உடன்பால் – விமர்சனம்

நடிப்பு: சார்லி, லிங்கா, அபர்னதி, தனம், தீனா, விவேக் பிரசன்னா, காயத்ரி, மற்றும் பலர்

இயக்கம்: கார்த்திக் சீனிவாசன்

ஒளிப்பதிவு: மதன் கிறிஸ்டோபர்

படத்தொகுப்பு: ஜி.மதன்

இசை: சக்தி பாலாஜி

தயாரிப்பு: ‘டி கம்பெனி’ கே.வி.துரை

ஓடிடி தளம்: ஆஹா தமிழ் ஒரிஜினல்

பத்திரிகை தொடர்பு: ‘டீம் எய்ம்’ சதீஷ் – சிவா

குடும்ப சகிதம் மட்டும் அல்ல, உற்றார் – உறவினர்கள் சகிதமும் கூடி அமர்ந்து பார்த்து சிரித்து மகிழவும், உணர்ச்சி மேலீட்டால் நெகிழ்ந்து ஒரு சொட்டு கண்ணீர் வடிக்கவும் தகுதியான சிறந்த ஓ.டி.டி படமாக வந்திருக்கிறது ‘உடன்பால்’.

இறந்த நபரின் இறுதிச் சடங்கின்போது, அவரது வாயில் உற்றார் – உறவினர்கள் அனைவரும் ஊற்றும் பாலுக்குப் பெயர் தான் ‘உடன்பால்’. இது தெரிந்துவிட்டால், இதையே தலைப்பாகக் கொண்ட படத்தில் என்னவெல்லாம் இருக்கும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டு, படத்தைப் பார்க்க வேண்டும் என்ற ஆவல் அதிகரிக்கும் என்பது நிச்சயம்.

மனைவியை இழந்தவர் வினாயகம் (சார்லி). அவருக்கு பரமன் (லிங்கா), பார்த்திபன் (தீனா) என்ற இரண்டு மகன்கள், கண்மணி (காயத்ரி) என்ற ஒரு மகள். மூத்த மகன் பரமன், மகள் கல்யாணி திருமணம் ஆனவர்கள். அவர்களுக்கு ஆளுக்கொரு வாரிசுகள்.

மூத்த மகன் பரமன், மருமகள் பிரேமா (அபர்னதி), பேரன் விகான் (தர்ஷித் சந்தோஷ்), அக்கா விசாலம் (தனம்) ஆகியோருடன் தனது சிறிய சொந்த வீட்டில் வசித்து வருகிறார் வினாயகம்.

வெளியூரிலிருந்து வினாயகத்தின் மகள் கண்மணி, மருமகன் முரளி (விவேக் பிரசன்னா), பேத்தி நிலா (மான்யஸ்ரீ) வந்திருக்க, காலமான வினாயகத்தின் மனைவிக்கு குடும்ப சகிதம் திதி கொடுக்கிறார்கள். அம்மாவுக்கு திதி கொடுக்கும் மனம் மகனுக்கு வந்ததே என்று வினாயகம் மகிழும் சமயத்தில், அது ஒரு திட்டமிட்ட சதி என்று தெரிகிறது.

பண கஷ்டத்தில் திணறும் மகன் பரமனும், மகள் கண்மணியும் சதியாலோசனை செய்து, வினாயகத்தின் வீட்டை விற்று தங்களுக்குள் பங்கு பிரித்துக்கொள்ள விரும்புகிறார்கள். வசிக்கும் வீட்டை விற்று விட்டால் எங்கே குடி போவது என்ற நியாயமான சிந்தனையுடன் அவர்களது திட்டத்தை ஏற்க மறுக்கிறார் வினாயகம்,

இதன்பின், வினாயகம் வழக்கமாக செல்லும் அடுக்குமாடி கட்டிட அங்காடிக்கு  செல்கிறார். அங்கு அவர் சென்ற சிறிது நேரத்தில் அந்த அடுக்குமாடி கட்டிடம் இடிந்து விழுந்து பலர் இறந்துபோகிறார்கள். இறந்தவர்களுக்கு தலா 20 லட்சம் ரூபாய் தருவதாக அரசாங்கம் அறிவிக்கிறது.

அப்பா வினாயகம் இறந்த துக்கம் ஒரு பக்கம் இருந்தாலும், அவர் மூலம் கிடைக்கவிருக்கும் நிவாரணத் தொகையான 20 லட்சம் ரூபாயை தங்களுக்குள் எப்படி பங்கிட்டுக் கொள்வது என்பது சம்பந்தமாக பிள்ளைகளுக்குள் பேச்சுவார்த்தை தொடங்குகிறது. யாருக்கு எத்தனை லட்சம் என்கிற பேச்சுவார்த்தை நீண்டுகொண்டே போய் விவாதமாகிறது; சண்டையாகிறது.

ஒரு கட்டத்தில் அரசாங்கத்திடமிருந்து நிவாரணத் தொகை பெறுவதில் பெரிய தடங்கல் ஏற்படுகிறது. அதைத் தொடர்ந்து அடுத்தடுத்த திருப்பங்களுடன் என்ன நடக்கிறது என்பது ‘உடன்பால்’ படத்தின் மீதிக்கதை.

0a1c

நகைச்சுவை நடிகராக மட்டும் அல்ல, எப்படிப்பட்ட  கனமான குணசித்திர வேடமாக இருந்தாலும் அதையும் ஏற்று சிறப்பாக நடிக்கக் கூடியவர் என பெயர் பெற்றிருப்பவர் சார்லி. இந்தப்படத்திலும் வினாயகம் என்ற பாசமான குடும்பத் தலைவர் கதாபாத்திரத்தில் மிகை இல்லாமல் மிக இயல்பாக நடித்து, நம் மனதை நெகிழ வைக்கிறார். மகன், மகளின் மனம் புரிந்து கனிவோடு கண்டிப்பது, அக்கறையாக ஆத்திரம் கொள்வது, பேரக்குழந்தைகளோடு ஜாலியாக விளையாடுவது என இயல்பான நடிப்பால் ஈர்க்கிறார்.

சார்லின் மூத்த மகன் பரமனாக வரும் லிங்கா, வீட்டின் செலவுகளை சுமக்க முடியாத அழுத்தத்தில் என்ன செய்கிறோம் என்று தெரியாமல் சுயநலம் மேலிடும்  நடிப்பில் பளிச்சிடுகிறார். தங்கையும் மனைவியும் ஒருவருக்கொருவர் ஈகோவில் இடித்துக்கொள்ள, இடையில் மாட்டிக்கொண்டு விழிக்கும் வேடத்தை அற்புதமாகக் கையாண்டு இருக்கிறார் லிங்கா.

லிங்காவின் மனைவி / சார்லியின் மருமகள் பிரேமாவாக நடித்திருக்கும் அபர்னதிக்கு பேர் சொல்லத் தக்க வேடம். உணர்ச்சியை வெளிப்படுத்தும் படபடக்கும் விழிகளுடன் அனாயாசமாக நடித்திருக்கிறார்.

சார்லின் மகள் கண்மணியாக வருகிறார் காயத்ரி. அண்ணனுக்குத் தப்பாத தங்கையாக சுயநலம் மிளிரும் பாத்திரத்தில் தனக்கு சேர வேண்டிய பங்கு சரியாக வந்துவிட வேண்டும் என்கிற பேராசை மேலிடும் காயத்ரியின் பங்களிப்பு கச்சிதம். கண்கலங்கிக் கொண்டே அவர் பேசும் வசனங்களை ரசித்துச் சிரிக்கையில் நமது கண்களிலும் கலக்கம்!

காயத்ரியின் கணவன் / சார்லியின் மருமகன் முரளியாக நடித்திருக்கும் விவேக் பிரசன்னா படத்துக்குப் படம் திறமையில் உயர்ந்துகொண்டே போகிறார். ஒன்றுக்கும் ஆகாத மாப்பிள்ளையாக வரும் அவர் வாயைத் திறந்தாலே நகைச்சுவை கொட்டுகிறது.

சார்லியின் கடைசி மகன் பார்த்திபனாக வரும் தீனாவின் நடிப்பும் மிகப் பொருத்தமாக இருக்கிறது அதேபோல், சார்லியின் அக்கா விசாலமாக வரும் தனமும் ரசிக்க வைக்கிறார்.

விசு பாணியிலான குடும்பக் கதையை காட்சிக்குக் காட்சி சிரிக்கும்படியாக படமாக்கி, கடைசியில் சார்லியின் பேரனை வைத்து நெத்தியடியாக ஒரு கருத்தைச் சொல்லி சபாஷ் பெறுகிறார், எழுதி இயக்கியிருக்கும் இயக்குனர் கார்த்திக் சீனிவாசன். அதோடு கடைசிக் காட்சியில் சார்லியின் நிலை பார்வையாளர்களின் நெஞ்சைக் கனக்க வைக்கிறது. பாராட்டுகள் கார்த்திக் சீனிவாசன்.

மதன் கிறிஸ்டோபரின் ஒளிப்பதிவு நடுத்தர வர்க்க வீடு மற்றும் வாழ்க்கையை அதன் இயல்பு கெடாமல் யதார்த்தமாக பதிவு செய்திருக்கிறது. சக்தி பாலாஜியின் இசை, ஜி.மதனின் படத்தொகுப்பு காட்சிகளுக்கு பலம் சேர்த்திருக்கிறது.

‘உடன்பால்’ – குடும்பங்கள் கண்டு களித்து கொண்டாடத் தக்க படம்!