நடிகை மீரா மிதுன் தலைமறைவாக இருக்கும் இடம் தெரியவில்லை: நீதிமன்றத்தில் காவல்துறை தகவல்
பட்டியல் இனத்தவர்கள் குறித்து அவதூறு கருத்து தெரிவித்ததாக கூறி, விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் அளித்த புகாரின் பேரில் நடிகை மீரா மிதுன், அவரது நண்பர் சாம் அபிஷேக் ஆகியோர் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து இருவரையும் கைது செய்தனர். இதன்பின்பு அவர்கள் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.
இந்த வழக்கு விசாரணை சென்னை முதன்மை செசன்ஸ் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த வழக்கு விசாரணைக்கு மீரா மிதுன் ஆஜராகாததால் அவருக்கு எதிராக பிடிவாரண்டு பிறப்பித்து நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
இந்தநிலையில் அந்த வழக்கு நீதிபதி எஸ்.அல்லி முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மீரா மிதுன் ஆஜராகவில்லை. போலீசார் தரப்பில் ஆஜரான சிறப்பு அரசு வக்கீல் எம்.சுதாகர், ‘மீராமிதுன் தொடர்ந்து தலைமறைவாக உள்ளார். அவர் தலைமறைவாக உள்ள இடம் குறித்து எந்த விவரமும் கிடைக்கவில்லை. மீராமிதுன் பயன்படுத்தி வந்த செல்போன் ‘சுவிட்ச் ஆப்’ செய்யப்பட்டுள்ளது. அவர் எங்கு இருக்கிறார் என குடும்பத்தினர், நண்பர்களுக்கும் தெரியவில்லை. மீராமிதுன் அவரது குடும்பத்தினரை தொடர்பு கொள்கிறாரா? என அவரையும், அவரது குடும்பத்தினரையும் தொடர்ந்து கண்காணித்து வருகிறோம்’ என்றார்.
இதைத்தொடர்ந்து வழக்கின் விசாரணையை அடுத்த மாதம் (டிசம்பர்) 7-ந் தேதிக்கு நீதிபதி தள்ளிவைத்தார்.