லால் சிங் சத்தா – விமர்சனம்
நடிப்பு: அமீர்கான், கரீனா கபூர் கான், நாக சைதன்யா மற்றும் பலர்
இயக்கம்: அத்வைத் சந்தன்
தயாரிப்பு: அமீர்கான்
இசை: தனுஷ் டிக்கு
ஒளிப்பதிவு : சத்யஜித் பாண்டே
மக்கள் தொடர்பு: ஸ்ரீவெங்கடேஷ்
1994ஆம் ஆண்டு வெளிவந்த ‘Forrest Gump’ என்ற ஹாலிவுட் திரைப்படத்தின் உரிமையை வாங்கி, அதன் கதையைத் தழுவி எடுக்கப்பட்டது, ‘லால் சிங் சத்தா’. அந்த ஹாலிவுட் படத்தில் நடித்த டாம் ஹாங்ஸுக்கு சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருது கிடைத்தது. மேலும் சில ஆஸ்கர் விருதுகளையும் இந்தப் படம் பெற்றது. அதனாலும், இந்தியாவின் தலைசிறந்த நடிகர்களில் ஒருவரான அமீர்கான் தயாரித்து நடித்திருக்கும் படம் என்பதாலும், மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது ‘லால் சிங் சத்தா’.
லால் சிங் சத்தா (அமீர்கான்) ஒரு ரெயில் பயணத்தின்போது, சக பயணிகளிடம் தனது வாழ்க்கைக் கதையை சொல்வதாக படம் ஆரம்பிக்கிறது.
சிறு வயதில், லால் சிங் சத்தாவின் ஊனமுற்ற வித்தியாசமான உருவத்தைப் பார்த்து மற்ற சிறுவர்கள் கேலி செய்கிறார்கள். கல்லால் அடிக்கிறார்கள். அதற்கு பயந்து லால் சிங் ஓடுகிறான். அந்த ஓட்டமே அவனை ஊக்குவிக்கிறது. அவனுடைய ஊனம் குணமாகிறது. அவனை ஓட்டப்பந்தய வீரனாக உயர்த்துகிறது.
பக்கத்து வீட்டு சிறுமி ரூபா (கரீனா கபூர் கான்) மீது அவனுக்கு சின்ன வயதில் ஏற்பட்ட ஈர்ப்பு, வாலிபன் ஆனபின் காதலாக தொடர்கிறது. அவளுக்கும் லால் சிங்கை பிடிக்கிறது. என்றாலும் அவளுக்கு சினிமா கதாநாயகி ஆகவேண்டும் என்பது கனவு. அதற்காக முயற்சிக்கிறாள்.
இளைஞன் லால் சிங் ராணுவத்தில் சேருகிறான். இளம்பெண் ரூபா, சினிமாவில் நடிக்க தயாராகிறார். இருவரும் மறுபடியும் சந்தித்தார்களா, அவர்களின் காதல் என்னவாகிறது என்ற கேள்விகளுக்கு விடை அளிக்கிறது படத்தின் மீதி கதை.
ஒரு இளைஞனின் சுயசரிதைக்குள் – எமெர்ஜென்சியை ரத்து செய்தது, பொற்கோவிலுக்குள் ராணுவம் நுழைந்தது, இந்திராகாந்தி சுட்டுக்கொல்லப்பட்டது, மண்டல் அறிக்கை அமலுக்கு எதிராக மாணவர்கள் போராடியது, ராமர் கோயில் கட்ட வேண்டும் என்று கோரி அத்வானி ரத யாத்திரை மேற்கொண்டது, பிரதமரான வாஜ்பாய் விருது வழங்கும் விழாவில் பங்கேற்றது, மும்பை நட்சத்திர ஓட்டலுக்குள் பயங்கரவாதிகள் நுழைந்தது, கார்கில் போர், மன்மோகன் ஆட்சிக்காலத்தில் அன்னா ஹசாரே உண்ணாவிரதப் போராட்டம் நடத்தியது போன்ற பரபரப்பான அரசியல் நிகழ்வுகளைப் புகுத்தி, திரைக்கதைக்கு விறுவிறுப்பு கூட்டியிருக்கிறார் இயக்குனர் அத்வைத் சந்தன்.
மேலோட்டமாகப் பார்த்தால், இந்தியாவின் வெவ்வேறு காலகட்ட அரசியல் தடங்களின் ஊடே ராணுவத்தில் பணியாற்றிய ஒரு பஞ்சாபியின் வாழ்க்கையைச் சொல்லும் படம் இது எனத் தோன்றலாம்.
உண்மையில் படம், அது கடந்தது.
“ஸ்மார்ட்நெஸ்” என்று சிலாகிக்கப்படும் புத்திசாலித்தனம்தான் வாழ்வின் வெற்றிக்கு அடிப்படை என்று நிறுவப்பட்டுள்ள திடநம்பிக்கையை – தூளாக்கி, நீரில் கரைத்துவிடுகிறது. “எல்லோரையும் போல” வழக்கமான வேகத்துடன் கற்கும் / புரிந்துணர்வு திறன் இல்லாதவன் “முட்டாள்” அல்லது “வேலைக்கு ஆகமாட்டான்” என்பதான நவீன வாழ்வின் கண்ணோட்டத்தை, வட்டமிட்டு கேள்விக்குள்ளாக்குகிறது.
அன்பே வாழ்வின் அடிக்கல் என்பதை படம் அழுத்தமாக பதிவு செய்கிறது.
லால் சிங் சத்தாவாக அமீர்கான் படம் பார்ப்பவர்களுக்குள் ஆழமாக பதிந்து விடுகிறார். வெள்ளை மனம் கொண்ட சிறுவனாக, இளைஞராக, முரடராக, நட்புக்கு இலக்கணமாக, நல்ல காதலராக பன்முகம் காட்டி, இந்திய திரையுலகின் மிக சிறந்த நடிகர்களில் ஒருவர் என்பதை நிரூபித்து இருக்கிறார்.
அவருடைய காதலியாக கரீனா கபூர் கான், அமீர்கானுக்கு ஈடுகொடுத்து நடித்து இருக்கிறார். ராணுவ நண்பராக நாக சைதன்யா வருகிறார். அம்மாவாக மோனாசிங், தாய்பாசத்தை வெளிப்படுத்தும் காட்சிகளில் நெகிழவைக்கிறார்.
அமீர்கான்-கரீனா கபூர் கான் தொடர்பான காட்சிகளில், இசையமைப்பாளர் தனுஷ் டிக்குவின் பின்னணி இசை காதல் கவிதையாக மனதை வருடுகிறது.
போர்க்கள காட்சிகளில், சத்யஜித் பாண்டேயின் ஒளிப்பதிவு பதற்றம் கூட்டுகிறது.
‘லால் சிங் சத்தா’ – இதயத்தை இதமாக வருடும் வெண்சிறகு!