ஓ மை கோஸ்ட் – விமர்சனம்
நடிப்பு: சன்னி லியோன், யோகி பாபு, சதீஷ், ரமேஷ் திலக், மொட்டை ராஜேந்திரன், தர்ஷா குப்தா, தங்கதுரை, பாலா மற்றும் பலர்
இயக்கம்: யுவன்
தயாரிப்பு: ‘வா மீடியா’ வீரசக்தி, சசிகுமார்
ஒளிப்பதிவு: தீபக் மேனன்
இசை: ஜாவித் ரியாஸ், தரண்
பத்திரிகை தொடர்பு: சுரேஷ் சந்திரா, ரேகா (டி ஒன்)
உலகப் பிரசித்தி பெற்ற நீலப்பட நட்சத்திரம் (’போர்ன் ஸ்டார்’) சன்னி லியோன் நடித்துள்ள தமிழ்ப்படம் என்ற பெருமைக்குரியது இந்த ‘ஓ மை கோஸ்ட்’. தலைப்பில் ‘கோஸ்ட்’ இருப்பதால், இது ஒரு பேய்ப்படம் என்பது சொல்லாமலே விளங்கும்.
அனகோண்டபுரம் என்ற பகுதியில் ஆண்களைத் துன்புறுத்தும் பெண்பேய் ஒன்று சுற்றித் திரிகிறது. அது ஏன் ஆண்களைத் துன்புறுத்துகிறது என்பதற்கு ஒரு ஃபிளாஷ்பேக்…
…மன்னராட்சிக் காலத்தில் அனகோண்டபுரம் பகுதியை சன்னி லியோன் அரசாட்சி செய்து வருகிறார். அவருடைய தந்தையின் செயல்பாட்டால் அவர் ஒட்டுமொத்த ஆண்களையும் வெறுக்கிறார். அதனால் அந்த ஊரில் இருக்கும் ஆண்களை, அரண்மனைக்கு அழைத்துவரச் செய்து, அவர்களை அடித்து துன்புறுத்துகிறார். இதனால் கோபம் கொள்ளும் ராஜகுருவான யோகி பாபு, சூழ்ச்சி செய்து, சன்னி லியோனை கொன்று விடுகிறார். பல ஆண்டுகள் கடந்தாலும், சன்னி லியோன் பேயாக வந்து அந்த ஊரில் வசிக்கும் ஆண்களை துன்புறுத்திக்கொண்டிருக்கிறார். இது தான் அந்த ஃபிளாஷ்பேக்.
சன்னி லியோன் என்னும் அரசப்பேயை கட்டுப்படுத்தி அடக்குவதற்கு நாயகன் சதீஷ் வந்தால் மட்டுமே முடியும் என்கிறான் மந்திரவாதி. நாயகன் சதீஷோ சென்னையில் பலான கதை-வசனம் எழுதிக்கொண்டு, நண்பன் ரமேஷ் திலக்குடன் சேர்ந்து பலான படம் எடுக்கும் முயற்சியில் இருக்கிறார்.
சென்னையிலிருக்கும் சதீஷ் அனகோண்டபுரத்துக்கு எப்படி போகிறார்? அவருக்கும் மன்னராட்சிகால சன்னி லியோனுக்கும் என்ன தொடர்பு? அவர் சன்னி லியோன் பேயை எப்படி கட்டுப்படுத்துகிறார்? என்பது ‘ஓ மை கோஸ்ட்’ படத்தின் மீதிக்கதை.
படத்தின் முதல் பாதியை, நாயகன் சதீஷ் பலான பட இயக்குனர் ஆவதற்கு முயற்சி செய்யும் காட்சிகள் ஆக்கிரமித்துக் கொண்டுள்ளன. இதில் சதீஷும், அவரது நண்பராக வரும் ரமேஷ் திலக்கும் அடல்ட் காமெடி பண்ணி சிரிக்க வைக்க முயலுகிறார்கள். சிரிப்பு தான் வரவில்லை.
சன்னி லியோன் சம்பந்தப்பட்ட காட்சிகள் இரண்டாவது பாதியில் இடம் பெற்றுள்ளன. இவை கிளாமர் கலந்த ஹாரராக வடிவமைக்கப்பட்டிருக்கின்றன. ஆனால், இந்த வினோத ஹாரர், பார்வையாளர்களைத் துளியளவுகூட பயமுறுத்துவதாக இல்லை.
’சிந்தனை செய்’ என்ற திரைப்படத்தை இயக்கிய யுவன், இந்த ’ஓ மை கோஸ்ட்’ படத்தை இயக்கியுள்ளார். சன்னி லியோனின் கால்ஷீட்டை வைத்துக்கொண்டு அடல்ட் காமெடி பாதை, கவர்ச்சியான கிளாமர் பாதை, அச்சமூட்டும் ஹாரர் பாதை ஆகிய மூன்று பாதைகளில் எந்த பாதையில் படத்தை நகர்த்திச் செல்வது என்று தெரியாமல் இயக்குனர் மோட்டுவளையைப் பார்த்துக்கொண்டிருந்தது படம் முழுக்க அப்பட்டமாகத் தெரிகிறது.
‘ஓ மை கோஸ்ட்’ – வேலைவெட்டி இல்லாமல் வீட்டில் சும்மா இருப்பவர்கள், உடை உடுத்திய சன்னி லியோன் என்ன தான் செய்திருக்கிறார் என தெரிந்துகொள்ள இந்த படத்தை ஒருமுறை பார்க்கலாம்!