பதான் – விமர்சனம்
நடிப்பு: ஷாருக்கான், தீபிகா படுகோன், ஜான் ஆபிரகாம், அஷுதோஷ் ராணா, சல்மான்கான் (சிறப்பு தோற்றம்), டிம்பிள் கபாடியா மற்றும் பலர்
இயக்கம்: சித்தார்த் ஆனந்த்
ஒளிப்பதிவு: சச்சித் பவுலோஸ்
பாடலிசை: விஷால் – ஷேகர்
பின்னணி இசை: சஞ்சித் பல்ஹாரா – அங்கித் பல்ஹாரா
தயாரிப்பு: யாஷ்ராஜ் பிலிம்ஸ்
பத்திரிகை தொடர்பு: ரியாஸ் கே.அகமது
’பாலிவுட் பாட்ஷா’ என கொண்டாடப்படும் ஷாருக்கான் நடிப்பில், 2018ஆம் ஆண்டு வெளியான ‘ஜீரோ’ படத்துக்குப்பின், சுமார் 4 ஆண்டு இடைவெளிக்குப் பிறகு திரைக்கு வரும் படம் என்பதாலும், நாயகி தீபிகா படுகோன் படுசெக்ஸியாக காவி உடையில் தோன்றுவதால் சங்கித்துவவாதிகளின் எதிர்ப்பை சம்பாதித்திருக்கும் படம் என்பதாலும், ரிலீசுக்கு முன்பே மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள படம் இந்த ‘பதான்’.
இந்தியாவின் ரா உளவுப்பிரிவு அதிகாரியாக முன்னர் இருந்து, பின்னர் தேசத்துரோகியாக மாறிப்போன வில்லனுக்கும், இந்தியாவின் இன்னாள் ரா உளவுப்பிரிவு அதிகாரியாக இருக்கும் தேசபக்தி மிக்க நாயகனுக்கும் இடையிலான யுத்தம் என்பதுதான் இப்படத்தின் ஒருவரிக்கதை.
காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப் பிரிவு 370 ரத்து செய்யப்படுவதாக இந்திய ஒன்றிய அரசு அறிவிக்கிறது. இதனால், கோபமடையும் பாகிஸ்தான் ராணுவ அதிகாரி, இந்தியாவிற்கு பாடம் புகட்ட வேண்டும் என எண்ணி, இந்தியா மீது அதிருப்தியில் இருக்கும் இந்தியரான முன்னாள் ரா உளவுப்பிரிவு அதிகாரி ஜிம் (ஜான் ஆபிரகாம்) என்பவரை நாடுகிறார். ஜிம் ஒரு வைரஸ் மூலம் இந்தியாவைத் தாக்க திட்டம் தீட்டுகிறார். ஜிம்மின் பேரழிவுத் திட்டத்தை முறியடிக்க, மற்றொரு ரா உளவுப்பிரிவு அதிகாரியான பதானை (ஷாருக்கானை) நியமிக்கிறார் உயர் அதிகாரியான நந்தினி (டிம்பிள் கபாடியா). ஜிம்மை தடுக்க முயலும் பதானின் பாதையில் குறுக்கே வருகிறார் பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ ஏஜெண்டு (தீபிகா படுகோன்). சில பல ட்விஸ்ட்கள், ஆக்ஷன் பிளாக்குகளுக்குப் பிறகு, இந்தியாவுக்கு வரும் ஆபத்தைத் தடுத்து ஜிம்மை வீழ்த்துகிறார் பதான் என்பதுதான் படத்தின் கதை.
சுமார் 4 ஆண்டுகளாய் தன் நாயகனை திரையில் பார்க்க இயலாமல் இருந்த ஷாருக்கான் ரசிகர்களின் அடங்கா பசிக்கு செம தீனியாக வந்திருக்கிறது இந்த படம். நீண்ட தலைமுடி, சிக்ஸ் பேக் உடற்கட்டு, கதை பேசும் கண்கள், ஈர்க்கும் உடல்மொழி, அட்டகாசமான அதிரடி அவதாரம், எள்ளல் பேச்சு, துள்ளல் நடை, எதற்கும் அஞ்சாத துணிவு என ஷாருக்கானின் கதாபாத்திரம் வடிவமைக்கப்பட்ட விதம் சிறப்பு. குறிப்பாக, படம் முடிந்த பின்பு போஸ்ட் கிரேடிட் சீன் காட்சியில் ஷாருக்கானும், சல்மான்கானும் இணைந்து பேசும் வசனங்கள் திரையரங்கை தெறிக்கவிடுகின்றன.
வழக்கமான காதல் நாயகியாக இல்லாமல், படுகிளாமரான ஆக்ஷன் நாயகியாக களத்தில் அதகளப்படுத்தும் தீபிகா படுகோன் நடிப்பில் தனித்து தெரிகிறார். சண்டைக் காட்சிகளில் மிரட்டியிருக்கிறார். அவருக்கும் ஷாருக்கானுக்குமான கெமிஸ்ட்ரி பொருந்துகிறது.
உண்மையில், நாயகனுக்கு டஃப் கொடுக்கும் வில்லனாக வரும் ஜான் ஆபிரகாம், தேர்ந்த நடிப்பில் இன்னொரு நாயகனாக மிளிர்கிறார். அவர் இந்தியாவின் எதிரியாக மாறுவதற்கான காரணம் வலுவாகவே எழுதப்பட்டிருக்கிறது. அவர் மீதான நியாயத்தால் வில்லனாக அவரை கருத முடிவதில்லை.
சல்மான்கானின் சிறப்புத் தோற்றம் திரையங்கை அதிர வைக்கிறது. அவருக்காக எழுத்தப்பட்ட சீன் ‘மாஸ்’ ரகம். சல்மான்கான் வரும் காட்சி திணிப்பாக இல்லாமல் கதையின் ஓட்டத்திலேயே வந்து போவது ஆறுதல்.
டிம்பிள் கபாடியா பிசிறில்லாத நடிப்பில் கவனம் பெறுகிறார்.
முழுக்க முழுக்க ஆக்ஷனையும், மூன்று முக்கிய நடிகர்களையும், ‘மாஸ்’ தருணங்களையும் முதலீடாக்கி ‘பதான்’ படத்தை இயக்கியிருக்கிறார் இயக்குநர் சித்தார்த் ஆனந்த். அவை பார்வையாளர்களுக்கு கதையின் தேவையை மறக்கடித்து கடத்திச் செல்வது தான் மொத்த திரைக்கதையின் பலம்.
பார்த்துப் பழகிய 90களின் நாட்டுப்பற்று படங்களின் டிஜிட்டல் வெர்ஷன் கதைதான் என்றாலும், அதனை திரை ஆக்கம் செய்த விதம்தான் படத்தை தாங்கி நிறுத்துகிறது. அடுத்தடுத்து கோர்க்கப்பட்டிருக்கும் ‘சாகச’ சண்டைக்காட்சிகளும் அதற்கான பிரமாண்ட காட்சியமைப்பும் விறுவிறுப்பான படத்தொகுப்பும் சிறந்த காட்சியனுபவத்திற்கு உத்தரவாதம்.
பிரமாண்ட ஆக்ஷன் காட்சிகள் மூலமாக படத்தை என்கேஜிங்காக கொண்டு செல்ல முயன்றிருக்கும் இயக்குநருக்கான ஐடியாவுக்கு சச்சித் பவுலோஸின் ஒளிப்பதிவும், சஞ்சித் பல்ஹாரா, அங்கித் பல்ஹாராவின் பின்னணி இசையும் உருவம் கொடுத்து உயிரூட்டியிருக்கிறது. அதிலும் ஜான் ஆபிரகாமுக்கான ஸ்பெஷல் பிஜிஎம் ரசிக்க வைக்கிறது.
நாட்டுப்பற்று, காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து, பயோவார், சர்வதேச தீவிரவாதம் என பல்வேறு விஷயங்களைப் பேசும் திரைக்கதை தெளிவில்லாமல் சொல்ல வந்து கருத்தில் ஆழமில்லாமல் தடுமாறியிருக்கிறது.
‘பதான்’ – ஷாருக்கானின் ரசிகர்களுக்கான முழுநீள ஆக்சன் விருந்து!