காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவனை ஆதரித்து பரப்புரை தொடங்கினார் கமல்ஹாசன்
ஈரோடு கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதிக்கு வருகிற 27ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இத்தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணியில் இடம் பெற்றுள்ள காங்கிரஸ் சார்பில் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் போட்டியிடுகிறார்.
அவரை மக்கள் நீதி மய்யம் கட்சி நிபந்தனை இன்றி ஆதரிக்கும் என்று அக்கட்சியின் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் ஏற்கனவே அறிவித்துள்ளார்.
இந்நிலையில், ஈரோடு கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதிக்கு உட்பட்ட கருங்கல்பாளையம் பகுதியில், ஈவிகேஎஸ்.இளங்கோவனுக்கு ஆதரவாக கமல்ஹாசன் நேற்று (பிப்ரவரி 19) தனது பரப்புரையை திறந்த வேனில் தொடங்கினார்.
அப்போது பேசிய கமல்ஹாசன், “ஈவிகேஎஸ் இளங்கோவன் மட்டுமல்ல, நானும் பெரியாரின் பேரன் தான்” என்றார்.
மேலும், ஜனநாயகத்தின் வழியாகவும் சர்வாதிகாரம் ஆட்கொள்ள முடியும் என்பதற்கு பல சான்றுகள் உலகத்தில் உள்ளதாக கூறினார்.
சின்னம், கட்சி, கொடி என எல்லாவற்றையும் தாண்டியதே தேசம் என்றும், அந்த தேசத்தைக் காக்க அறத்துடன் கைகோர்த்துள்ளதாகவும் கூறினார்.
தான் அரசியலுக்கு வந்தது எவ்வித லாபத்திற்காகவோ ஆதாயத்திற்காகவோ இல்லை என்றும், இந்தியாவைப் பாதுகாக்கவே திமுக தலைமையிலான மதச்சார்பற்ற கூட்டணிக்கு ஆதரவு அளித்ததாகவும் கமல் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் ஈவிகேஎஸ் இளங்கோவனை வெற்றி பெற செய்ய வேண்டும் என்றும் பரப்புரை செய்தார்.