லவ் டுடே – விமர்சனம்

நடிப்பு: பிரதீப் ரங்கநாதன், இவானா, சத்யராஜ், ராதிகா சரத்குமார், யோகி பாபு, ரவீணா ரவி, ஆஜித் மற்றும் பலர்

இயக்கம்: பிரதீப் ரங்கநாதன்

இசை: யுவன் சங்கர் ராஜா

ஒளிப்பதிவு: தினேஷ் புருஷோத்தமன்

படத்தொகுப்பு: பிரதீப் இ.ராகவ்

தயாரிப்பு: ஏஜிஎஸ் என்டர்டெய்ன்மெண்ட்

பத்திரிகை தொடர்பு: நிகில்

சதா சர்வகாலமும் செல்போனும் கையுமாக திரிந்துகொண்டு, செல்போனை தவறாக பயன்படுத்தி சீரழிந்துகொண்டிருக்கும் இளைய தலைமுறையினர் – குறிப்பாக இளம் காதலர்கள் – தங்கள் காதலரின் செல்போனைப் பிடுங்கி நோண்டாமல் இருந்தால் தான் அவர்களது காதல் செழித்து வளரும் என்ற கருத்தைக் கூறும் ‘அடல்ட் காமெடி’ படமாக வெளிவந்திருக்கிறது ‘லவ் டுடே’.

ஐ.டி. நிறுவனத்தில் வேலை பார்க்கும் நாயகன் உத்தமன் பிரதீப்பும் (பிரதீப் ரங்கநாதன்), நாயகி நிகிதாவும் (இவனா) காதலிக்கிறார்கள். இவர்களின் காதல் நிகிதாவின் தந்தையான ஆச்சார பிராமணர் வேணு சாஸ்திரிக்கு (சத்யராஜ்) தெரியவர, அவர் காதலர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் முழுமையாக தெரிந்துகொண்டுவிட்டார்களா என்பதைக் கண்டறிய, உத்தமனின் செல்போனை நிகிதாவும், நிகிதாவின் செல்போனை உத்தமனும் ஒருநாள் மட்டும் மாற்றி வைத்துக்கொள்ள வேண்டும் என்றும், அதன்பிறகும் இருவரும் அதே காதலுடன் சுமுகமாக இருந்தால் திருமணத்துக்கு சம்மதிக்கிறேன் என்றும் நிபந்தனை விதித்து, செல்போன்களைப் பிடுங்கி மாற்றி கொடுத்து விடுகிறார். இருவரது செல்போன்களுக்குள்ளும் ஒளித்திருக்கும் ரகசியங்களும், ஆபாசங்களும் வெடித்துக் கிளம்ப, இருவருக்கும் இடையில் மோதல் ஏற்படுகிறது. மோதல் முடிவுக்கு வந்து இருவரும் சேர்ந்தார்களா? என்பது கிளைமாக்ஸ்.

உத்தமன் பிரதீப்பாக வரும் பிரதீப் ரங்கநாதன் கொஞ்சம் தனுஷ் மாதிரியும், கொஞ்சம் எஸ்.ஜே.சூர்யா மாதிரியும் நடித்து, நாயக கதாபாத்திரத்தை சேதாரம் இல்லாமல் காப்பாற்றியிருக்கிறார்.

நாயகி நிகிதாவாக வரும் இவானாவுக்கு நடிப்புத் திறமையை வெளிப்படுத்த வாய்ப்புள்ள கதாபாத்திரம். வாய்ப்பை சரியாக பயன்படுத்திக்கொண்டிருக்கிறார்.

டாக்டர் யோகி என்ற கதாபாத்திரத்தில் வரும் யோகி பாபு வழக்கமான நகைச்சுவையோடு, மனதைக் கலங்கடிக்கும் இன்னொரு பரிமாணத்தையும் காட்டியுள்ளார். நாயகனின் அக்காவாகவும் யோகி பாபுவுக்கு நிச்சயிக்கப்பட்ட மணப்பெண்ணாகவும் திவ்யா என்ற கதாபாத்திரத்தில் வரும் ரெவீனா ரவி, உறுதுணை நடிகையாக திரைக்கதைக்கு வலு சேர்த்திருக்கிறார்.

நாயகியின் தந்தை வேணு சாஸ்திரி என்ற ஆச்சார பிராமணர் கதாபாத்திரத்தில் வரும் சத்யராஜ், நாயகனின் அம்மா சரஸ்வதியாக வரும் ராதிகா சரத்குமார் ஆகியோர் அனுபவ நடிப்பால் தங்கள் கதாபாத்திரங்களை மெருகேற்றி இருக்கிறார்கள். ஏனைய நடிப்புக் கலைஞர்களும் நேர்த்தியாக நடித்திருக்கிறார்கள்.

நேரடி ஆபாச வசனங்கள் நெளிய வைக்கிறது. அவற்றை தவிர்த்து இருக்கலாம்.

செல்போன் யுகத்தில் இருக்கும் காதல் சிக்கல் மற்றும் சந்தேகங்களை உணர்வுப்பூர்வமாகவும், கலகலப்பாகவும் காட்சிப்படுத்தி தன்னை திறமையான இயக்குனராக மீண்டும் ஒருமுறை அடையாளப்படுத்தி இருக்கிறார் பிரதீப் ரங்கநாதன். மண்ணுக்குள் புதைத்த மாங்கொட்டை முளைத்துவிட்டதா என தினமும் தோண்டிப் பார்க்கும் சிறுவனைக் காட்டி மெசேஜ் சொல்லியிருப்பது அருமை. எனினும், ‘அடல்ட் காமெடி’ என்ற பெயரில் இடம் பெற்றிருக்கும் நேரடி ஆபாச வசனங்கள் அருவருப்பில் நெளிய வைக்கிறது.

 யுவன் சங்கர் ராஜாவின் இசையும், தினேஷ் புருஷோத்தமன் ஒளிப்பதிவும் படத்துக்கு பலம்.

’லவ் டுடே’ – தனுஷின் ‘துள்ளுவதோ இளமை’, ஷங்கரின் ‘பாய்ஸ்’ ரகம்!