உயர் சாதியினருக்கு 10% இடஒதுக்கீடு செல்லும்: உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு பிராமணர் சங்கம், மார்க்சிஸ்ட் கட்சி வரவேற்பு
உயர்சாதியில் பிறந்து, மாதாமாதம் ரூ.66,666 (அதாவது ஆண்டுக்கு ரூ.7லட்சத்து 99 ஆயிரத்து 999) வரை சம்பாதிக்கும் ”அரிய வகை” ஏழைகளுக்கு ஒன்றிய பாஜக அரசு வழங்கும் 10 சதவீத இடஒதுக்கீடு செல்லும் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதனை தமிழ்நாட்டில் உள்ள பிராமணர் சங்கம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, காங்கிரஸ் கட்சி, பாரதீய ஜனதா கட்சி, தமிழ் மாநில காங்கிரஸ் ஆகியவை வரவேற்றுள்ளன.
பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை :
பொருளாதாரத்தில் பின்தங்கிய வகுப்பினருக்கான 10 சதவீத இட ஒதுக்கீடு வழக்கில் உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு நீதிபதிகள் தற்போது முற்றுப்புள்ளி வைத்துள்ளனர். பாரத பிரதமர் கொண்டு வந்திருக்கிற இந்த 10 சதவீத உள் ஒதுக்கீடு நிச்சயமாக செல்லும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இந்த தீர்ப்பை பாஜக மனதார வரவேற்கிறது.
தமிழகத்தைப் பொறுத்தவரை எப்போதுமே ஒரு விஷமத்தனமான பிரச்சாரம் போகும். மறைந்த முதல்வர் எம்ஜிஆர் சட்டநாதன் கமிஷனை கொண்டு வந்தபோது, திமுக விஷமத்தனமான பிரச்சாரம் செய்தது. அதேபோல், 2002-ல் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, கட்டாய மதமாற்ற தடைச் சட்டத்தை சட்டமன்றத்தில் 140 எம்எல்ஏக்கள் கையெழுத்திட்டு சட்டமானது. அதை எதிர்த்தும் விஷமத்தனமான பிரச்சாரம் செய்யப்பட்டது.
இன்றைக்கு பொருளாதார ரீதியாக பின்தங்கிய உயர் வகுப்பினர்களுக்கான இட ஒதுக்கீட்டை எதிர்த்தும் ஒரு விஷமத்தனமான பிரச்சாரம் பரப்பப்பட்டு வருகிறது. இந்த இட ஒதுக்கீடு வந்தால், ஏற்கெனவே இட ஒதுக்கீடு சலுகை பெறுபவர்களுக்கு எல்லாம் பாதிப்பு, குறிப்பாக ஓபிசி பிரிவில் யாரெல்லாம் இருக்கிறார்களோ அவர்களுக்கெல்லாம் பாதிப்பு என்று பிரச்சாரம் செய்யப்படுகிறது. ஆனால், அதுபோல எதுவுமே கிடையாது.
மத்திய அரசு யார் யாருக்கெல்லாம் இடஒதுக்கீடு சலுகை ஏற்கெனவே வழங்கியிருக்கிறார்களோ, அவர்களுடைய உரிமைகள் எதுவும் இந்த தீர்ப்பால் பறிபோகாது. தமிழகத்தைப் பொறுத்தவரை பி.சி., எம்.பி.சி., உள்ஒதுக்கீடு நிலையாக மாறாமல் அப்படியே இருக்கும். இதனால் யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லை. அதேபோல், எஸ்.சி., எஸ்.டி., மக்களுக்கான உள்ஒதுக்கீட்டில் எந்தவிதமான மாற்றமும் இல்லை. இதை காலம் காலமாக சொல்லி வந்தாலும், இதனை எதிர்த்து தமிழகத்தில் திமுக ஒரு விஷமத்தனமான பிரச்சாரத்தை கையிலெடுத்து உச்ச நீதிமன்றத்தில் நடந்த வழக்கில் தங்களையும் இணைத்து கொண்டனர்.
பொருளாதார அடிப்படையில் பின்தங்கி கஷ்டபடுகிறவர்களுக்கு இடஒதுக்கீடு அளிக்க வேண்டும் என்பதற்காக மத்திய அரசு இதனை கொண்டு வந்துள்ளது. இதற்கு பல வரையறைகளையும் மத்திய அரசு விதித்துள்ளது. இதனால் யாருக்கும் எங்கேயும் பாதிப்பு கிடையாது. உச்ச நீதிமன்றம் சரித்தரப் புகழ் வாய்ந்த இந்த தீர்ப்பின் மூலம் அதை அங்கீகரித்திருப்பது வரலாற்று சிறப்புமிக்கது.
தமிழ்நாடு பிராமணர் சங்கத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் பம்மல் ராமகிருஷ்ணன்:
கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் பொருளாதாரத்தில் நலிந்த பொதுப் பிரிவினருக்கு 10 சதவீத இடஒதுக்கீடு செல்லும் என்ற உச்ச நீதி மன்றத்தின் தீர்ப்பு வரவேற்கத்தக்கது. இந்த இடஒதுக்கீடு பிராமணர்களுக்கு மட்டும் தான், மற்ற வகுப்பினருக்கு இல்லை என்பது போன்ற பொய் பிரச்சாரம் செய்யப்படுகிறது. பொருளாதாரத்தில் நலிந்த பொதுப் பிரிவினரில் ஏதோ ஏழைகளே இல்லை, எல்லோரும் கோடீஸ்வரர்கள் என்பது போல் சொல்வது மிகவும் கண்டிக்கத்தக்கது. இந்த இடஒதுக்கீட்டால் யாருக்கும் பாதிப்பு இல்லை. தான் அனைவருக்கும் முதல்வர், எனக்கு வாக்களிக்காத மக்களுக்கும் முதல்வர் என்று நம் முதல்வர் அடிக்கடி சொல்வது உண்மையென்றால், இந்த 10 சதவீத இடஒதுக்கீட்டை அமல்படுத்தி காட்டட்டும். அதுதான் தர்மம். நியாயம் ஆகும்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன்:
பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள, இடஒதுக்கீட்டு வரம்புக்குள் வராத பிரிவினருக்கு குறிப்பிட்ட சதவீதம் இடஒதுக்கீடு வழங்கி சட்டத் திருத்தத்தை நிறைவேற்ற வேண்டுமென மார்க்சிஸ்ட் கட்சி பல ஆண்டுகளுக்கு முன்பிருந்தே கோரி வந்துள்ளது. அதனடிப்படையில் இச்சட்டத் திருத்தத்தை நாடாளுமன்றத்திலேயே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆதரித்தது. ஆனால் வருமான வரம்பை குறைக்க வேண்டும் என வலியுறுத்துகிறோம். அதே நேரம், இடஒதுக்கீடு பெறாத பொதுப் பிரிவினருக்கு 10 சதவீத ஒதுக்கீடு வழங்க வேண்டும் என இச்சட்டம் வலியுறுத்துகிறது. தமிழக மக்கள் தொகையில் 5 சதவீதம் பேர் இடஒதுக்கீடு பெறாமல் இருப்பதாகத் தெரிகிறது. அவர்களுக்கு 10 சதவீதம் என்பது அதீத ஒதுக்கீடு. எனவே, தமிழகத்தில் இதுவரை இடஒதுக்கீடு பெறாத பொதுப்பிரிவினரின் மக்கள் தொகையைக் கணக்கீடு செய்வதற்கான ஒரு ஆணையத்தை அமைத்து, அதன் பரிந்துரைகள் அடிப்படையில் இச்சட்டத்தை அமல்படுத்த வேண்டும்.
தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி:
இன்றைய நடைமுறையைப் பின்பற்றி பொருளாதாரத்தில் நலிந்த பொதுப் பிரிவினருக்கு 10 சதவீத இடஒதுக்கீடு வழங்க காங்கிரஸ் முடிவு செய்து, 2014-ம் ஆண்டு சட்ட மசோதா தயாரிக்கப்பட்டது. இதை தாக்கல் செய்ய பாஜக 5 ஆண்டுகள் எடுத்துக் கொண்டது. பொருளாதாரத்தில் நலிந்த பொதுப் பிரிவினருக்கு 10 சதவீத இடஒதுக்கீட்டை எதிர்ப்பது சமூக நீதியாகாது. குறிப்பாக 5 ஆயிரம் ஆண்டுகள் சிரமப்பட்ட பெரும்பகுதி சமுதாயத்தினர், எங்களுக்கும் சமூக நீதி வழங்குங்கள் என்று கேட்பது சரியானதாக இருக்கும். ஆனால் எங்களைப் போலவே அவர்களும் சங்கடப்பட வேண்டும் என்று கூறுவது சமூகநீதியாகாது. சமூகநீதி என்பது மனிதகுலத்துக்கே பொதுவானதேயொழிய எந்தவொரு தரப்புக்கும் அது உரியதல்ல. 50 சதவீத இடஒதுக்கீட்டு வரம்பை மீற வேண்டிய அவசியம் ஏற்பட்டால், அனைத்து பிரிவினருக்குமான நீதியை அது வழங்கும் என்றால் அதனை காங்கிரஸ் கட்சி வரவேற்கிறது. எனவே, 10 சதவீத இடஒதுக்கீடு சரியான நடவடிக்கை என கருதி தமிழக காங்கிரஸ் அதனை இதயப்பூர்வமாக வரவேற்கிறது. பொதுப் பிரிவினர், எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கான இடஒதுக்கீட்டை மேலும் மேம்படுத்த இயலுமா என சட்ட வல்லுநர்களும், சமூக பங்கேற்பாளர்களும் விவாதிக்க வேண்டும்.
தமாகா தலைவர் ஜி.கே.வாசன்:
நம் நாட்டு மக்கள் யாராக இருந்தாலும், பொருளாதாரத்தில் பின்தங்கியிருந்தால் அவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கி அவர்களும் முன்னேற வேண்டும் என்பதுதான் தமாகாவின் கருத்து. அதே சமயம், ஏற்கெனவே வழங்கப்பட்டு வரும் இட ஒதுக்கீட்டுக்கும் பாதிப்பு வரக்கூடாது. மேற்கண்ட இரண்டின் அடிப்படையில் பின்தங்கியுள்ள அனைத்து தரப்பு மக்களும் பொருளாதாரத்தில் முன்னேற வேண்டும். அந்த வகையில் உச்ச நீதிமன்ற தீர்ப்பை தமாகா வரவேற்கிறது.