கட்டா குஸ்தி – விமர்சனம்

நடிப்பு: விஷ்ணு விஷால், ஐஸ்வர்யா லட்சுமி, கருணாஸ், காளி வெங்கட், முனீஸ்காந்த், ரெடின் கிங்ஸ்லி, கஜராஜ், லிஸி ஆண்டனி, ஜா ரவி மற்றும் பலர்

எழுத்து & இயக்கம்: செல்லா அய்யாவு

ஒளிப்பதிவு: ரிச்சர்டு எம்.நாதன்

படத் தொகுப்பு: ஜி.கே.பிரசன்னா

இசை: ஜஸ்டின் பிரபாகர்

தயாரிப்பு: ’விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸ்’ விஷ்ணு விஷால் &  ’ஆர் டி டீம் ஒர்க்ஸ்’ ரவி தேஜா

வெளியீடு: ‘ரெட் ஜெயண்ட் மூவிஸ்’ உதயநிதி ஸ்டாலின்

பத்திரிகை தொடர்பு: சதீஷ் (டீம் எய்ம்)

‘எஃப்.ஐ.ஆர்’ படத்தின் வெற்றிக்கு பின்னர் விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியாகி உள்ள திரைப்படம் ‘கட்டா குஸ்தி’.  ’வேலைனு வந்துட்டா வெள்ளைக்காரன்’ திரைப்படத்துக்குப்பின் விஷ்ணு விஷால் நடித்திருக்கும் அட்டகாசமான முழுநீள நகைச்சுவைப் படம் இது. தமிழில் ‘கட்டா குஸ்தி’ என்ற பெயரிலும், தெலுங்கில் ”மட்டி குஸ்தி’ என்ற பெயரிலும் ஒரே நேரத்தில் இரு மொழிகளிலும் திரைக்கு வந்திருக்கிறது.

குடும்பப் பாங்கான காமெடி ஜானரில், குஸ்தி பின்னணியில், கணவனுக்கும் மனைவிக்கும் இடையிலான ஈகோ சண்டையை கதைக்கருவாகக் கொண்டு கட்டமைக்கப்பட்டுள்ளது இந்த படம்.

விஷ்ணு விஷால் கபடி விளையாட்டு வீரர். அப்பா, அம்மா இல்லாததால் தனது மாமனும், ஊராட்சி மன்றத் தலைவருமான கருணாஸின் பராமரிப்பில் வாழ்ந்துவருகிறார். கருணாஸ் முழுக்க முழுக்க ஆணாதிக்கச் சிந்தனை கொண்டவராக இருப்பதால், அவருடைய பிற்போக்குச் சிந்தனைகளே விஷ்ணு விஷால் உள்ளத்திலும் குடியேறி விடுகிறது.

விஷ்ணு விஷால் தனக்கு மனைவியாக வரும் பெண்ணுக்கு கூந்தல் நீளமாக இருக்க வேண்டும்; உயர்நிலைப்பள்ளி படிப்பையே தாண்டாத தன்னைவிட குறைந்த படிப்பே படித்திருக்க வேண்டும்; கணவன் கிழித்த கோட்டைத் தாண்டாத மனைவியாக இருக்க வேண்டும் என்பன போன்ற ஆணாதிக்க அளவுகோல்களுடன் திருமணத்துக்குப் பெண் தேடுகிறார். பெண் அமையவில்லை.

கேரள மாநிலம் பாலக்காடு அருகே வசித்து வருபவர் நாயகி ஐஸ்வர்யா லட்சுமி. கல்லூரிக்குப் போய் கணிதம் பயின்று பி.எஸ்.சி. பட்டம் பெற்றிருப்பவர். மேலும், குஸ்தி விளையாட்டுப் போட்டியில் மாநில அளவில் சாம்பியன் பட்டம் வென்றவர். இவர் குஸ்தி வீராங்கனை என்பதாலேயே வரன் அமையாமல் காலம் கடந்துகொண்டிருக்கிறது.

ஐஸ்வர்யா லட்சுமியின் சித்தப்பாவான முனீஸ்காந்தும், விஷ்ணு விஷாலின் மாமனான கருணாஸும் பள்ளிப்பருவ நண்பர்கள். ஒருநாள் எதிர்பாராத சூழலில் இருவரும் சந்தித்துக்கொள்ள, விஷ்ணு விஷால் முனீஸ்காந்துக்கு அறிமுகம் ஆகிறார். விஷ்ணு விஷாலின்  திருமணத்துக்கான நிபந்தனைகளைத் தெரிந்துகொள்ளும் முனீஸ்காந்த், தனது அண்ணன் மகளான ஐஸ்வர்யா லட்சுமி குட்டையான கூந்தல் உள்ளவர், பி.எஸ்.சி பட்டதாரி, குஸ்தி விளையாட்டு வீராங்கனை என்ற உண்மைகளை எல்லாம் மறைத்து, அவரை விஷ்ணு விஷாலுக்குத் திருமணம் செய்துவைத்து விடுகிறார்.

0a1e

முனீஸ்காந்தினால் ஏமாற்றப்பட்டது தெரியாமல் ஐஸ்வர்யா லட்சுமியுடன் தாம்பத்ய வாழ்க்கையை வாழத் துவங்கும் விஷ்ணு விஷால், தனது மாமனான கருணாஸிடம் ஆணாதிக்க ஆலோசனை பெற்று அதன்படியே மனைவியிடம் நடந்து கொள்கிறார்.

இந்த நிலையில், விஷ்ணு விஷாலைக் கொலை செய்ய அவரது எதிரி அடியாட்களை அனுப்புகிறான். தனது கணவரை காப்பாற்ற அதிரடியாய் களம் இறங்குகிறார் குஸ்தி வீராங்கனையான ஐஸ்வர்யா லட்சுமி. முடிவில் கணவரைக் காப்பாற்றிவிட்ட போதிலும், அவருடைய சவரிமுடி சமாச்சாரம் விஷ்ணு விஷாலுக்குத் தெரிந்து விடுகிறது.

இதன்பின் விஷ்ணு விஷால் – ஐஸ்வர்யா லட்சுமி குடும்ப வாழ்க்கையில் எப்படிப்பட்ட புயல் வீசுகிறது? அது இருவரையும் எப்படியெல்லாம் அலைக்கழிக்கிறது? இவர்களின் ஈகோ சண்டை, கணவனுக்கும் மனைவிக்கும் இடையிலான குஸ்தி போட்டியாய் எப்படி வளர்ந்துபோகிறது? இறுதியில் பிரச்சனை தீர்ந்ததா, இல்லையா? என்பதையெல்லாம் வயிறு குலுங்க சிரிக்கும் வகையில் சொல்லிச் செல்கிறது ‘கட்டா குஸ்தி’ படத்தின் மீதிக்கதை.

0a1f

நாயகனாக நடித்திருக்கும் விஷ்ணு விஷால், தன் கதாபாத்திரத்துக்குள் கனகச்சிதமாகப் பொருந்தி தூள் பரத்தியிருக்கிறார். அவர் அப்பாவியாக முகத்தை வைத்துக்கொண்டு ஆணாதிக்க முகபாவனைகளைக் காட்டும்போதும், மனைவி தன்னை உயர்வாக நினைக்க வேண்டும் என்பதற்காக அவர் செய்யும் விஷயங்களின்போதும் கைதட்டலில் திரையரங்கு அதிர்கிறது. நகைச்சுவை, பாசம், கோபம், ஆத்திரம், இயலாமை, ஆக்ரோஷம் என அனைத்து உணர்ச்சிகளையும் அளவாகவும், இயல்பாகவும் வெளிப்படுத்தி அட்டகாசமாக நடித்திருக்கிறார்.

நாயகன் விஷ்ணு விஷாலோடு போட்டி போட்டு, மூக்கின்மேல் விரல் வைத்து வியக்கும் அளவுக்கு பிரமாதமாக நடித்திருக்கிறார் ஐஸ்வர்யா லட்சுமி. தமிழ்த் திரைப்படம் ஒன்றில் நாயகிக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த வலிமையான கதாபாத்திரம் அமைவது அதிர்ஷ்டம். அந்த அதிர்ஷ்டம் ‘கட்டா குஸ்தி’ படத்தில் ஐஸ்வர்யா லட்சுமிக்கு அமைந்திருக்கிறது. இந்த அரிய வாய்ப்பை சரியாக பயன்படுத்தி, அனைத்துத் தரப்பினரின் பாராட்டைப் பெறும் வகையில் அருமையாக நடித்திருக்கிறார். குஸ்தி சண்டையில் அவர் ஆக்ரோஷமாகக் காட்டும் உடல்மொழியைப் பார்க்கும்போது, ‘பொன்னியின் செல்வன்’ படத்தில் பூ போல வந்த பூங்குழலியா இது என்று மலைக்க வைக்கிறார். மேலும், நகைச்சுவை நடிப்பையும் வாரி வழங்கியிருக்கிறார். கீப் இட் அப் ஐஸ்வர்யா லட்சுமி..!

நாயகனின் மாமனாகவும், ஆணாதிக்கவாதியாகவும் வரும் கருணாஸ் காமெடியில் கலக்கியிருக்கிறார். இப்படி குலுங்கக் குலுங்க சிரிக்க வைக்கும் கருணாஸை மீண்டும் திரையில் பார்த்ததில் மகிழ்ச்சி.

‘மணல் கயிறு’ படத்தில் நிறைய பொய்களைச் சொல்லி நாயகனுக்கு நாயகியை மணம் முடித்து வைக்கும் விசுவின் கதாபாத்திரம் போன்ற கேரக்டர் முனீஸ்காந்துக்கு. மனிதர் ஜமாய்த்திருக்கிறார். கூடவே, சென்டிமெண்ட் டச்சும் கொடுத்திருக்கிறார்.

வக்கீல் நண்பராக வரும் காளி வெங்கட்டின் மேக்கப் பாக்ஸ் காமெடியும், அவ்வப்போது சிதறவிடும் நகைச்சுவை துணுக்குகளும் கை தட்டல் பெறுகின்றன. ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்ட ஏனைய நடிப்புக் கலைஞர்களும் படத்தின் வெற்றிக்கு பக்கபலமாக இருந்துள்ளனர்.

 வித்தியாசமான களத்தில் புதுமையான பின்புலத்தில் ரசிக்கக் கூடிய கதையை எடுத்து, அதில் இதுவரை பார்க்காத காமெடி காட்சிகளோடு வளரும் திரைக்கதை அமைத்து,  சரியான இடத்தில் கதைப் போக்கை யதார்த்தப்படுத்தி,  ஏற்றுக்கொள்ளும்படியாக காட்சிகளை அமைத்து, சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கிற விசயங்களைச் சொல்லி, மசாலா விசயங்களையும் கலந்து,  மற்ற தொழில் நுட்பங்களையும்  நடிக நடிகையரையும்  சிறப்பாகப் பயன்படுத்தி,  தேர்ந்த படமாக்கல், சிறப்பான இயக்கம் என்று சாதித்து இருக்கிறார் இயக்குனர் செல்லா அய்யாவு. அவருக்கு மனமார்ந்த வாழ்த்துகளும், பாராட்டுகளும்.

ரிச்சர்டு எம்.நாதனின் ஒளிப்பதிவும், ஜஸ்டின் பிரபாகரனின் இசையும், ஜி.கே.பிரசன்னாவின் படத்தொகுப்பும், அன்பறிவின் சண்டைப் பயிற்சியும் படத்துக்கு கூடுதல் சுவாரஸ்யத்தையும், விறுவிறுப்பையும் கொடுத்துள்ளன.

‘கட்டா குஸ்தி’ – பக்கா ஃபேமிலி என்டர்டெய்ன்மெண்ட்! முழுநீள காமெடி விருந்து! குடும்பம் குடும்பமாக ஜாலியாகக் கிளம்பி திரையரங்குக்கு வந்து, ரசித்துப் படம் பார்த்து, நொடிக்கு நொடி சிரித்து மகிழலாம்! நல்ல வாய்ப்பு; நழுவவிட வேண்டாம்!