கவுதம் கார்த்திக் – மஞ்சிமா மோகன் காதல் திருமணம்: 28ஆம் தேதி நடக்கிறது!
![](http://www.heronewsonline.com/wp-content/uploads/2022/11/0a1a-36.jpg)
நடிகர் கவுதம் கார்த்திக் – நடிகை மஞ்சிமா மோகன் திருமணம், வருகிற (நவம்பர்) 28ஆம் தேதி நடைபெற உள்ளது. இது காதல் திருமணம் ஆகும். இத்தகவல்களை கவுதம் கார்த்திக், மஞ்சிமா மோகன் இருவரும் கூட்டாக செய்தியாளர்களிடம் தெரிவித்தனர்.
பிரபல நடிகர் கார்த்திக்கின் மகன் கவுதம் கார்த்திக். இவர் இயக்குனர் மணிரத்னத்தின் ’கடல்’ திரைப்படம் மூலம் நாயக நடிகராக அறிமுகமானவர். பின்னர் பல படங்களில் நடித்து தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக திகழ்பவர்.
கேரளாவைச் சேர்ந்த மஞ்சிமா மோகன், இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனனின் ‘அச்சம் என்பது மடமையடா’ திரைப்படம் மூலம் தமிழ் திரையுலகுக்கு அறிமுகமானவர்.
இயக்குனர் முத்தையாவின் ‘தேவராட்டம்’ படத்தில் கவுதம் கார்த்திக்கும், மஞ்சிமா மோகனும் இணைந்து நடித்தனர். இப்படத்தின் படப்பிடிப்பின்போதே இருவரும் ஒருவரை ஒருவர் காதலிப்பதாக தகவல்கள் கசிந்தன. எனினும், கடந்த அக்டோபர் 31ஆம் தேதி தான் இருவரும் வெளிப்படையாக தங்கள் காதலை வெளியுலகுக்கு அறிவித்தனர்.
இந்நிலையில், சென்னை பிரசாத் லேப் திரையரங்கில் நேற்று (24-11-2022) மாலை செய்தியாளர்களை ஜோடியாக சந்தித்த கவுதம் கார்த்திக்கும், மஞ்சிமா மோகனும், தங்களுக்கு வருகிற (நவம்பர்) 28ஆம் தேதி திருமணம் நடைபெற இருக்கிறது என்றும், இது காதல் திருமணம் என்றும் தெரிவித்தனர்.
கவுதம் கார்த்திக் பேசுகையில், “வருகிற 28ஆம் தேதி எனக்கும் மஞ்சிமாவுக்கும் திருமணம் நடைபெற உள்ளது. உங்கள் அனைவரின் ஆசிர்வாதமும் எங்களுக்குத் தேவை. எங்கள் திருமணம் ஒரு சிறிய, தனிப்பட்ட குடும்ப நிகழ்வு. ரிசப்ஷன் தனியாக நடத்தப்படவில்லை. திருமணத்துக்குப் பிறகு மீண்டும் உங்களை சந்திக்கிறோம்” என்றார்.
இதை தொடர்ந்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த கவுதம் கார்த்திக், “நான் தான் காதலை முதலில் சொன்னேன். மஞ்சிமா இரண்டு நாள்கள் அவகாசம் எடுத்துக்கொண்டு அதன்பிறகே ஓகே சொன்னார்.
எங்கள் காதலை இரண்டு குடும்பத்தினரும் மிகவும் மகிழ்ச்சியாக ஏற்றுக்கொண்டுள்ளார்கள்.
ஒரு சரியான நபரை நீங்கள் வாழ்வில் சந்தித்தால் அவர் உங்களை முழுமையான ஆள் ஆக்குவார் என்று அப்பா சொல்லுவார். அப்படி நான் வாழ்வில் சந்தித்த நபர் தான் மஞ்சிமா.
’தேவராட்டம்’ படத்தில் பணிபுரியும்போது நாங்கள் நல்ல நண்பர்களாக இருந்தோம். அதன்பிறகு எங்கள் உறவு அடுத்த தளத்துக்குச் சென்றது. மஞ்சிமா அழகானவர் என்பதோடு, நான் சோர்வாக உணரும்போதெல்லாம் என்னை மீட்டெடுப்பவராகவும் இருக்கிறார்” என்றார்.