பரோல் – விமர்சனம்

நடிப்பு: ஆர்.எஸ்.கார்த்திக், லிங்கா, கல்பிகா, மோனிஷா முரளி, ஜானகி சுரேஷ், வினோதினி வைத்தியநாதன், மேக் மணி, சிவம், டென்னிஸ், இம்மானுவேல் மற்றும் பலர்

இயக்கம்: துவாரக் ராஜா

இசை: ராஜ்குமார் அமல்

ஒளிப்பதிவு: மகேஷ் திருநாவுக்கரசு

படத்தொகுப்பு: முனிஸ்

தயாரிப்பு:  ’ட்ரிப்பர் எண்டர்டைன்மெண்ட்’ ச.மதுசூதன்

பத்திரிகை தொடர்பு: சதீஷ் (டீம் எய்ம்)

வன்முறைக்கும் குற்றச் செயல்களுக்கும் பேர்போன பகுதியாக தமிழ் சினிமா கட்டமைத்திருக்கும் வடசென்னைப் பகுதியில் வசித்து வருபவர் ஆராயி (ஜானகி சுரேஷ்). அவருக்கு இரண்டு மகன்கள். மூத்த மகன் கரிகாலன் (லிங்கா). வெட்டு – குத்து, கொலை என ரவுடியிசம் செய்து, சிறையில் அடைக்கப்பட்டிருப்பவன். இளைய மகன் கோவலன் (ஆர்.எஸ்.கார்த்திக்). பிளம்பர் வேலை செய்து நேர்மையாக பிழைப்பவன். என்றாலும், தன்னை விட மூத்த மகனான கரிகாலன் மீது தான் அம்மாவுக்குப் பாசம் அதிகம் என்று பொருமுகிறான் கோவலன். தன் அண்ணனை எதிரியாகவே பாவிக்கிறான். இந்நிலையில், ஆராயி திடீரென இறந்துவிட, ‘தாய்க்கு தலைமகன் தான் கொள்ளி வைக்க வேண்டும்’ என்று ஊரார் சொல்ல, தான் எதிரியாக பாவிக்கும் அன்ணனை பரோலில் எடுக்க வேண்டிய நிர்பந்தத்துக்கு ஆளாகிறான் கோவலன். பரோலில் எடுக்க அவன் மனு போட்டானா? பரோல் கிடைப்பதில் எத்தகைய சிக்கல்கள் ஏற்படுகின்றன? கரிகாலன் பரோலில் வெளியே வந்தால் அவனுக்கு காத்திருக்கும் ஆபத்துகள் என்ன? என்பவற்றை எல்லாம் விறுவிறுப்பாகச் சொல்லுகிறது ‘பரோல்’ படத்தின் மீதிக்கதை.

படத்தில் கோவலனாக வரும் ஆர்.எஸ் கார்த்திக், கரிகாலனாக வரும் லிங்கா இருவருமே தேர்ந்த நடிப்பை வழங்கியுள்ளார்கள். அண்ணன் தம்பி என்ற விசயத்தில் இருவரும் தனித்தனியாக முறுக்கி நின்றாலும் அம்மா என்ற உணர்வில் ஒன்றாக உடையும்போது இருவருமே சிறந்த நடிகர்களாக தங்களை அடையாளப்படுத்திக் கொள்கிறார்கள். இருவரது கதாபாத்திரங்களிலும் யதார்த்தம், ஹீரோயிசம் இருப்பது சிறப்பு.

தென்றல் என்ற கதாபாத்திரத்தில் வரும் கல்பிகா, கவி என்ற கதாபாத்திரத்தில் வரும் மோனிஷா முரளி ஆகிய இரு நாயகிகளும் பொறுப்பை உணர்ந்து நன்றாக நடித்துள்ளார்கள்.

ஆராயி என்ற அம்மா கதாபாத்திரத்தில் நடித்துள்ள ஜானகி சுரேஷ் முத்திரை நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.

வடசென்னையை மையமாகக் கொண்ட கதைகளை வித்தியாசமான வில்லன்கள் தான் நகர்த்திச் செல்வார்கள். அவர்கள் இந்த படத்திலும் தங்கள் வேலையை சரிவர செய்திருக்கிறார்கள்.

கிஃப்டி மரியா என்ற வக்கீலாக வரும் வினோதினி வைத்தியநாதன் பட்டையைக் கிளப்பியுள்ளார்.

விஜய் சேதுபதியின் பின்னணிக்குரல் படத்துக்கு பலம்.

’பரோல்’ என்ற படத்தின் டைட்டிலுக்கு முழுமையாக நியாயம் செய்வது போல கதை, திரைக்கதை, காட்சிகள் அமைந்துள்ளன. ஒரு பரோலுக்குப் பின்னால் இருக்கும் கதைகளும், வலிகளும் ஏராளம். அதை வைத்துப் பின்னப்பட்ட கதை என்பதால் பரபரப்புக்கும் விறுவிறுப்புக்கும் பஞ்சமில்லாமல் படத்தை நகர்த்தியிருக்கிறார் இயக்குனர் துவாரக் ராஜா. வழக்கமான வடசென்னை டெம்ப்ளேட்டில் வழக்கத்திற்கு மாறான குடும்ப சென்டிமெண்டை புகுத்தி, கிளுகிளுப்பான காட்சிகள் எதையும் நுழைக்காமல், புதுமையான படம் தந்ததற்காக இயக்குனருக்கு பாராட்டுகள்.

ராஜ்குமார் அமலின் பின்னணி இசை காட்சிகளுக்கு வலு சேர்க்கும் விதமாய் ஒலிப்பது நிறைவாக இருக்கிறது. மகேஷ் திருநாவுக்கரசின் கேமரா வடசென்னையின் இயல்பை அதன் இயல்பு கெடாமல் பதிவு செய்துள்ளது. ஒரு விறுவிறுப்பான படத்தை பார்ப்பதற்கான மனநிலையை தனது படத்தொகுப்பு மூலம் உருவாக்கியுள்ளார் முனிஷ்.

இரு சகோதரர்களுக்கு இடையேயான எலி – பூனை விளையாட்டாகத் தொடங்கும் இப்படம், திருமண பலாத்காரம், சிறார் சிறையில் துஷ்பிரயோகம், தாயின் நிபந்தனையற்ற அன்பு, குழந்தைப் பருவ அதிர்ச்சி என பலவற்றையும் தொடுவதாக அமைந்து பார்வையாளர்களுக்கு நல்ல அனுபவத்தைத் தருகிறது.

’பரோல்’ – நல்ல முயற்சி, பார்க்கலாம்!