ப்ரின்ஸ் – விமர்சனம்

நடிப்பு: சிவகார்த்திகேயன், மரியா ரியாபோஷாப்கா, சத்யராஜ், பிரேம்ஜி, சூரி, ஆனந்த்ராஜ், பிராங்ஸ்டர் ராகுல், சதீஷ், பாரத் மற்றும் பலர்

 இயக்கம்: கே.வி.அனுதீப்

 இசை: எஸ்.தமன்

 ஒளிப்பதிவு: மனோஜ் பரமஹம்சா

 தயாரிப்பு: சுரேஷ் புரொடக்சன்ஸ் & வெங்கடேஸ்வரா சினிமாஸ்

 பத்திரிகை தொடர்பு: சுரேஷ் சந்திரா, ரேகா

“மனிதநேயத்தை விட நாட்டுப்பற்று தான் முக்கியம்” என்ற வலதுசாரிகளின் கூக்குரல் உலகமெல்லாம் ஓங்கி ஒலித்துக் கொண்டிருக்கும் இன்றைய சூழலில், “ நாட்டுப்பற்றை விட மனிதநேயம் தான் முக்கியம்” என்ற முற்போக்குக் கருத்தை காதலும், காமெடியும் கலந்து துணிந்து சொல்ல வந்திருக்கிறது ‘ப்ரின்ஸ்’.

கடலூர் – புதுச்சேரி எல்லையில் உள்ள தமிழக கிராமம் தேவனகோட்டை. இந்த கிராமத்தில் வசித்து வருகிறார் ஓய்வு பெற்ற ஆர்.டி.ஓ. உலகநாதன் (சத்யராஜ்). சாதி, மதம் கடந்து காதலிக்கச் சொல்லும் முற்போக்குவாதியான அவர், எல்லா விஷயங்களையும் அரைகுறையாகத் தெரிந்து வைத்துக்கொண்டு, சகலமும் தனக்குத் தான் தெரியும் என்பதுபோல் பாவலா பண்ணிக்கொண்டு, ஊருக்குள் பெரிய மனிதராய் கம்பீரம் காட்டித் திரிகிறார். தன் முற்போக்குக் கொள்கைக்கு எதிராக தன் மகள் சொந்த சாதிக்குள் திருமணம் செய்துகொண்டாள் என்ற ஒரே காரணத்துக்காக அவளை குடும்பத்தில் சேர்க்காமல் தள்ளி வைத்திருக்கிறார்.

உலகநாதனின் மகன் அன்பரசன் (சிவகார்த்திகேயன்) பள்ளிக்கூடம் ஒன்றில் சமூகவியல் ஆசிரியராக இருக்கிறார். மாணவர்கள் தான் வகுப்பை கட் அடித்துவிட்டு சினிமாவுக்குப் போவார்கள் என்று பார்த்தால், இந்த ஆசிரியரும் ஸ்கூலை கட் அடித்து சினிமாப் பார்த்து, தலைமை ஆசிரியையின் கோபத்துக்கு ஆளாகி நிற்கிறார். அவருக்கு ஆங்கில அறிவும் அரைகுறை தான்.

அன்பரசன் பணிபுரியும் அதே பள்ளிக்கு ஆங்கில ஆசிரியையாக வருகிறார் இங்கிலாந்தை பூர்வீகமாகக் கொண்ட பிரிட்டிஷ் பெண் ஜெசிகா (மரியா ரியாபோஷாப்கா). ’கண்டதும் காதல்’ என்ற தமிழ்ச்சினிமா மரபுப்படி ஜெசிகாவைப் பார்த்ததும் ஒருதலையாய் காதலிக்கத் தொடங்குகிறார் அன்பரசன். ஓரிரு சந்திப்புகளுக்குப் பிறகு ஜெசிகாவும் அன்பரசன் மீது காதல் வயப்படுகிறார்.

ஆனால் சாதி, மதம் கடந்து காதலிக்கச் சொல்லும் உலகநாதன், அன்பரசன் – ஜெசிகா காதலை ஏற்க மறுக்கிறார். அவருடைய தாத்தா, இந்திய சுதந்திரப் போராட்ட காலத்தில் பிரிட்டிஷாரால் சித்ரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்டார் என்ற காரணத்தால், ஒரு பிரிட்டிஷ் பெண்ணை தன் வீட்டு மருமகளாக ஏற்க முடியாது என்று கடுமையாக எதிர்க்கிறார். அதுபோல் ஜெசிகாவின் அப்பாவும் இந்தக் காதலுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கிறார்.

இந்த இரண்டு அப்பாக்களின் எதிர்ப்புகளைச் சமாளித்து, சமாதானம் செய்து, ஜெசிகாவை அன்பரசன் எப்படி திருமணம் செய்கிறார் என்பது ‘ப்ரின்ஸ்’ படத்தின் மீதிக்கதை.

0a1o

தலைப்பைப் போல இந்த படத்தின் ப்ரின்ஸ் (இளவரசன்) – அன்பரசன் என்ற ஆசிரியராக வரும் – நாயகன் சிவகார்த்திகேயன் தான். வழக்கம் போல் காமெடியில் கலக்குகிறார். காதலில் வழிந்து சிரிக்க வைக்கிறார். அட்டகாசமாக டான்ஸ் ஆடி அசத்துகிறார். நடன உடலசைவில் நல்ல முன்னேற்றம் தெரிகிறது. கீப் இட் அப். கிளைமாக்சில், நாட்டுப்பற்றா? மனிதநேயமா? என்ற கேள்வி எழும்போது, மனிதநேயத்தின் பக்கம் நின்று வலுவாக வாதாடி சபாஷ் பெறுகிறார்.

அவரது காதலி ஜெசிகாவாக வரும் மரியா ரியாபோஷாப்கா உக்ரைன் நாட்டைச் சேர்ந்தவர் என்றாலும், பிரிட்டிஷ் பெண் கதாபாத்திரத்துக்குப் பொருத்தமாக இருக்கிறார். தன்னால் இயன்ற அளவு தனது கதாபாத்திரத்துக்கு நியாயம் சேர்த்திருக்கிறார்.

நாயகனின் அப்பா உலகநாதனாக வரும் சத்யராஜ் தன் பாணியில் அனுபவ நடிப்பை வெளிப்படுத்தி சிரிக்க வைக்கிறார். வில்லன் வேடத்தில் வரும் பிரேம்ஜியும் காமெடி பண்ணுகிறார். சூரியும், ஆனந்த்ராஜும் ஆளுக்கொரு காட்சியில் வந்து கலகலப்பூட்டுகிறார்கள்.

பார்வையாளர்களை சிரிக்க வைக்க வேண்டும் என்பதை மட்டுமே நோக்கமாகக்கொண்டு படத்தை இயக்கியிருக்கிறார் இயக்குனர் கே.வி.அனுதீப். அதில் ஓரளவு வெற்றியும் பெற்றிருக்கிறார். நாட்டுப்பற்றை விட மனிதநேயம் மகத்தானது என்ற கருத்தை உயர்த்திப் பிடித்ததற்காக இயக்குனருக்கு பாராட்டுகள்.

மனோஜ் பரமஹம்சாவின் வண்ணமயமான ஒளிப்பதிவும், தமனின் இசையமைப்பில் “ஜெசிகா”, “பிம்பிளாக்கி பிளாப்பி” பாடல்களும் படத்துக்கு பலம்.

‘ப்ரின்ஸ்’ – குடும்பத்துடன் பார்த்து, சிரித்து, மகிழலாம்!