத்துக்கான களம்தான் என முடிக்கும்போது ‘வா அருணாசலம்.. இங்கதான் நீ வருவன்னு தெரியும்’ என்கிற மைண்ட் வாய்ஸ் நமக்குள் கேட்பதை தவிர்க்க முடியவில்லை.

50 மதிப்பெண் கொடுத்திருக்கும் விகடனின் விமர்சனம், ‘தாய்நிலத்தை மீட்டல், உரிமைக்கான வேட்கை, இனத்தின் விடுதலை என எந்தப் பெயரில் நிகழ்த்தப்பட்டாலும் எல்லாப் போர்களும் அதிகாரத்தை நோக்கியவையே’ எனத் தொடங்குகிறது. உடனே நாம் ஈழத்தை இங்கு பொருத்தி பார்த்து விடுவதால், மனங்களுக்குள் கொட்டப்பட்டிருக்கும் குப்பைகளின் விளைவாக ஏற்கும் நிலைக்கு தள்ளப்படுகிறோம். ஆனால் இந்த ஒற்றை வரியைதான் இயக்குநர் பாலஸ்தீனப் போராட்டத்துக்கும் அளித்திருக்கிறார் என பொருத்தி பார்க்கும்போதுதான் படத்தின் பேரபத்தம் முகத்தில் அறையும்.

எல்லாவற்றையும் தாண்டி இப்படத்தை கொண்டாட ‘குறைந்த செலவில் சிறப்பாக எடுக்கப்பட்டது’தான் காரணம் என்றால் Ertugrul தொடரை காணுங்கள். ஒரு தொடருக்கான credits-ல் பேராசிரியர்கள் குறிப்பிடப்பட்டதை பார்த்தது அத்தொடரில்தான். குறைவான பட்ஜெட், குறைவான லொகேஷன் என படமாக்கப்பட்டாலும் சுவாரஸ்யத்தையும் வரலாற்றுச் செறிவையும் எப்படி கொடுக்க முடியும் என்பதற்கு அத்தொடர் ஒரு சான்று.

மொத்தத்தில் பழந்தமிழர் வரலாற்றை ரத்தவெறி பிடித்த அதிகாரப் போட்டியாக நிறுத்துவது மட்டும்தான் ‘யாத்திசை’ படத்தின் நோக்கமாக இருக்கிறது. யாத்திசை கொண்ட காலத்துக்கும் முன்னிருந்த தமிழர் வாழ்க்கையும் பண்பாடும் கீழடியில் மேலெழுந்து வரும் இச்சூழலில், வீம்பாக இப்படியொரு படத்தை இயக்குநர் எடுப்பதற்கான காரணத்தை புரிந்து கொள்ள முடிகிறது.

படத்துக்கு இரண்டாம் பாகம் வேறு இருக்கிறதாம். அதற்குள் இயக்குநரை ஓர் அறைக்குள் கட்டிப் போட்டு ‘வேள்பாரி’ நாவலை படிக்க வைத்து யாரேனும் உதவினால் தமிழ்ச்சமூகம் பிழைக்கும்.

RAJASANGEETHAN