நானே வருவேன் – விமர்சனம்
நடிப்பு: தனுஷ், இந்துஜா, எல்லி அவ்ராம், பிரபு, யோகிபாபு, ஹியா தேவே, பிரணவ், பிரபாவ், பிராகின்ஸ்டன், செல்வின்ஸ்டன், துளசி, சரவண சுப்பையா, செல்வராகவன் மற்றும் பலர்
இயக்கம்: செல்வராகவன்
தயாரிப்பு: ’வி கிரியேஷன்ஸ்’ கலைப்புலி எஸ்.தாணு
இசை: யுவன் சங்கர் ராஜா
ஒளிப்பதிவு: ஓம் பிரகாஷ்
மக்கள் தொடர்பு: ரியாஸ் அஹமத் & டைமண்ட் பாபு
வெற்றிக் கூட்டணியான நடிகர் தனுஷ், இயக்குனர் செல்வராகவன், இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா ஆகியோர் நீண்ட நாட்களுக்குப் பின் மீண்டும் இணைந்து உருவாக்கியிருக்கும் படம் என்பதால், மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகியிருக்கும் படம் ‘நானே வருவேன்’. சைக்கோ – பாராநார்மல் ரகத்தைச் சேர்ந்த இப்படத்தில் கதிர், பிரபு என்ற இரட்டை வேடங்களில் நடித்திருக்கிறார் தனுஷ்.
கதிர் (தனுஷ்), பிரபு (மற்றொரு தனுஷ்) ஆகிய இருவரும் இரட்டை பிறவிகள். கதிர் குரூர புத்தி கொண்ட சைக்கோத்தனமும், பிரபு சாந்தமும் பயந்த சுபாவமும் கொண்டவர்கள். சிறுவயதில் கதிர் செய்யும் தவறுகளைக் கண்டு கோபம் அடையும் அப்பா அவனை அடித்து வீட்டுக்கு வெளியில் கட்டிப்போடுகிறார். அங்கிருந்து தப்பிச் செல்லும் கதிர் காட்டுக்குள் சைக்கோ ஒருவனிடம் சிக்கிக் கொள்கிறான். அவனை கொன்றுவிட்டு கதிர் தப்பிக்கிறான். பின்னர் கோபத்தில் அப்பாவையே குத்திக் கொன்றுவிடுகிறான். இதில் வெறுப்படைந்த அம்மா, கதிரை தனியே விட்டுவிட்டு பிரபுவுடன் தொலைதூரம் சென்றுவிட அதற்குப் பின் கதிர் என்ன ஆனான் என்பதற்கான அடையாளமே இல்லை.
வருடங்கள் உருண்டோடுகிறது. பிரபு வளர்ந்து, மணந்து, மனைவி (இந்துஜா), மகளுடன் வடநாட்டில் உள்ள நகரில் வசிக்கிறார். அவருடைய மகளுக்கு திடீரென்று பேய் பிடிக்கிறது. மகளைவிட்டுப் போக வேண்டுமென்றால் கதிரை கொல்ல வேண்டும் என்று பேய் நிபந்தனை விதிக்கிறது. மகளின் உயிரைக் காப்பாற்ற கதிரை கொல்ல புறப்படுகிறார் பிரபு. கதிர் எங்கே இருந்தார்? சைக்கோவான அவரை சாந்தமான பிரபுவால் கொல்ல முடிந்ததா? பேயின் பிடியிலிருந்து மகளை மீட்டாரா? என்ற கேள்விகளுக்கு விடை தருகிறது மீதிக்கதை.
பிரபுவாக அமைதியான பாந்தமான முகத்துடன் வரும் தனுஷ், இன்னொரு வேடமான கதிர் பாத்திரத்தில் அதகளம் புரிந்திருக்கிறார். மிருகங்களை வேட்டையாடப் போகிறேன் என்று சொல்லிவிட்டுப் போய் மனிதர்களை வேட்டையாடும் அவரது பாத்திரம் அதிர வைக்கிறது.
சைக்கோத்தனம் ஏறும்போது ஒருவித அசட்டையான சிரிப்புடன் அவர் நடந்துகொள்ளும் விதம் அலாதியானது. சிறு வயதில் மூர்க்கமாக இருந்தாலும் வளர்ந்ததும் தனக்கென்று ஒரு குடும்பமும் குழந்தைகளும் வேண்டும் என்று அவர் நினைப்பதும் அதை இழக்க முடியாமல் பரிதவிப்பதும் அந்த பாத்திரத்தின் மீது நமக்கு பரிவையே ஏற்படுத்துகிறது.
அதன் இன்னொரு திசையில் வரும் பிரபுவின் பாத்திரமும் அவரது நடிப்பில் அதிசயிக்க வைக்கிறது. தன் மகளைக் காப்பாற்ற கொலைகூட செய்யத் துணியும் காட்சி அபாரம்.
தனுஷின் நடிப்புக்கு அடுத்து இன்னொருவரை குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும் என்றால் தனுஷின் மகளாக வரும் சிறுமியின் நடிப்புதான். இன்னதென்று தெரியாத ஓர் அமானுஷ்ய சக்தி தன்னைத் தாக்கிவரும் வேளையில் அதை வெளியில் சொல்லவும் முடியாமல் அதைத் தாங்கவும் முடியாமல் பரிதவிக்கும் அந்த சிறுமியின் நடிப்பு அற்புதம். அந்தக் கண்களில்தான் எவ்வளவு வலி, ஏக்கம்..! இவருக்கு விருதுகள் நிச்சயம்.
தனுஷின் சிறுவயது பாத்திரங்களில் வரும் இரட்டையர்களும் அற்புதமாக நடித்திருக்கிறார்கள். அதிலும் கதிராக நடித்திருக்கும் சிறுவனின் கண்கள் காந்தம் போல் ஈர்க்கிறது. கதிரின் மகன்களாக வரும் இரட்டை சிறுவர்களும் கூட பாத்திரங்களின் தன்மை உணர்ந்து நடித்திருக்கிறார்கள்.
ஒரே காட்சியில் வந்துவிட்டு மறையும் செல்வராகவனின் பாத்திரம் தரும் விளைவுதான் படத்தின் போக்கையே நிர்ணயிக்கிறது.
இந்துஜாவுக்கு சிறிய கேரக்டர்தான். மகளை நினைத்து வேதனைப்படும் காட்சிகளை அவரது நடிப்பு நியாயம் செய்கிறது
மருத்துவராக வரும் பிரபுவும், நாயகனின் நண்பனாக வரும் யோகி பாபுவும் கதையை சரியாக நகர்த்துவதில் சிறந்த பங்களிப்பைச் செய்திருக்கிறார்கள்.
ஓம் பிரகாஷின் ஒளிப்பதிவில் இருளும் ஒளியும் சேர்ந்து நம்மை ரொம்பவே பயமுறுத்தி இருக்கிறது. அதே நேரத்தில் காட்டுப் பகுதியை எழில் கொஞ்சும் ஓவியமாக கேமரா பதிவு செய்திருக்கிறது.
யுவன் சங்கர் ராஜா பாடலிசையிலும், பின்னணி இசையிலும் பிரமாதப்படுத்தி இருக்கிறார். ஆரா சூரா பாடலும், தனுஷ் தனி ஆவர்த்தனமாக ஆடும் பாடலும் தியேட்டரை அதிர வைக்கிறது.
சிக்கலான, எதிரும்புதிருமான இரட்டையர்கள் கதையை எளிமையாகவும், விறுவிறுப்பாகவும், போரடிக்காமல் நகர்த்திச் செல்வதில் வெற்றி பெற்றிருக்கிறார் இயக்குனர் செல்வராகவன்.
தரமான படங்களையே தயாரிப்பவர் என்ற நற்பெயரை மீண்டும் ஒருமுறை தக்க வைத்திருக்கிறார் கலைப்புலி எஸ்.தாணு.
நானே வருவேன் – மீண்டும் மீண்டும் பார்க்கலாம்; ரசிக்கலாம்.