இரும்பன் – விமர்சனம்

நடிப்பு: ஜுனியர் எம்.ஜி.ஆர், யோகிபாபு, ஐஸ்வர்யா தத்தா, ஷாஜி சௌத்ரி, செண்ட்ராயன், ரக்‌ஷிதா, அஸ்வினி, மணிமாறன், சம்பத்ராம், கயல் தேவராஜ் மற்றும் பலர்

இயக்கம்: கீரா

ஒளிப்பதிவு: லெனின் பாலாஜி

படத்தொகுப்பு: எஸ்.பி.அகமது

இசை: ஸ்ரீகாந்த் தேவா

தயாரிப்பு: ‘லெமூரியா மூவிஸ்’ தமிழ் பாலா & ஆர்.வினோத்குமார்

பத்திரிகை தொடர்பு: சதீஷ் – சிவா (டீம் எய்ம்)

படத்தின் ஆரம்பத்தில், நரிக்குறவர் எனப்படுவோர் யார்? அவர்களது பூர்விகம் எது? வெளிமாநிலங்களில் அவர்கள் என்னென்ன பெயர்களில் அழைக்கப்படுகிறார்கள்? அவர்களது வாழ்க்கை முறை மற்றும் திருமண வழக்கங்கள் எப்படிப்பட்டவை என்பன போன்ற மானிடவியல் ஆய்வுத் தகவல்களைத் திரட்டி, நல்ல ஆவணப்படம் போல் சித்தரித்திருப்பது பார்வையாளர்களை ஆச்சரியத்துடன் நிமிர்ந்து உட்கார வைக்கிறது. இப்படியொரு நம்பிக்கையை ஏற்படுத்திய பின்னர் தான் படக்கதை துவங்குகிறது.

சாலையோரம் குடிசையில் வசிக்கும் நரிக்குறவர் குடும்பத்து இளைஞனுக்கு, செல்வச் செழிப்பான ஜெயின் குடும்பத்து இளம்பெண் மீது காதல் வந்தால் என்ன நடக்கும் என்ற கற்பனை தான் இப்படத்தின் கதைக்கரு.

அந்த நரிக்குறவர் குடும்பத்து இளைஞன் – நாயகன் ஜுனியர் எம்.ஜி.ஆர்; அந்த ஜெயின் குடும்பத்து இளம்பெண் – நாயகி ஐஸ்வர்யா தத்தா.

ஜுனியர் எம்.ஜி.ஆருக்கு முதல் பார்வையிலேயே ஐஸ்வர்யா தத்தா மீது ஒருதலையாய் காதல் வந்துவிடுகிறது. அது தெரியாத ஐஸ்வர்யா தத்தா, அவரிடம் நட்பாகப் பழகுகிறார். மறுபுறம், ஐஸ்வர்யா தத்தா திருமணம் செய்துகொள்ளாமல் ஜெயின் துறவியாகிவிட்டால், அவரது குடும்பச் சொத்து முழுவதும் தனக்கு வந்துவிடும் என கணக்குப் போடும் ஐஸ்வர்யா தத்தாவின் அக்கா கணவர் (ஷாஜி சௌத்ரி), அதற்கேற்ப அவரை மறைமுகமாக மோட்டிவேட் பண்ணுகிறார். இதற்கு இணங்கும் ஐஸ்வர்யா தத்தா துறவி ஆவதற்காக ஜெயின் மடத்தில் சேர்ந்துவிடுகிறார். ஆனால் அவரை மணந்தே தீருவது என்று வைராக்கியம் கொள்ளும் ஜுனியர் எம்.ஜி.ஆர், தனது நண்பர்களான யோகிபாபு, செண்ட்ராயன் உள்ளிட்டோருடன் சேர்ந்து அவரை கடத்தி, படகில் நடுக்கடலுக்குள் கொண்டு சென்றுவிடுகிறார். அதன்பின் என்ன நடந்தது? ஜுனியர் எம்.ஜி.ஆரின் காதல் கைகூடியதா? அல்லது துறவி ஆகும் ஐஸ்வர்யா தத்தாவின் எண்ணம் நிறைவேறியதா? என்பது ‘இரும்பன்’ திரைப்படத்தின் மீதிக்கதை.

நரிக்குறவர் குடும்பத்து இளைஞனாக நடித்திருக்கும் அறிமுக நாயகன் ஜுனியர் எம்.ஜி.ஆர், ’இரும்பன்’ என்ற சொல்லுக்குப் பொருத்தமாக கட்டுமஸ்தான உடம்புடன், ஆஜானுபாகுவான தோற்றத்துடன் மிளிர்கிறார். காதல், நடனம், நகைச்சுவை, ஆக்சன், செண்டிமெண்ட் என அனைத்து அம்சங்களிலும் தனது திறமையை நிரூபிக்க கடுமையாக உழைத்திருக்கிறார். இன்னும் கொஞ்சம் நடிப்புப்பயிற்சி எடுத்துக்கொண்டு, தனக்கு பொருத்தமான கதாபாத்திரங்களைத் தேர்ந்தெடுத்து நடித்தால் தமிழ்த்திரையுலகில் தனக்கென்று ஓரிடத்தைப் பெற்றுவிடலாம்.

ஜெயின் குடும்பத்து இளம்பெண்ணாக நடித்திருக்கும் நாயகி ஐஸ்வர்யா தத்தா அளவான கவர்ச்சியுடன் நடித்து கவனம் ஈர்க்கிறார். யோகிபாபு மற்றும் செண்ட்ராயனின் நகைச்சுவைத் தூறல்கள் ஆங்காங்கே சிரிப்பை வரவழைக்கின்றன.

நாயகியின் அக்கா கணவராக வில்லன் கதாபாத்திரத்தில் வரும் ஷாஜி சௌத்ரி, போலீஸ் அதிகாரியாக வரும் சம்பத்ராம் உள்ளிட்ட ஏனைய அனைவரும் தத்தமது கதாபாத்திரத்துக்கு ஏற்ற நடிப்பை வழங்கியிருக்கிறார்கள்.

எழுதி இயக்கியிருக்கும் கீரா, நரிக்குறவர் சமூகத்துக்கோ, ஜெயின் சமூகத்துக்கோ களங்கம் ஏற்படுத்திவிடாமல் எச்சரிக்கையுடன் படத்தை நகர்த்திச் சென்றிருப்பது சிறப்பு. எனினும், திரைக்கதையில் தெரியும் அமெச்சூர்த்தனங்களை தவிர்க்க கொஞ்சம் மெனக்கெட்டிருந்தால் படம் ரசிப்புக்குரியதாக வந்திருக்கும்.

பாடல் காட்சிகளிலும், கடல் காட்சிகளிலும் லெனின் பாலாஜியின் ஒளிப்பதிவு அருமை. ஸ்ரீகாந்த் தேவாவின் இசையில் “ நாங்க புதுசா கட்டிக்கிட்ட ஜோடி” என்ற ரீமிக்ஸ் பாடல் துள்ளல் ரகம்.

’இரும்பன்’ – பார்க்கலாம்!