பாஜகவை கழற்றிவிட்ட நிதிஷ்குமார், தேஜஸ்வியுடன் கை கோர்த்தார்: இருவரும் பதவியேற்பு

பீகாரில் நேற்று பாஜக கூட்டணியிலிருந்து வெளியேறி முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்த நிதிஷ்குமார், தேஜஸ்வி யாதவின் ராஷ்ட்ரிய ஜனதா தளத்துடன் இணைந்து, இன்று மீண்டும் ஆட்சியமைத்துள்ளார். முதலமைச்சராக நிதிஷ்குமாரும், துணை முதலமைச்சராக தேஜஸ்வி யாதவும் இன்று மதியம் 2 மணிக்கு பதவியேற்றனர்.

பீகாரில் கடந்த 2020ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டியிட்ட நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளமும், பாரதிய ஜனதா கட்சியும் மொத்தமுள்ள 243 இடங்களில், 127 இடங்களை கைப்பற்றி ஆட்சி அமைத்தன. ஐக்கிய ஜனதா தளத்தைவிட, பாஜக அதிக இடங்களில் வென்ற போதும், நிதிஷ்குமாருக்கு முதலமைச்சர் பதவியை விட்டுத்தந்தது பாஜக.

இச்சூழ்நிலையில் கடந்த சில நாட்களாக இவ்விரு கட்சிகள் இடையே உரசல்கள் அதிகரித்தன. தங்களது கட்சியை பலவீனப்படுத்துவதற்கு 22பாஜக முயற்சித்து வருவதாக குற்றம்சாட்டிவந்த ஐக்கிய ஜனதா தளம், ஒன்றிய அரசின் பல்வேறு கூட்டங்களை புறக்கணித்தது. அதேபோல் பிரதமர் மோடியுடனான சந்திப்பையும் கடந்த சில மாதங்களாக முதலமைச்சர் நிதிஷ் குமார் தவிர்த்து வந்தார். குறிப்பாக குடியரசுத் தலைவர் பதவியேற்பு விழா முதல் நிதி ஆயோக் கூட்டம் வரை, 3 வாரங்களில் ஒன்றிய அரசின் நான்கு முக்கிய நிகழ்ச்சிகளை நிதிஷ் குமார் புறக்கணித்தார்.

இதனால், பாஜக உடனான கூட்டணியில் இருந்து அவர் வெளியேற உள்ளதாக கூறப்பட்டு வந்த நிலையில், , எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்களுடன் பாட்னாவில் உள்ள தனது வீட்டில் ஆலோசனை நடத்தினார் நிதிஷ் குமார். இதனைத் தொடர்ந்து ஆளுநர் பகு சவுகானை சந்தித்து ராஜினாமா கடிதத்தை அளித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து வெளியேறுவதாகவும் தெரிவித்தார். முன்னதாக பாஜக கூட்டணியிலிருந்து வெளியேறினால் நிதிஷ்குமாருக்கு ஆதரவு அளிக்க ராஷ்ட்ரிய ஜனதா தளம் மற்றும் காங்கிரஸ் கட்சிகள் முன்வந்தன.

இதனையடுத்து எதிர்க்கட்சித் தலைவரான ராஷ்ட்ரிய ஜனதா தளத்தின் தேஜஸ்வி யாதவையும் நிதிஷ்குமார் சந்தித்து பேசினார். கடந்த காலங்களில் நிகழ்ந்ததை மறந்துவிட்டு, மீண்டும் ஒன்றிணைந்து பயணிப்போம் என அப்போது நிதிஷ் குமார் தேஜஸ்வி யாதவிடம் தெரிவித்ததாக தகவல் வெளியானது.

பின்னர் இரு தலைவர்களும் இணைந்து ஆளுநரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினர். ராஜினாமா செய்த ஒரு மணி நேரத்துக்குள் மீண்டும் ஆளுநரை சந்தித்து நிதிஷ்குமார் ஆட்சி அமைக்க உரிமை கோரியது குறிப்பிடத்தக்கது.

இதன்படி இன்று பிற்பகல் 2 மணி அளவில், தலைநகர் பாட்னாவில் உள்ள ஆளுநர் மாளிகையில், பதவி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது, பீகார் மாநிலத்தின் முதலமைச்சராக, எட்டாவது முறையாக, நிதிஷ் குமார் பதவி ஏற்றுக் கொண்டார். துணை முதலமைச்சராக, தேஜஸ்வி யாதவ் பதவி ஏற்றுக் கொண்டார். அவர்களுக்கு ஆளுநர் பாகு சவுகான் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். இந்த விழாவில், தேஜஸ்வி யாதவின் மனைவி, தாய், சகோதரர் தேஜ் பிரதாப் யாதவ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

243 உறுப்பினர்களைக் கொண்ட பீகார் சட்டப்பேரவையில் தற்போது ராஷ்ட்ரிய ஜனதா தளத்துக்கு 79 உறுப்பினர்கள் உள்ளனர். தேசிய ஜனநாயக் கூட்டணியிலிருந்து வெளியேறிய ஐக்கிய ஜனதா தளத்துக்கு 45 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். பாஜகவுக்கு 77 உறுப்பினர்கள் உள்ளனர். காங்கிரஸுக்கு 19 எம்.எல்.ஏ.க்களும், இடதுசாரிகளுக்கு 16 எம்.எல்.ஏ.க்களும் உள்ளனர்.