“மம்மி”யை எதிர்க்கும் “டம்மி”: சில திமுக வேட்பாளர்கள் – சில விவரங்கள்!
வருகிற சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் சில திமுக வேட்பாளர்களும், அவர்கள் பற்றிய சில விவரங்களும் வருமாறு:
திருவாரூர்: மு.கருணாநிதி
திருவாரூர் சட்டமன்ற தொகுதியில் 1962 ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றது. அதன் பின்னர் 1967 ல் மார்க்சிஸ்ட்டும், 1971,1977 ல் திமுகவும், 1980, 1984,1989,1991 ஆகிய நான்கு தேர்தல்களில் தொடர்ந்து மார்க்சிஸ்ட்டும் வெற்றி பெற்றன. 1996, 2001, 2006, 2011 ஆகிய பேரவைச் தேர்தல்களில் திமுக வெற்றி பெற்றுள்ளது. 2011ல் நடைபெற்ற தேர்தலில் திமுக தலைவர் மு. கருணாநிதி போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
தற்போது திருவாரூரில் 2-ம் முறையாக களமிறங்குகிறார். 2011 சட்டப்பேரவை தேர்தலில் கருணாநிதி பெற்ற மொத்த வாக்குகள்: 1,09,014; இவருக்கு அடுத்தபடியாக அதிமுக வேட்பாளர் எம்.ராஜேந்திரன் 58,765 வாக்குகளை மட்டுமே பெற்றார். 2006 சட்டமன்ற தேர்தலில் இதே தொகுதியில் திமுக வேட்பாளர் யு.மதிவாணன் வெற்றி பெற்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது. 1977 முதல் இந்தத் தொகுதியில் திமுக 5 முறையும் இடது கம்யூனிஸ்ட் கட்சி 4 முறையும் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.
கொளத்தூர்: மு.க.ஸ்டாலின்
கடந்த 2011 சட்டப்பேரவை தேர்தலில் மு.க.ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியில் 68,677 வாக்குகள் எடுத்து வெற்றி பெற்றார். இவருக்கு அடுத்த இடத்தில் மிக நெருக்கமாக அதிமுக வேட்பாளர் சைதை துரைசாமி 65,943 வாக்குகளைப் பெற்றார்.
ராதாகிருஷ்ணன் நகர்: சிம்லா முத்து சோழன்
அதிமுக பொதுச்செயலாளரும், முதலமைச்சருமான ஜெயலலிதா, சமீபத்தில் நடந்த இடைத்தேர்தலில் ஒன்றரை லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற தொகுதி இது. அவர் தற்போது மீண்டும் இந்த தொகுதியில் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து திமுக ஒரு வலிமையான வேட்பாளரை நிறுத்தி கடும்போட்டியை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இந்த எதிர்பார்ப்புக்கு மாறாக சிம்லா முத்து சோழன் என்ற புதியவர் நிறுத்தப்பட்டிருக்கிறார். இவர் யார் என்று திமுகவினருக்கே தெரியவில்லை. “மம்மியை எதிர்க்க ஒரு டம்மியா?” என்று அவர்கள் குமுறுகிறார்கள். இவர் ஒரு வழக்கறிஞர். திமுக முன்னாள் அமைச்சர் சற்குணபாண்டியனின் மருமகள். “தலைவர், தளபதி, கனி(மொழி) அக்கா என் மேல் வைத்திருக்கும் நம்பிக்கையை காப்பாற்ற என்னால் இயன்ற வரை பாடுபடுவேன்” என்று சொல்லும்போது இவரது குரலில் சுரத்தில்லை.
காட்பாடி: துரைமுருகன்
திமுக-வின் மிக முக்கியமான வேட்பாளரான துரைமுருகன் காட்பாடி தொகுதியில் 1996, 2001, 2006, 2011 ஆகிய சட்டமன்ற தேர்தல்களில் தொடர்ச்சியாக வெற்றி பெற்றவராவார்.
கடந்த 1962-ம் ஆண்டு காட்பாடி தொகுதி ஏற்படுத்தப்பட்டு முதல் எம்எல்ஏவாக காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ராஜகோபால் நாயுடு வெற்றி பெற்றார். இதுவரை 12 சட்டப்பேரவை தேர்தலை சந்தித்துள்ள காட்பாடி தொகுதியில் திமுக 7, அதிமுக 3, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் காங்கிரஸ் கட்சி தலா ஒரு முறை வெற்றிபெற்றுள்ளன.
2006 சட்டமன்றத் தேர்தலில் துரை முருகன் 86,824 வாக்குகள் பெற்று அதிமுக வேட்பாளர் பி.நாராயணன் (51,677 வாக்குகள்) என்பவரை தோற்கடித்தார். ஆனால் 2011 தேர்தலில் துரைமுருகன் 75,064 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றாலும் அதிமுக வேட்பாளர் அப்பு என்கிற ராதாகிருஷ்ணன் 72,091 வாக்குகள் பெற்று நெருக்கமாக வந்து தோல்வியை தழுவினார்.
திருவண்ணாமலை: எ.வ.வேலு
திருவண்ணாமலை சட்டப்பேரவை தொகுதியில் கடந்த 1962-ம் ஆண்டு முதல் 2011-ம் ஆண்டு வரை நடைபெற்ற 12 தேர்தல்களில் திமுக 7 முறையும், காங்கிரஸ் கட்சி 5 முறையும் வெற்றி பெற்றுள்ளன. கடைசியாக 2011-ல் நடைபெற்ற தேர்தலில் திமுகவை சேர்ந்த முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு வெற்றிபெற்று சட்டமன்ற உறுப்பினராக உள்ளார்.
கீழ்பென்னாத்தூர் : கு.பிச்சாண்டி
கீழ்பென்னாத்தூர் சட்டபேரவை தொகுதிக்கு முதல் முறையாக 2011-ல் நடைபெற்ற தேர்தலில் அதிமுகவை சேர்ந்த ஏ.கே.அரங்கநாதன் வெற்றிபெற்று சட்டமன்ற உறுப்பினராக உள்ளார். 2011 தேர்தலில் கு.பிச்சாண்டி 79,582 வாக்குகளைப் பெற்று தோல்வியை தழுவினார், வெற்றி பெற்ற அதிமுக வேட்பாளர் ஏ.கே.அரங்கநாதன் 83,663 வாக்குகள் பெற்றார். குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் கு.பிச்சாண்டி தோல்வியை தழுவியது குறிப்பிடத்தக்கது.
திருக்கோவிலூர்: க. பொன்முடி
மிகப்பெரிய தொகுதியாக விளங்கிய முகையூர் தொகுதி, 2011ம் ஆண்டு திருக்கோவிலூர் தொகுதியாக மாற்றியமைக்கப்பட்டுள்ளது. தற்போது தேமுதிகவைச் சேர்ந்த எல். வெங்கடேசன், எம் எல் ஏவாக பதவி வகிக்கிறார். கடந்த முறை திமுக வேட்பாளர் எம்.தங்கம் 69,438 வாக்குகள் பெற்று தேமுதிக வேட்பாளரிடம் தோல்வியை தழுவினார். இம்முறை க.பொன்முடி அங்கு களமிறக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
ஈரோடு மேற்கு: எஸ்.முத்துசாமி
இங்கு 1984ம் ஆண்டுக்குப் பின் தொடர்ச்சியாக அதிமுக, திமுக ஆகிய இரு கட்சிகளும் மாறி மாறி வெற்றி பெற்றுள்ளன. கடந்த தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட எம்.யுவராஜாவை (தற்போதைய தமாகா இளைஞரணி தலைவர்), அதிமுக சார்பில் போட்டியிட்ட கே.வி.ராமலிங்கம் தோற்கடித்தது குறிப்பிடத்தக்கது, இம்முறை எஸ்.முத்துசாமி வேட்பாளராக இத்தொகுதிக்கு அறிவிக்கப்பட்டுள்ளார்.
திருச்சி மேற்கு: கே.என்.நேரு
1957 முதல் இதுவரை இந்தத் தொகுதியில் தலா 6 முறை திமுக, அதிமுக கட்சிகளும், 2 முறை கம்யூனிஸ்ட் கட்சியும் வென்றுள்ளன. தற்போதைய அதிமுக ஆட்சியில் முதல் இடைத்தேர்தல் நடைபெற்ற தொகுதி இது. 2011, ஏப்.13-ம் தேதி நடைபெற்ற சட்டப்பேரவை பொதுத் தேர்தலில் திமுகவின் கேஎன்.நேருவை (70,313 வாக்குகள்) எதிர்த்து போட்டியிட்டு வெற்றி பெற்ற என்.மரியம்பிச்சை (77,492 வாக்குகள்) சாலை விபத்தில் உயிரிழந்ததால் இடைத்தேர்தல் நடத்தப்பட்டது.2011, அக்.13-ல் நடைபெற்ற இந்த இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் மு.பரஞ்ஜோதி (69,029) போட்டியிட்டு, 14,684 வாக்குகள் வித்தியாசத்தில் (நேரு 54,345) வெற்றி பெற்றார்.
குறிஞ்சிப்பாடி: எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம்
கடந்த தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்ட ராஜேந்திரன் வெற்றி பெற்று எம்எல்ஏ ஆனார். 1962 முதல் 2011 வரை நடைபெற்ற தேர்தல்களில் இத்தொகுதியில் 8 முறை திமுக-வும், 4 முறை அதிமுக-வும் வெற்றி பெற்றுள்ளன. எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம் இத்தொகுதியில் 1996, 2001, 2006 சட்டப்பேரவை தேர்தல்களில் தொடர்ச்சியாக வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.
புதுக்கோட்டை: பெரிய நல்லரசு
கடந்த 1962 முதல் நடைபெற்ற 13 தேர்தல்களில் காங்கிரஸ் 6 முறையும், திமுக, அதிமுக தலா 3 முறையும், இந்திய கம்யூனிஸ்ட் 1 முறையும் வென்றுள்ளன.
2012 ஏப்.1-ம் தேதி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் எம்எல்ஏ எஸ்.பி. முத்துக்குமரன் விபத்தில் பலியானதைத் தொடர்ந்து அதே ஆண்டு நடைபெற்ற இடைத்தேர்தலில் தேமுதிக வேட்பாளர் என். ஜாகிர்உசேனைவிட 71,468 வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக வேட்பாளர் வி.ஆர். கார்த்திக் கொண்டைமான் வெற்றி பெற்றார்.
திருப்பத்தூர்: கே.ஆர்.பெரியகருப்பன்
சிவகங்கையில் உள்ள இது முதலில் திருப்பத்தூர் தொகுதி என இருந்தது. பின்னர் திருக்கோஷ்டியூர் தொகுதி என மாறியது. மீண்டும் திருப்பத்தூர் தொகுதி என மாறியுள்ளது.
1952 முதல் 14 தேர்தல்களை சந்தித்துள்ள இத்தொகுதியில் சுயேச்சை ஒரு முறையும், திமுக ஏழு முறையும், இந்திய தேசிய காங்கிரஸ் இரண்டு முறையும், அதிமுக மூன்று முறையும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஒரு முறையும் வெற்றி பெற்றுள்ளன. 2006, -2011 ஆகிய இரு தேர்தல்களிலும் கேஆர்.பெரியகருப்பன் (திமுக) வெற்றி பெற்றுள்ளார்.
மதுரை மையம்: பி.டி.ஆர். பழனிவேல் தியாகராசன்
நியூயார்க் பல்கலைக் கழகத்தின் விரிவுரையாளர், உலக முன்னணி நிறுவனங்களின் நிதி ஆலோசகர் ஆகிய பொறுப்புகளிலிருந்து அரசியலுக்கு களம் புகுந்துள்ளார். திமுக-வின் முன்னணி தலைவர்களில் ஒருவராகத் திகழந்த பி.டி.ஆர். பழனிவேல்ராஜனின் மகன். அமெரிக்க-ஐரோப்பிய-ஆசிய அளவில் நடைபெற்ற அறிவியல் கருத்தரங்குகளில் ஆய்வுக் கட்டுரைகளை சமர்ப்பித்துள்ள தியாகராசன், பணிச்சூழலியல் துறையில் (எர்கோனமிக்ஸ்) சர்வதேச தர ஆணையத்தில் உறுப்பினராகவும் செயல்பட்டிருக்கிறார்.
1957-ம் ஆண்டு முதல் ஒரு இடைத்தேர்தல் உட்பட இதுவரை 14 தேர்தல்களை இந்த தொகுதி சந்தித்துள்ளது. இதில் காங்கிரஸ் கட்சி 4 முறையும், திமுக 5 முறையும், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி 2 முறையும், அதிமுக, திமுக, சுயேட்சை தலா ஒருமுறையும் வெற்றி பெற்றுள்ளன.
2006-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் பி.டி.ஆர். பழனிவேல்ராஜன்(திமுக) வெற்றி பெற்றார். அவர் மறைவை தொடர்ந்து அதே ஆண்டில் நடைபெற்ற இடைத்தேர்தலில் கவுஸ்பாட்ஷா(திமுக) வெற்றி பெற்றார். 2011-ம் ஆண்டு தேர்தலில் ஆர்.சுந்தர்ராஜன்(தேமுதிக) அதிமுக கூட்டணியில் வெற்றி பெற்றார். இந்நிலையில் கல்வியாளரான பிடிஆர். பழனிவேல் தியாகராசனை திமுக களமிறக்குகிறது.
அருப்புக்கோட்டை: கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன்
1977ல் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் எம்ஜிஆரை தேர்ந்தெடுத்து தமிழக முதல்வராக்கிய சிறப்பு பெற்றது அருப்புக்கோட்டை தொகுதி. இத்தொகுதியில் அனைத்திந்திய பார்வர்டு பிளாக் கட்சி ஒருமுறையும், 6 முறை அதிமுகவும், 4 முறை திமுகவும் வெற்றிபெற்றுள்ளன. திருச்சுழி தொகுதி உருவாக்கப்படுவதற்கு முன் அருப்புக்கோட்டை தொகுதியில் 2006ல் திமுகவின் தங்கம்தென்னரசும், 2011ல் அதிமுகவைச் சேர்ந்த வைகைசெல்வனும் வெற்றிபெற்றனர்.
திருச்சுழி: தங்கம் தென்னரசு
திருச்சுழி தனித் தொகுதியாக பிரிக்கப்பட்டது முதல் 2006, 2011 இரு தேர்தல்களிலும் திமுகவின் தங்கம்தென்னரசே வெற்றிபெற்றுள்ளார்.