”ரஜினிகாந்த் போன்ற பிரபலங்கள் பொறுப்பாக நடந்து கொள்ள வேண்டும்”: அருணா ஜெகதீசன் ஆணையம் அறிவுரை

துப்பாக்கிச் சூட்டில் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவிப்பதற்காக நடிகர் ரஜினிகாந்த் தூத்துக்குடி சென்றார். ஆறுதல் கூறிய பின் தூத்துக்குடியில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், `ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரானப் போராட்டத்தில் வன்முறை ஏற்பட்டதற்கு சமூக விரோதிகளே காரணம்’ என்றார். பின்னர், சென்னை விமான நிலையத்தில் பேசிய அவர், ‘ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் புகுந்த சமூக விரோதிகள் மீது காவல் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். காவல் துறையினர் மீது சமூக விரோதிகள் தாக்குதல் நடத்தியதால்தான் வன்முறை வெடித்தது. தொடர்ச்சியாகப் போராட்டத்தில் ஈடுபட்டால் தமிழகம் சுடுகாடாகத்தான் மாறும்’ என்று தெரிவித்தார்.

இதுதொடர்பாக நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று அருணா ஜெகதீசன் விசாரணை ஆணையம் சார்பில் ரஜினிக்கு சம்மன் அளிக்கப்பட்டது. இதற்கு ரஜினிகாந்த் எழுத்து மூலம் அளித்த பதிலில், “ஸ்டெர்லைட் ஆலை வன்முறை குறித்து எனக்கு எதுவும் தெரியாது. வன்முறையை ஏவிவிட்டது சமூக விரோதிகளாக இருக்கலாம் என்றுதான் நினைத்தேன். அப்படி எந்த சமூக விரோதியையும் எனக்கு தெரியாது” என்று தெரிவித்தார்.

இதுதொடர்பாக ஆணையத்தின் அறிக்கையில், “சமூக விரோதிகளால்தான் கலவரம் உண்டானது என்று, தான் கூறியதற்கு எவ்வித ஆதாரமும் இல்லை என ரஜினி கூறினார். ரஜினிகாந்த் போன்ற பிரபலம் ஒரு கருத்தைத் தெரிவிக்கும்போது அவர் கூறும் தகவலின் ஆதாரத்தை உறுதி செய்திருக்க வேண்டும். பிரபலங்கள் பொறுப்பாக நடந்துகொள்ள வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.