தக்ஸ் – விமர்சனம்
நடிப்பு: ஹிருது ஹாரூன், அனஸ்வரா ராஜா, பாபி சிம்ஹா, ஆர்.கே.சுரேஷ், முனீஷ்காந்த், பி.எல்.தேனப்பன் மற்றும் பலர்
இயக்கம்: பிருந்தா
ஒளிப்பதிவு: பிரியேஷ் குருசாமி
இசை: சாம்.சி.எஸ்
தயாரிப்பு: ரியா ஷிபு & மும்தாஸ்.எம்
பத்திரிகை தொடர்பு: சதீஷ் குமார் – சிவா (டீம் எய்ம்)
‘தக்ஸ்’ என்ற ஆங்கிலச் சொல்லுக்கு ’ரவுடிகள்’, ’குண்டர்கள்’ என்று பொருள். கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த சில ரவுடிகளின் கதை தான் இந்த ’தக்ஸ்’.
கதை கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் நிகழ்வதாகக் கட்டமைக்கப்பட்டுள்ளது. இங்கு மிகப் பெரிய தாதாவாக இருக்கிறார் அண்ணாச்சி (பி.எல்.தேனப்பன்). அவரிடம் கணக்கராக வேலை செய்கிறார் நாயகன் சேது (ஹிருது ஹாரூன்). அவர் வாய் பேச இயலாத நாயகியை (அனஸ்வரா ராஜாவை) காதலிக்கிறார். நாயகியை ஒரு சைக்கோ ரவுடி வம்பு செய்ய, அவனை நாயகன் சேது அடித்துத் துவைக்கிறார். இந்த சண்டையில் எதிர்பாராத விதமாக அந்த சைக்கோ ரவுடி உயிரிழக்க, நாயகன் சேது கைது செய்யப்பட்டு, ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு, நாகர்கோவில் சிறையில் அடைக்கப்படுகிறார்.
சிறையில் சேதுவுக்கு பிரபல ரவுடி துரை (பாபி சிம்ஹா) நட்பு கிடைக்கிறது.
வெளியில் தனக்காக காத்திருக்கும் தன் காதலியோடு சேர்ந்து வாழ்வதற்காக சிறையிலிருந்து தப்பியோட திட்டம் வகுக்கிறார் நாயகன் சேது. இந்த திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்துவதற்காக, தன்னைப் போல் ஆயுள் தண்டனை பெற்ற துரை, மருது (முனிஷ்காந்த்) உள்ளிட்ட சில கைதிகளையும் கூட்டு சேர்த்துக்கொள்கிறார். மிகவும் கண்டிப்பான சிறை அதிகாரியாக இருக்கும் ஆரோக்கிய தாஸ் (ஆர்.கே.சுரேஷ்) கண்ணில் மண்ணைத் தூவி இந்த கைதிகள் எப்படி தப்பிக்கிறார்கள் என்பது தான் ‘தக்ஸ்’ படத்தின் கதை.
நாயகன் சேதுவாக வரும் அறிமுக நடிகர் ஹிருது ஹாரூன் பார்ப்பதற்கு அழகாகவும், கதாபாத்திரத்துக்கு ஏற்ப மிரட்டலாகவும் இருக்கிறார். துடிப்பான செயல்பாடும், கூர்மையான கண்களும் அவருக்கு பெரிய பிளஸ். முதல் படம் என சொல்ல முடியாத அளவுக்கு அனுபவம் வாய்ந்த மாஸ் ஹீரோ போல நடனம், அடிதடி, காதல் என அனைத்திலும் முத்திரை பதித்திருக்கிறார்.
நாயகியாக வரும் அனஸ்வரா ராஜாவுக்கு வசனம் இல்லை என்றாலும், கண்களாலேயே பேசி, இளமை ததும்பும் அழகான நடிப்பில் அசத்தி, கவனம் பெறுகிறார்.
சக சிறைக்கைதி துரையாக வரும் பாபி சிம்ஹா, நாயகனுக்கு சிறந்த உறுதுணையாக இருந்து, கதை ஓட்டத்துக்கு உதவி இருக்கிறார். கண்டிப்பும் கோபமும் உள்ள சிறை அதிகாரி ஆரோக்கிய தாஸாக வரும் ஆர்.கே.சுரேஷ், வழக்கம் போல தனது ஆக்ரோஷமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். மருது என்ற இன்னொரு சிறைக்கைதியாக வரும் முனிஷ்காந்த் கொஞ்சம் நகைச்சுவையாகவும், கொஞ்சம் சீரியஸாகவும் நடித்து நல்ல பங்களிப்பை செய்திருக்கிறார். “சோத்துல கல் கிடக்குன்னு சொன்னேன்; அரிசி கழுவ விட்டுட்டாய்ங்க” என்பது போன்ற முனிஷ்காந்த்தின் அர்த்தமுள்ள நகைச்சுவை துணுக்குகள் ரசிக்கும்படியாக இருக்கின்றன.
டான்ஸ் மாஸ்டர் பிருந்தா இந்த படத்தை இயக்கியிருக்கிறார். கதையில் புதுமை இல்லாதபோதிலும், பார்வையாளர்களின் மூச்சு முட்டும் அளவுக்கு படம் முழுக்க அடிதடி ஆக்சனை விரவி விறுவிறுப்பைக் கூட்டி இருக்கிறார். அவரது மேக்கிங் பிரமாதம். திரைக்கதையை இன்னும் கொஞ்சம் செதுக்கியிருந்தால் மிகப் பெரிய வெற்றிப்பட இயக்குனர் என்ற பெயரை பிருந்தா தட்டிச் சென்றிருப்பார்.
பிரியேஷ் குருசாமியின் ஒளிப்பதிவு படத்திற்கு மிகப்பெரிய பலம் சேர்த்திருக்கிறது. சிறைச்சாலை காட்சிகள், சிறையில் இருந்து தப்பிக்கும் காட்சிகள் என அனைத்தையுமே மிக நேர்த்தியாக படமாக்கியிருக்கிறார்.
தரமான பின்னணி இசை மூலம் படம் விறுவிறுப்பாக நகர உதவியாக இருந்திருக்கிறார் இசையமைப்பாளர் சாம்.சி.எஸ்.
’தக்ஸ்’ – சிறந்த மேக்கிங்; கண்டு களிக்கலாம்!