பெருந்தொற்றுக் காலத்தின் தரவுப் புத்தகம், தமிழில்…!

கொரோனா பெருந்தொற்றால் தமிழ்நாட்டுப் பொருளாதாரத்துக்கு ஏற்பட்ட உடனடிப் பாதிப்புகளை பல்வேறு கோணங்களில் ஆராய்ந்து, அரசு எடுக்க வேண்டிய குறுகிய, நீண்ட கால நடவடிக்கைகளைப் பரிந்துரைக்கிறது, “பெருந்தொற்றும் பொருளாதாரக் கொள்கையும்” என்ற புத்தகம். சென்னை வளர்ச்சி ஆய்வு நிறுவனத்தின் (Madras Institute of Development Studies – MIDS) இயக்குநர் ப.கு.பாபு இந்தப் புத்தகத்தின் தொகுப்பாசிரியர். “Economic Policy in Covid 19 Times” என்ற தலைப்பில் ஆங்கிலத்திலும் இந்தப் புத்தகம் வெளியாகியிருக்கிறது.

சென்னை வளர்ச்சி ஆய்வு நிறுவனத்தில் (எம்.ஐ.டி.எஸ்.) நேற்று நடந்த நிகழ்ச்சியில், அதன் தலைவரும் முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையருமான நீ. கோபாலஸ்வாமி, தமிழ்நாடு அரசின் நிதி, திட்டம், மனிதவளத் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், தமிழ்நாடு மாநிலத் திட்டக்குழுவின் துணைத் தலைவர் ஜெ.ஜெயரஞ்சன் ஆகியோர் இரண்டு புத்தகங்களையும் வெளியிட்டார்கள்.

பெருந்தொற்றால் வீடுகளில் வேலை செய்யும் அடித்தட்டு மக்களின் வாழ்வாதாரம் எந்த அளவுக்குப் பாதிக்கப்பட்டிருக்கிறது என்பதிலிருந்து தமிழ் பதிப்புத் தொழிலில் பெருந்தொற்று ஏற்படுத்திய தாக்கம் வரை பலதளங்களில், பலநிலைகளில் தமிழ்நாட்டுக்கான சவால்களை உரிய தரவுகளுடன் அலசும் 19 ஆய்வாளர்களின் கட்டுரைகள் இந்தப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளன.

அரசின் கொள்கை முடிவுகள், சமூகநீதித் திட்டங்களுக்கு கள ஆய்வுத் தரவுகள், புள்ளிவிவரங்கள் எந்த அளவுக்கு முக்கியமாவை என்பதை நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் பழனிவேல் ராஜனும் ஜெயரஞ்சனும் கோடிட்டுப் பேசினார்கள்.

இப்படியான ஆய்வு நிறுவனங்களிலிருந்து ஆங்கிலத்தில் நூல்கள் வருவது வழக்கமே. ஆனால், எம்.ஐ.டி.எஸ். இயக்குநரும் தொகுப்பாசிரியருமான ப.கு.பாபு பெருமுயற்சி எடுத்து அதைத் தமிழில் வெளியிட்டிருப்பது, அரசு மட்டுமின்றி, தமிழ்நாட்டுப் பொருளாதார அசைவுகளைத் தீர்மானிக்கும் இதர அரசு சாரா மற்றும் தனியார் அமைப்புகளின் தனிக் கவனத்துக்கும் செயலூக்கத்துக்கும் உரியது.

எந்த ஒரு புனைவிலக்கியத்தைவிடவும் கூடுதலாக மக்களுக்கு நேரடியான நடைமுறைப் பலன்களை அளிக்க உதவும் புத்தகம் இது. வரவேற்போம். வாசித்து அறிவோம். வாழ்வாதாரம் இழந்த மக்களை மீட்க உரிய வகையில் பகிர்வோம்.

-Elayaperumal Sugadev