வதந்தி – த ஃபேபிள் ஆஃப் வெலோனி: விமர்சனம்
நடிப்பு: எஸ்.ஜே.சூர்யா, சஞ்சனா, லைலா, ஸ்மிருதி வெங்கட், குமரன் தங்கராஜன், நாசர், விவேக் பிரசன்னா, ஹரீஷ்பெராடி, அவினாஷ், அஸ்வின்குமார், ஆதித்யா, வைபவ் முருகேசன், அஸ்வின்ராம், அருவி பாலாஜி, திலீப்சுப்பராயன்,குலபுலி லீலா மற்றும் பலர்
இயக்கம்: ஆண்ட்ரூ லூயிஸ்
ஒளிப்பதிவு: சரவணன்
இசை: சைமன் கே கிங்
தயாரிப்பு: புஷ்கர் – காயத்ரி
ஓ.டி.டி: அமேசான் பிரைம் வீடியோ
பத்திரிகை தொடர்பு: யுவராஜ்
ஓர் அழகிய இளம்பெண் மர்மமான முறையில் அகால மரணம் அடைந்துவிட்டால், பரபரப்புப் பசி கொண்ட சில ஊடகங்கள், அந்த மர்ம மரணத்துக்குப் பின்னணியில் புதைந்திருக்கும் உண்மைகளைக் கண்டுபிடிக்கிறோம் என்ற பெயரில் அந்த பெண்ணைப் பற்றி இல்லாததும் பொல்லாததுமான கட்டுக்கதைகளை கட்டிவிட்டு, “செய்திகள்” என்ற பெயரில் வதந்தி பரப்புவதை நாம் நிஜ வாழ்க்கையில் அடிக்கடி பார்க்கிறோம். (எடுத்துக்காட்டாக, சமீபத்தில் கள்ளக்குறிச்சி பிளஸ்-2 மாணவியின் மர்ம மரணம் தொடர்பாக “செய்திகள்” என்ற பெயரில் எப்படியெல்லாம் வதந்திகள் பரப்பப்பட்டன என்பதை நினைவுகூர்ந்தாலே நாம் மேலே சொன்னது எத்தனை உண்மை என்பது விளங்கும்.)
இத்தகைய வதந்திகளால் அத்தகைய பெண்களின் மாண்பும், கண்ணியமும் எப்படியெல்லாம் சிதைக்கப்படுகிறது, களங்கப்படுத்தப்படுகிறது என்பதை அந்த ஊடகவியலாளர்கள் எண்ணிப் பார்ப்பதில்லை. சாதாரண வெகுமக்களும் சிந்திப்பதில்லை. இக்கருத்தை வலியுடனும், வலிமையுடனும், மனிதாபிமானத்துடனும், விறுவிறுப்புடனும் எடுத்து வைப்பது தான் எஸ்.ஜே.சூர்யா உள்ளிட்டோர் நடிப்பில், ஆண்ட்ரூ லூயிஸ் எழுத்து மற்றும் இயக்கத்தில், புஷ்கர் – காயத்ரி தயாரிப்பில் உருவாகி, அமேசான் பிரைம் வீடியோ ஓடிடி தளத்தில் வெளியாகியிருக்கும் ’வதந்தி – த ஃபேபிள் ஆஃப் வெலோனி’ என்ற (ஒவ்வொரு எபிசோடும் சுமார் முக்கால் மணி நேரம் ஓடக்கூடிய) எட்டு எபிசோடுகள் கொண்ட இணையத் தொடர்.
அது மட்டும் அல்ல. மர்மமான முறையில் ஒரு கொலை நடக்கிறது; இக்கொலையை இவர் இதனால் செய்திருப்பாரோ? அல்லது அவர் அதனால் செய்திருப்பாரோ? என பல நபர்கள் மீது கதாபாத்திரங்களுக்கும், பார்வையாளர்களுக்கும் சந்தேகம் வருமாறு செய்து, பின்னர் அவர்களில் யாரும் இல்லை எனக் காட்டி, இதுவரை சந்தேகமே எழாத ஒரு நபரை உண்மையான கொலையாளியாக ஆதாரத்துடன் நிறுவுவது என்ற ‘மர்டர் மிஸ்ட்ரி’ எனும் ‘கொலைப்புதிர்’ ஜானரின் இலக்கணத்துக்குள் கனகச்சிதமாகப் பொருந்தும்படியாக திறம்பட கட்டமைக்கப்பட்டிருக்கிறது இத்தொடர்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள காட்டுப்பகுதி. அங்கு நடைபெற்றுவந்த திரைப்பட படப்பிடிப்பில் பங்கேற்றுவந்த பிரபல நாயக நடிகை மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு சடலமாக கண்டெடுக்கப்படுகிறார். இது பரபரப்புச் செய்தியாக ஊடகங்கள் மூலம் தீயாய் பரவுகிறது. இந்த நிலையில் அந்த நடிகை திடீரென ஊடகங்களில் தோன்றி, “நான் கொல்லப்படவில்லை. உயிருடன் தான் இருக்கிறேன்” என்று பேட்டி கொடுக்கிறார். எனில், கொல்லப்பட்ட பெண் யார் என்று கண்டறிய போலீஸ் விசாரணையில் இறங்குகிறது.
அந்த பகுதியில் ‘ஏஞ்சல் லாட்ஜ்’ என்ற தங்கும் விடுதியை நடத்தி வருபவரும், கணவரை இழந்தவருமான ஆங்கிலோ இந்தியப் பெண் ரூபியின் (லைலாவின்) ஒரே மகளான வெலோனி (சஞ்சனா) என்ற அழகிய டீன்ஏஜ் மாணவி தான் கொல்லப்பட்ட பெண் என்பது தெரிய வருகிறது. உடனே, இதுவும், வெலோனியின் புகைப்படத்துடன் “நடிகை என எண்ணப்பட்ட பெண்” என்ற தலைப்புடன் ஊடகங்களில் பரபரப்புச்செய்தி ஆகிறது.
இதைத் தொடர்ந்து, வெலோனியைக் கொலை செய்தது யார், எதற்காக கொலை செய்யப்பட்டார் என்பதை கண்டறிவதற்காக நடத்தப்படும் போலீஸ் விசாரணை, மக்கள் எதிர்பார்க்கும் வேகத்தில் இல்லாமல் நத்தை வேகத்தில் நகர, அதிருப்தி அடையும் உயர் நீதிமன்ற நீதிபதி, வழக்கை விரைந்து விசாரித்து முடிக்குமாறு கூறுகிறார். இதனால், வெலோனி கொலை வழக்கை புலனாய்வு செய்யும் பொறுப்பை திறமையான சப்-இன்ஸ்பெக்டரான விவேக் (எஸ்.ஜே.சூர்யா) வசம் ஒப்படைக்கிறது போலீஸ் துறை.
புலனாய்வைத் துவக்கும் சப்-இன்ஸ்பெக்டர் விவேக்கின் சந்தேகப் பார்வை வெலோனிக்கு நிச்சயிக்கப்பட்டிருந்த குடிகார இளைஞன், வெலோனியைக் காதலித்த மற்றொரு இளைஞன், ஒரு கதாசிரியர் (நாசர்), நடுக்காட்டில் வசிக்கும் மூன்று பேர் என பலர் மீது ஒன்றன்பின் ஒன்றாக விழுகிறது.
ஒரு கட்டத்தில் போலீஸ் உயர் அதிகாரியால் இந்த வழக்கு முடித்து வைக்கப்பட்டு, ஊத்தி மூடப்படுகிறது. இதனை விவேக் மனம் ஏற்க மறுக்கிறது. அதனால், தொடர்ந்து உண்மையான கொலையாளியைக் கண்டுபிடிக்க ரகசிய தேடுதல் வேட்டை நடத்துகிறார். எந்நேரமும் இதே சிந்தனையிலும், செயலிலும் இருப்பதால் குடும்பத்தில் மனைவியிடத்திலும், பணியிடத்திலும் நிறைய பிரச்சனைகள் ஏற்படுகின்றன.
இறுதியில், கொலையாளி யார் என்பதையும், கொலைக்கான காரணத்தையும் சப்-இன்ஸ்பெக்டர் விவேக் கண்டுபிடித்தாரா என்பது ‘வதந்தி – த ஃபேபிள் ஆஃப் வெலோனி’ தொடரின் மீதிக்கதை.
மர்மக்கொலையை புலனாய்வு செய்து கொலையாளியைக் கண்டுபிடிக்கும் பொறுப்புள்ள சப்-இன்ஸ்பெக்டர் விவேக் வேடத்தில் எஸ்.ஜே. சூர்யா சிறப்பாக நடித்திருக்கிறார். வழக்கத்துக்கு மாறாக அமைதியாக, ஆனால் அழுத்தமாக நடித்து பாராட்டுப் பெறுகிறார். விசாரணைக் காட்சிகள், துப்பறியும் காட்சிகள் ஆகியவற்றில் தூள் பரத்தியிருக்கிறார். மனைவியுடனான ஊடல், கூடல், உரையாடல் காட்சிகளில் அவர் நடிப்பு அட்டகாசம். குறிப்பாக, ஐந்தாவது எபிசோடில் மனைவியுடன் அவர் பேசும் காட்சி அபாரம்.
எஸ்.ஜே. சூர்யாவுக்கு இணையாக கதையின் நாயகி வெலோனியாக சஞ்சனா சிறப்பாக நடித்திருக்கிறார். இளமையும் அழகும் நிறைந்த தோற்றமும், அப்பாவித்தனமான முகமும், வெள்ளந்தியான சிரிப்பும் அவருக்கு பிளஸ். அன்புக்கு ஏங்கும் ஏக்கத்தை கண்கள் மூலமே பார்வையாளர்களுக்கு கடத்தி விடுகிறார்.
நாயகியின் அம்மாவும், ஏஞ்சல் லாட்ஜ் உரிமையாளருமான ஆங்கிலோ இந்தியப் பெண் ரூபியாக வரும் லைலா, கதாசிரியராக வரும் நாசர், இன்னொரு சப்-இன்ஸ்பெக்டராக வரும் விவேக் பிரசன்னா, எஸ்.ஜே.சூர்யாவின் மனைவியாக வரும் ஸ்மிருதி வெங்கட், வெலோனியைத் திருமணம் செய்யவிருக்கும் இளைஞனாக வரும் குமரன் தங்கராஜன், செய்தி ஆசிரியராக வரும் ஹரீஷ் பெராடி, மற்றும் அவினாஷ், அஸ்வின்குமார், ஆதித்யா, வைபவ் முருகேசன், அஸ்வின்ராம், அருவி பாலாஜி, திலீப் சுப்பராயன், குலபுலி லீலா உள்ளிட்ட அனைத்து நடிப்புக் கலைஞர்களும் தத்தமது பங்களிப்பை சிறப்பாக செய்திருக்கிறார்கள்.
எழுதி இயக்கியிருக்கிறார் ஆண்ட்ரூ லூயிஸ். ஆரம்பம் முதல் முடிவு வரை ஏகப்பட்ட சுவாரஸ்யமான திருப்பங்களோடு கதையை நகர்த்தியிருக்கிறார். மொத்தமுள்ள எட்டு எபிசோடுகளையும் விறுவிறுப்பாக அமைத்திருக்கிறார். கன்னியாகுமரி வட்டார வழக்கு, ஆங்கிலோ இந்திய கிறிஸ்தவர்களின் வாழ்க்கை முறை, பேச்சு வழக்கு மற்றும் சடங்கு சம்பிரதாயங்கள், போலீஸ் துறையில் இருக்கும் அடுக்குகள் மற்றும் அவற்றின் அளவுகோல்கள், குடும்ப உணர்வுகள், வனங்களை அரசாங்கம் எடுத்துக்கொண்டதால் பாதிக்கப்படும் மக்களின் மனநிலை உள்ளிட்ட ஏராளமான நுட்பமான விசயங்களைத் திரைக்கதைக்குள் வைத்து சுவாரஸ்யம் குறையாமல் கொண்டு சென்றிருக்கிறார். பாராட்டுகள்.
கதையை காட்சி அனுபவமாக மாற்ற ஒளிப்பதிவாளர் சரவணனும், சஸ்பென்ஸ் – திரில்லருக்குத் தேவையான பின்னணி இசையை வழங்க இசையமைப்பாளர் சைமன் கே கிங்கும் கடுமையாக உழைத்து, இயக்குனருக்கு பக்கபலமாக இருந்திருக்கிறார்கள்.
’வதந்தி – த ஃபேபிள் ஆஃப் வெலோனி’ – வார இறுதிநாட்களை திரில்லிங்காகக் கழிக்க இந்த தொடரைக் கண்டு களிக்கலாம்!