இத்தனை இடர்பாடுகளுக்கும் இடையே தான் நீதிக்காக காத்திருக்கிறது பாஞ்சாங்குளம்!
கும்பல் தீண்டாமையும், இடைநிலை சாதி மனோபாவமும்!
அது ஒன்றும் ஷாப்பிங் மால் அல்ல. சுமார் 5 அடி அகலமும் 5 அடி நீளமும் கொண்ட சிறிய பெட்டிக்கடை. ஆறு தலித் சிறுவர்கள் பள்ளி சீருடையுடன் சென்று தின்பண்டங்கள் கேட்கிறார்கள். அந்த கடையின் உரிமையாளர் ”உங்களுக்கு தின்பண்டங்கள் கிடையாது. உங்களுக்கு பொருட்கள் கொடுக்கக் கூடாது. ஊர் கட்டுப்பாடு போடப்பட்டுள்ளது” என்று கூறுகிறார். அந்த குழந்தைகள் ”கட்டுப்பாடா? அப்படி என்றால் என்ன?” என்று கேட்க, ”உங்களுக்கு எந்த பொருட்களும் கொடுக்கக் கூடாது” என்றும், ”உங்களை ஒதுக்கி வைத்திருக்கிறார்கள்” என்றும் கூற, ஏமாற்றத்துடன் எதுவும் புரியாமல் அந்த குழந்தைகள் அங்கிருந்து திரும்புகிறார்கள்.
கட்டுப்பாடு என்றால் என்ன? சமூக புறக்கணிப்பு என்றும், பொருளாதார புறக்கணிப்பு என்றும் கூறலாம். ஆனால் கும்பல் தீண்டாமை என்பது தான் அதன் பொருள். எங்கள் நிலத்தில் உங்களுக்கு வேலை கிடையாது. எங்கள் தெருவின் வழியாக எங்கள் நிலத்தின் வழியாக நீங்கள் நடக்கக்கூடாது. எங்கள் கடைகளில் உங்களுக்கு பொருட்கள் இல்லை என்கிற பல கட்டுப்பாடுகளை ஆதிக்கசாதியினர் தலித்துகள் மீது விதித்துள்ளனர்.
எதற்காக கட்டுப்பாடு என்கிற பெயரில் இந்த கும்பல் தீண்டாமை அறிவிப்பு வெளியிடப்பட்டது? விசாரணையில் எவிடன்ஸ் அமைப்பு ஈடுபட்டது.
சங்கரன்கோவிலில் இருந்து சுமார் 6 கி.மீ தொலைவில் உள்ளது பாஞ்சாங்குளம்.
இக்கிராமத்தில் கோனார் சமூகத்து மக்கள் சுமார் 80 குடும்பங்களாவும், பறையர் சமூகத்து மக்கள் சுமார் 50 குடும்பங்களாகவும், குயவர் சமூகத்து மக்கள் சுமார் 12 குடும்பங்களாகவும் வசித்து வருகின்றனர்.
பறையர் சமூகத்து மக்கள் காலனி என்கிற பகுதியில் 25 குடும்பங்களாகவும் கோனார் சமூகத்து மக்கள் வசிக்கக்கூடிய பகுதிக்கு அருகாமையில் கீழத்தெரு என்கிற பகுதியில் 25 குடும்பங்களாகவும் வசித்து வருகின்றனர்.
இப்பகுதியில் உள்ள தலித்துகளுக்கு 2 சென்ட், 4 சென்ட் என்கிற சிறிய அளவிலான நிலம் மட்டுமே உள்ளது. கடந்த 20 ஆண்டு காலமாக தலித் இளைஞர்கள் நன்கு படித்து சற்று முன்னேறி வருகின்றனர். இக்கிராமத்தில் உள்ள அரசு துவக்கப் பள்ளிக்கூடத்தில் 9 தலித் மாணவர்கள் உட்பட 23 மாணவர்கள் படிக்கின்றனர்.
தலித்துகள் பெரும்பாலும் அங்குள்ள ஆதிக்கசாதியினரிடத்தில் கூலிகளாக பணிபுரிந்து வருகின்றனர். அவர்களது நிலத்தில் தான் விவசாயக் கூலிகளாக உள்ளனர்.
இங்குள்ள தலித் இளைஞர்கள் கிரிக்கெட் விளையாட்டில் மிகவும் திறன் வாய்ந்தவர்கள். இந்த கிராமத்தில் இரண்டு கிரிக்கெட் அணி இருந்திருக்கிறது. அந்த இரண்டு அணியிலும் தலித்துகளும் ஆதிக்கசாதியினரும் கலந்து இருப்பார்கள். கடந்த 2 வருடத்திற்கு முன்பு திடீரென்று ஆதிக்கசாதி இளைஞர்கள் சிலர் தலித் இளைஞர்களிடம் இனிமேல் உங்க சமூக ஆட்கள் மட்டும் தனி கிரிக்கெட் அணியாக இருங்கள். நாங்கள் தனி கிரிக்கெட் அணியாக இருக்கிறோம் என்று கூற தலித் இளைஞர்களும் ஒப்புக் கொண்டுள்ளனர்.
தலித் இளைஞர்களுக்கும் ஆதிக்கசாதி இளைஞர்களுக்கும் இடையே கிரிக்கெட் போட்டி நடந்துள்ளது. இதில் தலித் இளைஞர்கள் வெற்றி பெற ஆதிக்கசாதி இளைஞர்களுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இருபத்தெட்டு வயது தலித் இளைஞர் ஒருவரை 21 வயது ஆதிக்கசாதி இளைஞர் ஒருவர், ஏலே என்று ஆரம்பித்து போங்கடா பறப்பயலே என்று சாதி ரீதியாக இழிவாகப்பேசி பதிலுக்கு தலித் இளைஞர்களும் உங்கள் திறமையை விளையாட்டில் காட்டுங்கள் வாய் சவடாலில் காட்டாதீர்கள் என்று கூற இரு தரப்பினருக்கு இடையே பகைமை ஏற்பட்டுள்ளது. அங்குள்ள பெரியவர்கள் இரு தரப்பினரையும் அழைத்து சமாதானம் செய்துள்ளனர்.
இந்நிலையில் கடந்த 27.11.2020 அன்று பொன்ராஜ் (எ) ரூபன் என்கிற தலித் இளைஞரோடு சில தலித் இளைஞர்கள் நின்று பேசிக் கொண்டிருக்க அப்போது அங்கு வந்த ஆதிக்கசாதி இளைஞர்கள், பறய் பயலுகளா இங்க ஏண்டா நிக்கிறீங்க என்று கேட்க இரண்டு தரப்பினருக்கு இடையே வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. அன்று இரவு சுமார் 11.30 மணியளவில் ரத்தினராஜ் என்கிற தலித் இளைஞர் தனது சித்தப்பா வீட்டிற்கு ஆதிக்கசாதியினர் தெரு வழியாக செல்கிற போது, பறப்பய எப்படி எங்க தெரு வழியாக நடக்கலாம் என்று கூறி தாக்குலில் ஈடுபட்டுள்ளனர். தடுக்க சென்ற பொன்ராஜ் (எ) ரூபனுக்கும் காயம் ஏற்பட்டது.
இந்த வன்கொடுமையில் ஈடுபட்ட கருப்பசாமி த.பெ.ரவி, கருப்பசாமி த.பெ.ஈஸ்வரன், ராமசந்திரன் (எ) மூர்த்தி, வெள்ளப்பாண்டி ஆகிய 4 பேர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதில் ஈஸ்வரன் மகன் கருப்பசாமி என்பவர் மட்டும் கைது செய்யப்பட்டு ரிமாண்ட் செய்யப்படுகிறார். முதல் குற்றவாளியான அரசு பள்ளிக்கூட ஆசிரியர் கருப்பசாமி உட்பட மற்ற 3 பேரும் கைது செய்யப்படவில்லை. கைது செய்யப்பட்ட கருப்பசாமியின் தாயார் ராஜேஸ்வரி என்பவர் தலித் இளைஞர்கள் மீது புகார் தெரிவிக்க போலீசார் விசாரணையில் அது பொய்ப்புகார் என தெரிய வருகிறது. ஆகவே தலித் இளைஞர்கள் எவறும் கைது செய்யப்படவில்லை.
மூன்றாவது குற்றவாளியான ராமச்சந்திரன் என்பவருக்கு அக்னிபாத் திட்டத்தின் அடிப்படையில் வேலை கிடைக்க இருப்பதாகவும் அந்த வேலைக்கு இந்த வழக்கு தடையாக இருப்பதனால் தலித் மக்களிடத்தில் வழக்கினை வாபஸ் பெறக்கோரியும் ராமச்சந்திரன் கேட்டுள்ளார். அதுமட்டுமல்ல அந்த வழக்கு அடுத்த 20 அக்டோபர் 2022 அன்று நீதிமன்ற விசாரணைக்கு வர இருக்கிறது. ஆகவே அதற்குள்ளாகவே இதை ரத்து செய்தால் தான் வேலைக்கு செல்ல முடியும் என்பதால் ராமச்சந்திரன் இந்த முடிவினை எடுத்துள்ளார்.
ராஜு என்கிற தலித் சமூகத்தைச் சேர்ந்தவர். தலித்துகளிடத்தில் நமக்கு நீதி கிடைக்க வேண்டுமென்றால் வழக்கில் சமரசம் செய்து கொள்ளக்கூடாது என்று உறுதியாக கூறியிருக்கிறார். இது ராமச்சந்திரனுக்கு தெரியவர கடந்த 14 செப்டம்பர் 2022 அன்று இரவு 8.30 மணியளவில் ராஜு வீட்டிற்கு சென்று ராமச்சந்திரன், உன்னால் தான் எனக்கு வேலை கிடைக்க தடையாக இருக்கிறது. மரியாதையாக வழக்கினை வாபஸ் பெறவில்லை என்றால் எவனும் உயிரோடு இருக்க முடியாது என்று மிரட்டல விடுத்து சாதிரீதியாக இழிவாகவும் பேசியிருக்கிறார். வழக்கு வாபஸ் பெறுவதற்கு முன்பே இவ்வளவு திமிராக பேசுகிற நீ வழக்கினை வாபஸ் பெற்றுவிட்டால் எங்களை எப்படி எல்லாம் இழிவாக பேசுவாய் என்று தலித்துகள் கூற ராமச்சந்திரனின் தாயார் சுதா அங்கிருந்து சென்று ஆதிக்கசாதி நாட்டாமை மகேஸ்வரனை அழைத்து வந்துள்ளார்.
மகேஸ்வரன் தலைமையில் சுமார் 30 பேர் தலித் பகுதிக்கு வந்துள்ளனர். அங்கு வந்த மகேஸ்வரன் நீங்கள் வழக்கினை வாபஸ் வாங்கவில்லை என்றால் எங்கள் நிலத்தில் உங்களுக்கு வேலை இல்லை. எங்கள் தெரு வழியாக நடக்கக்கூடாது. எங்கள் கடைகளில் பொருள் இல்லை. நீங்கள் யாராவது செத்து போனால் பிணத்தை எங்கள் தெரு வழியாகவோ நிலம் வழியாகவோ எடுத்து செல்லக்கூடாது என்று கூறிவிட்டு வந்துள்ளார்.
மறுநாள் 15 செப்டம்பர் 2022 அன்று நாட்டமை மகேஸ்வரன் கடைக்கு 6 சிறுவர்கள் தின்பண்டம் வாங்க சென்றபோது தான் இந்த கொடுமை நடந்திருக்கிறது.
இந்த கிராமத்தில் 3 தலித் பெண்களை ஆதிக்கசாதியினர் திருமணம் செய்துள்ளனர். இதுகுறித்து தலித்துகளிடம் நம் இளைஞர்கள் யாராவது ஆதிக்கசாதி பெண்ணை திருமணம் செய்திருக்கிறார்களா என்று கேட்டதற்கு, அப்படி மட்டும் நடந்திருந்தால் ஊரையே எரித்திருப்பார்கள் என்று கூறினார்கள்.
ஆதிக்கசாதி தெருவின் வழியாக தலித்துகள் வாகனங்களில் ஏறி செல்லக்கூடாது, பேருந்துகளில் ஆதிக்கசாதியினர் சரிக்கு சமமாக உட்கார கூடாது, தனி சுடுகாடு, பள்ளிக்கூடங்களில் பாகுபாடு போன்ற பல்வேறு தீண்டாமை கொடுமைகள் இருந்தாலும் அதற்கு எதிராக தலித்துகள் பெரிய அளவில் எதிர்ப்பு தெரிவித்தது இல்லை. கடந்த சில வருடங்களாக தலித் இளைஞர்களின் கல்வியும் அரசியல் அறிவும் இதுபோன்ற தீண்டாமையை எதிர்த்து கேள்வி கேட்க ஆரம்பித்துள்ளனர்.
நீ மரியாதையாக பேசினால் நாங்களும் மரியாதையாக பேசுவோம். நீ இழிவாக பேசினால் நாங்களும் இழிவாக பேசுவோம் என்கிற நிலை வரத் தொடங்கியது. இதற்கிடையில் மகேஸ்வரன் ஊர் நாட்டாமையாக அறிவிக்க தீவிர மதவாதமும் சாதி வாதமும் கொண்ட மகேஸ்வரன் சாதி பேனர்களை வைப்பது, சாதி போஸ்டரை ஒட்டுவது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட தொடங்கினார்.
அதே நேரத்தில் தலித் இளைஞர்களும் அரசியல் ரீதியாக பலமடைந்து வந்ததனால் வன்கொடுமை வழக்கினை வாபஸ் வாங்கக்கூடாது என்பதில் உறுதியாக இருந்துள்ளனர். இதன் பின்னணியில் தான் இந்த கும்பல் தீண்டாமை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட 6 சிறுவர்களையும் சந்தித்தேன். ஊர் கட்டுப்பாடு போட்டு கடையில் எங்களுக்கு தின்பண்டங்கள் கொடுக்க மறுத்துவிட்டனர் என்று கூறியது மட்டுமல்லாமல் எங்கள் பள்ளிகூடத்தில் எங்களை தரையில் உட்கார வைப்பார்கள். அவங்க பசங்கள (ஆதிக்க சாதியினர்) பெஞ்சில் உட்கார வைப்பார்கள். மதிய உணவிற்கு அவங்க பசங்களுக்கு பள்ளிக்கூடத்தில் தட்டு இருக்கிறது. நாங்கள் வீட்டில் இருந்து தட்டினை எடுத்து சென்று சாப்பிட வேண்டும் என்று கூறினார்கள்.
பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ், கெஞ்சம் கூட இரக்கமில்லாமல் அந்த பள்ளிக்கூடத்தில் தீண்டாமை இல்லை என்கிறார். எந்த கல்வி அதிகாரியும் பாதிக்கப்பட்ட 9 தலித் குழந்தைகளை சந்திக்கவில்லை. அங்குள்ள ஆதிக்கசாதி குழந்தைகள், நாங்கள் பெஞ்சில் உட்காருவோம் அந்த பசங்க தரையில் உட்காருவார்கள் என்று தொலைக்காட்சி ஒன்றில் கூறியிருக்கின்றனர்.
உங்கள் வாதத்திற்கு எங்கள் குழந்தைகள் பொய் சொல்வார்கள் என்று எடுத்துக் கொண்டாலும் ஆதிக்கசாதி குழந்தைகளும் அதே கருத்தை கூறியிருக்கின்றனர். குழந்தைகள் எப்போதும் பொய் சொல்லப்போவதில்லை. ஆகவே இதுபோன்ற கருத்தினை அமைச்சர் வெளியிடக்கூடாது. பாதிக்கப்பட்ட பள்ளிக் குழந்தைகளை அமைச்சர் நேரடியாக சந்தித்து நடந்த உண்மைகளை கேட்டறிந்து தனது விளக்கத்தை கொடுக்க வேண்டும். அதுதான் நியாயம். கொரோனா சமயத்தில் சமூக இடைவெளிக்காக தரையில் பெயிண்டால் வரையப்பட்ட வட்டத்தில் தான் தாங்கள் உட்கார வைக்கப்படுகிறோம் என்று என்னிடம் தலித் குழந்தைகள் கூறினார்கள். இந்த பள்ளிக்கூடத்தில் கழிப்பறையும் இல்லை. குடிநீரும் இல்லை. அதுமட்டுமல்ல பள்ளி மேலாண்மை குழுவில் ஒருவர் கூட தலித்துகள் இடம்பெறவில்லை.
ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி என்ன செய்து கொண்டிருக்கிறார் என்றே தெரியவில்லை. இவர் எதற்காக அமைச்சராக இருக்கிறார் என்றும் புரியவில்லை.
இங்குள்ள தலித்துகள் இறந்து போனால் ஒன்று ஆதிக்கசாதியினர் குடியிருப்பு வழியாக பிணத்தை எடுத்து செல்லவேண்டும். இல்லையென்றால் ஆதிக்கசாதியினர் வயல் வழியாக பிணத்தை எடுத்து செல்ல வேண்டும். தங்களுக்கு தனி சுடுகாடு வேண்டும் என்று 20 ஆண்டு காலமாக தலித்துகள் போராடி வருகின்றனர். இதில் கொடுமை என்னவென்றால் கடந்த 2003ம் ஆண்டு சுடுகாட்டிற்கு 72 சென்ட் நிலம் தலித்துகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த விபரமே தற்போது தான் தெரிய வந்துள்ளது. ஒதுக்கிய நிலத்தை கூட 20 ஆண்டு காலம் காட்டாமல் இருப்பதை எப்படி எடுத்துக் கொள்வது?
தென்மண்டல காவல்துறை தலைவர் அஸ்ரா கர்க் அவர்களை வெகுவாக பாராட்டுகிறேன். வன்கொடுமையில் ஈடுபடும் கும்பலை அப்பகுதியில் இருந்து வெளியேற்றுவதற்கு வன்கொடுமை தடுப்பு சட்டம் 1989 விதிகள் 1995 பிரிவுகள் 11 – 13ல் விரிவாக விளக்கப்பட்டுள்ளது. அதனைப்பயன்படுத்தி தமிழகத்திலேயே முதன் முறையாக இத்தகைய வன்கொடுமையில் ஈடுபட்ட மகேஸ்வரன், ராமச்சந்திரனையும் வெளியேற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டிருக்கிறார்.
தலித்துகள் பகுதியில் மதவாதம் புகுந்து வருகிறது என்றெல்லாம் கூறி வந்தவர்கள் ஒன்றை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். பாஞ்சாங்குளம் பகுதியில் தலித் குடியிருப்பில் அண்ணலும் பெரியாரும் இருக்கிறார்கள். அங்குள்ள ஆதிக்கசாதி குடியிருப்பில் தான் மதவாத கும்பல் புகுந்திருக்கிறது. ஆகவே இடைநிலை சாதிக்காரர்களை மதவாத கும்பலுக்கு பலியாகாமல் பார்த்துக் கொள்வது திராவிட மாடல் செயல்பாட்டார்களின் நடவடிக்கையாக இருக்க வேண்டும்.
திராவிட மாடல், பெரியார் மண் என்று நம் தமிழகம் இந்தியாவிற்கு முன்மாதிரி மாநிலமாக இருக்கிறது. அதை மறுப்பதற்கில்லை. அதே நேரத்தில் இடைநிலை சாதி ஆதிக்க மனோபாவம் இங்கு நடத்துகிற கும்பல் தீண்டாமையை ஒருகாளும் அனுமதிக்க முடியாது.
இந்த இடைநிலைசாதி ஆதிக்க மனோபாவம் சில அமைச்சர்களிடத்திலும் இருப்பது வேதனை அளிக்கிறது.
நீ எஸ்சியா? ஒரு எஸ்சியை ஒன்றிய செயலாளர் ஆக பொறுப்பு கொடுப்பது தான் திராவிட மாடல் என்று அமைச்சர் பொன்முடி பேசியிருக்கிறார். மொத்த மக்கள் தொகையில் 3 – 4 சதவீதம் இருக்கக்கூடிய நீங்கள் அமைச்சராக இருக்கின்ற போது 21 சதவீதம் மக்கள் தொகை கொண்ட நாங்கள் ஒன்றிய செயலாளராக இருக்கக்கூடாதா? இதுபோன்ற மனோபாவம் தான் இடைநிலை சாதி மனோபாவம் என்கிறேன்.
இத்தனை இடர்பாடுகளுக்கும் இடையே தான் நீதிக்காக காத்திருக்கிறது பாஞ்சாங்குளம்.
-எவிடன்ஸ் கதிர்