“வெறுப்புணர்வை தூண்டும் மோசமான பிரச்சார படம்”:  ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ பற்றி பிரபல இஸ்ரேலிய இயக்குனர்

கடந்த 1989-1990களில் காஷ்மீரில் காஷ்மீரி பண்டிட்கள் கூட்டம் கூட்டமாக வெளியேறியது குறித்து பேசும் விதத்தில் இயக்குநர் விவேக் அக்னிஹோத்ரியால் உருவாக்கப்பட்ட திரைப்படம் ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’. இந்தப் படம் வெளியானபோது அதிக சர்ச்சை இருந்தது. இந்தப் படத்திற்கு வரிவிலக்கு அளிப்பது, படத்தை பார்க்க அரசு ஊழியர்களுக்கு சம்பளத்துடன் அரை நாள் விடுப்பு அளிப்பது என்று பாஜக ஆளும் மாநிலங்களில் பல்வேறு சம்பவங்கள் அரங்கேறின. இந்தப் படம் குறித்த சர்ச்சை நாடாளுமன்றத்தில் கூட எதிரொலித்தது.

இந்நிலையில், இப்போது ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ திரைப்படம் குறித்து கோவா சர்வதேச திரைப்பட விழாவில் திரைப்பட போட்டி தேர்வுக் குழு தலைவர் நடாவ் லேபிட் வெளியிட்டுள்ள கருத்து, இந்தப் படம் பற்றிய இரண்டாம் சுற்று சர்ச்சைக்கு வழி வகுத்துள்ளது.

கோவா திரைப்பட விழா நேற்று (நவ.28) நிறைவுபெற்ற நிலையில், நிறைவு விழாவில் இஸ்ரேலிய எழுத்தாளரும், இயக்குநருமான நடாவ் லாபிட் பேசும்போது, “வெறுப்புணர்வைத் தூண்டும் மோசமான பிரச்சார படமான ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ திரைப்படம் இந்த சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது எனக்கு அதிர்ச்சியையும் குழப்பத்தையும் கொடுத்தது. ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ திரைப்படத்தால் நாங்கள் அனைவரும் கலக்கமும் அதிர்ச்சியும் அடைந்தோம். இது போன்ற மதிப்புமிக்க திரைப்பட விழாவின் கலை, போட்டிப் பிரிவினருக்குப் பொருத்தமற்ற ஒரு பிரச்சார, மோசமான திரைப்படமாக இது எங்களுக்குத் தோன்றியது. விமர்சனத்தை இந்த விழா உண்மையாக ஏற்றுக்கொள்ளும் என்பதால், வெளிப்படையான மனக்கசப்புகளை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்” என்று கூறியிருந்தார்.

லேபிடின் இந்தக் கருத்து குறித்து சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத், இது ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ பற்றி சரியான விமர்சனம்தான். ஒரு கட்சிக்கு எதிராக இன்னொரு கட்சி இந்தப் படத்தை வைத்து தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்தது. ஓர் அரசாங்கமும், ஒரு கட்சியும் இதைவைத்து விளம்பரம் தேடுவதில் பரபரப்பாக இருந்தது. ஆனால், காஷ்மீரில் உண்மையிலேயே பண்டிட்டுகள் கொலை இந்தப் படத்திற்குப் பின்னர் தான் அதிகரித்தது. இந்தப் படம் வெளியான பின்னரே காஷ்மீரில் பாதுகாப்புப் படையினர் கொல்லப்படுவதும் அதிகரித்தது” என்று கூறியுள்ளார்.

சிவசேனா எம்.பி. பிரியங்கா சதுர்வேதி கூறுகையில், “கோவா திரைப்பட விழாவில் தேர்வுக் குழு தலைவர் லேபிட் பேசியதற்கு இஸ்ரேலிய தூதர் கண்டனம் தெரிவித்துள்ளது ஏற்கத்தக்கது அல்ல. லேபிட், காஷ்மீரி பண்டிட்டுகள் பாதிக்கப்பட்டதை விமர்சிக்கவில்லை. அவர்களுக்கு ஏற்பட்ட அநீதியை விமர்சிக்கவில்லை. அதை அவர் மறுக்கவும் இல்லை. ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ என்ற திரைப்படம் எப்படி சர்வதேச விழாவில் திரையிடலுக்கு தேர்வானது என்பதுதான் அவரின் கேள்வி, விமர்சனம். துரதிர்ஷ்டவசமான சம்பவங்களை ஒரு பிரச்சார படமாக்கியுள்ளனர் என்றே அவர் கூறியிருக்கிறார்” என தன் வாதத்தை முன்வைத்துள்ளார்.

லேபிடின் விமர்சனங்களை சுட்டிக்காட்டியுள்ள காங்கிரஸ் கட்சி, “இது தேசத்துக்கு தர்மசங்கமான சூழல். வெறுப்பை விதைத்தால் அது இப்படித்தான் வெளிப்படும்” என்று கூறியுள்ளது. காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளரும், சமூக வலைதளப் பிரிவு தலைவருமான சுப்ரியா ஸ்ரீனடே கூறுகையில், “பிரதமர் மோடி, பாஜக என அனைவரும் இந்தப் படத்தை புரோமோட் செய்தனர். இப்போது என்னவாயிற்று? ஒரு சர்வதேச திரைப்பட விழாவில் தேர்வுக்குழு தலைவர் படத்தை நிராகரித்து இது மோசமான பிரச்சார திரைப்படம். இது மாதிரியான திரைப்பட விழாக்களில் திரையிட தகுதியற்ற்றது என்று கூறியுள்ளார். நீங்கள் விதைத்த வெறுப்பு இப்படித்தான் வெளிவரும்” என்று கூறியுள்ளார்.

பாலிவுட் நடிகை ஸ்வரா பாஸ்கர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “இந்த உலகுக்கே இந்த விஷயம் இப்போது வெட்டவெளிச்சம் ஆகிவிட்டது” என்று பதிவிட்டுள்ளார். இயக்குநர் நகோ லாபிடின் கருத்தை ஆதரித்து அவர் இந்தக் கருத்தைப் பதிவு செய்துள்ளார்.

இவ்வாறாக ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ சர்ச்சை மீண்டும் பூதாகாரமாகி சமூக வலைதளங்களில் காரசார விவாதங்களுக்கு வழிவகுத்துள்ளது.