‘பொன்னியின் செல்வன்’ கதைச் சுருக்கம்
(’பொன்னியின் செல்வன்’ நாவலை படிக்காமல் திரைப்படம் பார்க்கச் செல்பவர்களுக்காகவும், திரைப்படம் பார்த்துவிட்டு, ஹீரோ யார், வில்லன் யார், கதை என்ன என்று புரியவில்லையே என அங்கலாய்ப்பவர்களுக்காகவும் இந்த கதைச் சுருக்கம்.)
’பொன்னியின் செல்வன்’ சொல்லும் சோழ சாம்ராஜ்யத்தின் கதையை எளிமையாக புரிந்துகொள்ள வேண்டுமென்றால், பராந்தக சோழன் காலத்திலிருந்து துவங்க வேண்டும்.
சோழ சாம்ராஜ்யத்தின் சக்கரவர்த்தி பராந்தக சோழன். இவருக்கு ராஜாதித்த சோழன், கண்டராதித்த சோழன், அரிஞ்சய சோழன் என மூன்று மகன்கள்.
பராந்தக சோழனுக்குப் பின்னர் சோழ அரியணை ஏற வேண்டிய ராஜாதித்த சோழன் போரில் மரணமடைந்துவிட, கண்டராதித்த சோழன் சக்கரவர்த்தி ஆகிறார். அவருக்கு மதுராந்தகன் என்ற ஆண் குழந்தை இருக்கிறது.
கண்டராதித்த சோழன் இறந்தபோது, அவரது மகன் மதுராந்தகன் குழந்தையாக இருந்ததால், அக்குழந்தையின் சித்தப்பாவான அரிஞ்சய சோழன் அரியணை ஏறுகிறார்.
அரிஞ்சய சோழனின் மறைவுக்குப் பின்னர் அவரது மகன் சுந்தர சோழன் (பிரகாஷ்ராஜ்) சக்கரவர்த்தி ஆகிறார்.
சுந்தர சோழனுக்கு ஆதித்த கரிகாலன் (விக்ரம்), குந்தவை (திரிஷா), அருள்மொழி வர்மன் என்ற பொன்னியின் செல்வன் (ஜெயம் ரவி) என மூன்று பிள்ளைகள் இருக்கிறார்கள்.
சுந்தர சோழனின் தலைமை அமைச்சர் பெரிய பழுவேட்டரையர் (சரத்குமார்). பெரிய பழுவேட்டரையரின் தம்பி சின்ன பழுவேட்டரையர் (பார்த்திபன்) கோட்டையின் பாதுகாப்பு அமைச்சர். இரண்டு பழுவேட்டரையர்களும் தான் ’பொன்னியின் செல்வன்’ கதையில் முக்கிய வில்லன்கள்.
நோய்வாய்ப்பட்ட சுந்தர சோழ சக்கரவர்த்தியை பழுவேட்டரையர்கள் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார்கள். இதனால் சக்கரவர்த்தியின் மூத்த மகனான ஆதித்த கரிகாலனுக்கு பழுவேட்டரையர்களை சுத்தமாய் பிடிக்காது. அவர் தஞ்சைக்கு வர விருப்பம் இல்லாமல், காஞ்சியிலே இருந்துகொண்டு போரே வாழ்க்கை என வாழ்ந்து வருகிறார்.
குந்தவைக்கும் பழுவேட்டரையர்களைப் பிடிக்காது.
அருள்மொழி வர்மன் சோழர்களின் ஆட்சிக்கு உட்பட்ட லங்காவில் (இலங்கையில்) நிலவும் அமைதியின்மையை சீர் செய்வதற்காக லங்கா சென்று அங்கேயே தங்கிவிடுகிறார்.
லங்கா அமைதியின்மைக்குக் காரணம் என்னவென்றால், சோழ சாம்ராஜ்ஜியத்தின் விசுவாசியான கொடும்பாளூர் தளபதி பராந்தகன் சிறிய வேளார், படையுடன் லங்கா சென்றபோது, படைகள் ஒன்று சேருவதற்குமுன் கொல்லப்படுகிறார். இதன்பின் குகையில் ஒளிந்திருந்த பாண்டிய மன்னன் வீரபாண்டியனும் லங்கா மன்னனோடு சேர்ந்துகொள்கிறார். இதனால் கோபமடையும் சோழ படைத்தளபதியும், சக்கரவர்த்தியின் மூத்த மகனுமான ஆதித்த கரிகாலன் எல்லோரையும் வெட்டிச் சாய்க்கிறார். வீரபாண்டியன் தப்பித்துப்போய் மீண்டும் குகையில் ஒளிந்து கொள்கிறார். அவர் இருக்கும் இடத்தை தேடிக் கண்டுபிடித்து அங்கே போகும் ஆதித்த கரிகாலன், தான் விடலைப்பருவத்தில் காதலித்த நந்தினி (ஐஸ்வர்யா ராய்) அங்கே வீரபாண்டியனின் மனைவியாக இருப்பதைப் பார்க்கிறார். வீரபாண்டியனை வெட்டப் போகும்போது, “வேண்டாம்” என்று நந்தினி தடுத்து கெஞ்சுகிறார். அதையும் மீறி வீரபாண்டியனின் தலையை வெட்டி வீழ்த்துகிறார் ஆதித்த கரிகாலன். இதனால் கதறியழும் நந்தினி பழி தீர்க்க சபதம் ஏற்கிறார். இதன்பிறகு நடக்கும் கலகங்களையும், களேபரங்களையும் ஒடுக்கத்தான் அருள்மொழி வர்மன் லங்கா செல்கிறார்.
”சோழ அரச மரபை அடியோடு வேரறுப்பேன்” என சபதம் ஏற்கும் வீரபாண்டியனின் மனைவி நந்தினி, இந்த சபதத்தை நிறைவேற்றுவதற்காக, தான் யார் என்பதை மறைத்து, வயோதிக பெரிய பழுவேட்டரையரின் இளம் மனைவியாகி, சோழ அரண்மனைக்குள் நுழைகிறார். இவர் தான் இக்கதையில் வில்லி.
லங்காவில் கொல்லப்பட்டாரே கொடும்பாளுர் தளபதி… அவருடைய மகள் வானதியை, குந்தவை தன் அரண்மனைக்கு அழைத்து வந்து தன் அருகிலேயே வைத்துக்கொள்கிறார். (இந்த வானதி பின்னாளில் அருள்மொழி வர்மன் என்ற பொன்னியின் செல்வன் என்ற ராஜராஜ சோழனின் மனைவி ஆகிறார்.)
சுந்தர சோழ சக்கரவர்த்தியைப் பீடித்திருக்கும் நோய் முற்றிக்கொண்டே வர, அவருக்குப் பிறகு சோழ சாம்ராஜ்யத்தின் அரியணை ஏறப்போவது யார் என்ற கேள்வி எழுகிறது. ஏற்கனவே பட்டத்து இளவரசராக இருக்கும் ஆதித்த கரிகாலன் சக்கரவர்த்தியானால், அவரை தங்கள் விருப்பம் போல் ஆட்டிப் படைக்க முடியாது என்று கருதும் பெரிய – சிறிய பழுவேட்டரையர்கள் சுந்தர சோழருக்குப் பிறகு, கண்டராதித்த சோழனின் மகனான மதுராந்தகனை (ரகுமானை) பொம்மை அரசராக்கி அதிகாரத்தைத் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள நினைக்கிறார்கள்.
இந்த சூழ்நிலையில், உடம்புக்கு முடியாமல் இருக்கும் தன் தந்தையை தன்னுடன் காஞ்சியில் வந்து தங்குமாறு அழைப்பு விடுத்து சுந்தர சோழ சக்கரவர்த்திக்கு ஒரு ஓலையும், தன் தங்கை குந்தவைக்கு ஒரு ஓலையும் எழுதி, அவற்றை தன் நம்பிக்கைக்குரிய நண்பனும் தளபதியுமான வந்தியத்தேவனிடம் கொடுத்து தஞ்சைக்கு அனுப்புகிறார் ஆதித்த கரிகாலன்.
அந்த வந்தியத்தேவன் தான் ‘பொன்னியின் செல்வன்’ கதையின் நாயகன். வந்தியத்தேவன் ஓலைகளை எடுத்துக்கொண்டு குதிரையில் வீராணம் ஏரிக்கரை வழியாக தஞ்சை நோக்கி செல்வதாக கதை ஆரம்பமாகிறது.
தஞ்சை செல்லும் வழியில், ஆழ்வார்க்கடியான் (ஜெயராம்) என்ற வீர வைணவ பிராமணரை சந்திக்கிறார் வந்தியத்தேவன். இந்த ஆழ்வார்க்கடியான் சோழ வம்சத்து முதல் மந்திரியான அனிருத்த பிரம்மராயருடைய ஒற்றன். இவர் ஒரு நபரை சந்தேகப்பட்டு பின் தொடர்கிறார். சந்தேகத்துக்குரிய அந்த நபரும், வேறு சிலரும் ஒரு குழுவாகக் கூடி, ஆதித்த கரிகாலனையும், அருள்மொழி வர்மனையும் கொல்ல திட்டமிடுகிறார்கள். அவர்கள் ரவிதாசன்,சோமன் உள்ளிட்ட பாண்டிய ஆபத்துதவிகள் (பாண்டியர்களின் விசுவாசிகள்). நந்தினியின் ரகசிய அடியாட்கள்.
வந்தியத்தேவன் தஞ்சை செல்லும் வழியில், தன் நண்பன் கந்தமாறனை சந்திக்க கடம்பூர் சம்புவரையர் மாளிகைக்கு வருகிறார். அங்கு பெரிய பழுவேட்டரையரும், அவருக்கு ஆதரவான சிற்றரசர்களும் ரகசியமாகக் கூடி, மதுராந்தகனை சோழ சாம்ராஜ்ஜியத்தின் சக்கரவர்த்தியாக அரியணையில் அமர்த்துவது குறித்து சதியாலோசனை செய்கிறார்கள். இதை வந்தியத்தேவன் ரகசியமாக தெரிந்துகொள்கிறார்.
தஞ்சை சென்று சேரும் வந்தியத்தேவன் அரண்மனைக்குள் நுழைய முடியாமல் தவிக்கிறார். பூ விற்கும் சேந்தன் அமுதன் என்பவர் அவருக்கு உதவுகிறார். பல இன்னல்களுக்கிடையே சுந்தர சோழனிடமும், குந்தவையிடமும் ஓலையை சேர்க்கிறார் வந்தியத்தேவன்.
அரண்மனையில் நிலவும் சதிச்சூழல், பழுவேட்டரையர்கள் மற்றும் நந்தினி ஆகியோரின் சூழ்ச்சி இவற்றை அறிந்த குந்தவை, சூழ்நிலையை சமாளித்து அரசாட்சியைக் காப்பாற்ற அருள்மொழி வர்மன் தஞ்சையில் இருக்க வேண்டும் என நினைத்து, அவரை லங்காவிலிருந்து தஞ்சைக்கு அழைத்து வருமாறு வந்தியத்தேவனுக்கு உத்தரவிடுகிறார்.
குந்தவையின் உத்தரவுக்கிணங்க அவர் கொடுத்த ஓலையுடன் அருள்மொழி வர்மனை சந்திக்க லங்கா கிளம்புகிறார் வந்தியத்தேவன்.
வந்தியத்தேவன் லங்கா செல்ல கோடியக்கரையில் பூங்குழலி என்ற பெண் படகோட்டி உதவுகிறார். இந்த பூங்குழலி தஞ்சையில் வந்தியத்தேவனுக்கு உதவி செய்த சேந்தன் அமுதனின் முறைப்பெண்.
லங்கா சென்று சேரும் வந்தியத்தேவன், அருள்மொழி வர்மனை சந்தித்து, குந்தவை தந்த ஓலையை கொடுக்கிறார்.
இதனிடையே பழுவேட்டரையர்களும் அருள்மொழி வர்மனை அழைத்துவர / பிடித்துவர கப்பல் அனுப்புகிறார்கள்.
அந்த கப்பலில் வந்தியத்தேவனும், அருள்மொழி வர்மனும் வரும்போது, கோடியக்கரை அருகே கப்பல் புயலில் சிக்குகிறது. இதில் மூர்ச்சையான இருவரையும் பூங்குழலி காப்பாற்றி நாகை புத்தவிகாரையில் சேர்க்கிறார்.
அருள்மொழி வர்மன் புயலில் சிக்கி, கடலில் மூழ்கி இறந்துவிட்டதாக சோழ நாடெங்கும் செய்தி பரவுகிறது. மக்கள் கொதிப்படைகிறார்கள். இதற்கு பழுவேட்டரையர்கள் தான் காரணம் என நினைக்கிறார்கள்.
தம்பி அருள்மொழி வர்மனைக் காண ரகசியமாக புத்தவிகாரைக்கு வரும் குந்தவை, வந்தியத்தேவனிடம், ஆதித்த கரிகாலனை கடம்பூர் சம்புவரையர் மாளிகைக்கு வரவிடாமல் தடுக்க வேண்டும்; மீறி வந்தால் அவரது உயிருக்கு ஆபத்து நேராமல் பாதுகாக்க வேண்டும் என்று கூறி அனுப்புகிறார்.
ஆனால், ஆதித்த கரிகாலனை பழிவாங்கத் துடிக்கும் நந்தினி, கடம்பூர் சம்புவரையர் மாளிகைக்கு வருமாறு அவருக்கு நயவஞ்சகமாக அழைப்பு விடுக்கிறார். நந்தினி மேல் காதல் மயக்கம் உள்ள ஆதித்த கரிகாலன் அந்த அழைப்பை ஏற்று வருகிறார்.
கடம்பூர் சம்புவரையர் மாளிகையில் ஆதித்த கரிகாலன் ரகசியமாக படுகொலை செய்யப்படுகிறார். அவரை கொன்றவர்கள் ரவிதாசன், சோமன் உள்ளிட்ட பாண்டிய ஆபத்துதவிகள். இவர்கள் நந்தினியின் ரகசிய அடியாட்கள்.
ஆனால் கொலைப்பழி வந்தியத்தேவன் மேல் விழுகிறது.
வந்தியத்தேவன் தன் மீதான கொலைப் பழியில் இருந்து எப்படி மீண்டு வருகிறார்? அருள்மொழி வர்மன் சோழ நாட்டை பழுவேட்டரையர்கள், நந்தினி, பாண்டிய ஆபத்துதவிகள் ஆகியோரின் சதி, சூழ்ச்சியிலிருந்து எப்படி மீட்கிறார்? என்பது தான் ’பொன்னியின் செல்வன்’ மீதிக்கதை.
’பொன்னியின் செல்வன்’ கதை அருள்மொழி வர்மன் என்ற பொன்னியின் செல்வன் என்ற ராஜராஜ சோழனின் பெருமை பேசுவதாக இருந்தாலும், கதையின் நாயகன் வந்தியத்தேவன் தான் என்பதால், கல்கி இந்த கதைக்கு ‘பொன்னியின் செல்வன்’ அல்லது ‘வந்தியத்தேவன்” என இரட்டைத் தலைப்பு கொடுத்திருந்தால் பொருத்தமாக இருந்திருக்கும்!