ட்ராமா – விமர்சனம்

நடிப்பு: கிஷோர், சார்லி, ஜெய் பாலா, வின்செண்ட் நகுல், வினோத் மின்னா, காவ்யா பெல்லு, மரியா பிரின்ஸ், பிரீத்திஷா பிரேம்குமார், விஜயலட்சுமி.ஆர் மற்றும் பலர்

இயக்கம்: அஜு கிழுமலா

தயாரிப்பு: சசிகலா புரொடக்சன்ஸ்

இசை: பிஜிபால்

ஒளிப்பதிவு: ஷினோஸ்

மக்கள் தொடர்பு: பரணி & திரு

ஒரே ஷாட்டில் இரண்டு மணி நேரம் ஒரு திரைப்படத்தைச் சொல்வது என்பது பெரிய சாதனை. அதிலும் ஒரு பிளாஷ்பேக் வைத்து சொல்வது என்பது மிகப் பெரிய சாதனை. இந்த மிகப் பெரிய சாதனையை ஒரே ஓட்டமாய் ஓடி வெற்றிகரமாக சாதித்திருக்கிறார் இயக்குநர் அஜு கிழுமலா.

ஒருநாள் இரவு. ஒரு கிராமப்புற காவல் நிலையத்தில் மூன்று நான்கு நிமிடங்கள் மட்டுமே மின்சாரம் கட் ஆகிறது. அந்த மூன்று நான்கு நிமிடங்களில் அங்கு பணிபுரியும் தலைமைக்காவலர் சார்லி  கொலை செய்யப்படுகிறார். அதே நேரத்தில் அங்கே இருக்கும் பெண் காவலர் ஒருவர் மீது பாலியல் தாக்குதலும் நடைபெறுகிறது. இவற்றையெல்லாம் செய்தது யார் என்று உயர் காவல் அதிகாரி கிஷோர் கண்டுபிடிப்பது தான் கதை.

0a1c

ஒரு சஸ்பென்ஸ் திரில்லராக நகரும் கதையில் ஒரு காவல் நிலையத்துக்குள்ளேயே கதை நடந்தாலும் அதன் உட்புறம், வெளிப்புறம் என்று கேமரா பல இடங்களில் கடந்து படம் பிடித்து இருக்கிறது.

கொலை நடந்த நேரம், வெளியிலிருந்து வரும் ஒரு நடன ஜோடி, எலெக்ட்ரிசியன்கள் இருவர், சாதிக் கொடுமைக்கு பயந்து தஞ்சமடையும் காதல் ஜோடி, அங்கு தலைமை இன்ஸ்பெக்டராக இருக்கும் ஜெய் பாலாவின் காதலியாக வரும் காவ்யா பெல்லு அங்கே இருக்கிறார்கள். அவர்கள் அத்தனை பேரின் மீதும் கிஷோரின் விசாரணை பாய்கிறது

காவ்யா பெல்லுவின் பிறந்தநாள் அது என்பதால் காதலியை காவல் நிலையம் வரவழைத்து கேக்கை வெட்டும் ஜெய் பாலாவின் காதல் ட்ராக்கும் உள்ளே கலக்கிறது.

விசாரணை அதிகாரியாக நடித்திருக்கும் கிஷோர் தூள் கிளப்பியிருக்கிறார். க்ளைமாக்சில் காவியா பெல்லுவை பகடைக்காயாக வைத்து அவர் குற்றவாளியைக் கண்டுபிடிக்கும் காட்சி அற்புதம்.

கொலைக்குள்ளாகும் சார்லி மற்றும் வின்செண்ட் நகுல் உள்ளிட்ட காவலர்களுக்கு இடையேயான பவர் பாலிடிக்ஸ் சரியாக வெளிப்பட்டிருக்கிறது.

கிஷோரின் விசாரணைக்கு உதவியாக இருக்கும் இன்னொரு காவல் அதிகாரியாக வரும் திருநங்கை கச்சிதமாக நடித்திருக்கிறார்.

இறுதிக் காட்சிகளில் காவியா பெல்லுவும், காதலனுடன் தஞ்சமடைந்த மரியா பிரின்ஸும் நடிப்பில் மிரட்டி இருக்கிறார்கள்.

ஒளிப்பதிவாளர் ஷினோஸின் கடின உழைப்பு படம் முழுக்க வெளிப்பட்டிருக்கிறது. ஒரே ஷாட் படம் என்றாலும், க்ளைமாக்ஸ் காட்சியிலும், கிஷோர் விசாரணை செய்யும் அந்த சிறு அறையிலும் பல்வேறு கோணங்களைக் காட்டி அசத்தியிருக்கிறார்.

பிஜிபாலின் இசை படத்துக்கு உறுதுணையாக அமைந்திருக்கிறது.

இப்படிப்பட்ட ஒரு சஸ்பென்ஸ் திரில்லருக்குள் ‘ நீட்’ தேர்வு எப்படிப்பட்ட வலியை எளிய மனிதர்களிடம் திணிக்கிறது என்று ஒரு கருத்தையும் சொல்லி ஆச்சரியப்பட வைக்கிறார் இயக்குனர்.

’டிராமா’ – பார்க்கலாம்!