வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார் மு.க.ஸ்டாலின்: “கொள்கை ரீதியான திமுக கூட்டணி தொடரும்!”

”தமிழகத்தில் திமுக கூட்டணி தொடரும். இது வெறும் தேர்தலுக்காக அமைந்த கூட்டணி அல்ல. கொள்கை ரீதியான கூட்டணி” என்று திமுக தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் கூறினார்.
மலையாள ஊடகம் சார்பில் இன்று நடத்தப்பட்ட நிகழ்ச்சி ஒன்றில் ஸ்டாலின் காணொலி வாயிலாகப் பேசினார். அப்போது அவர், “தமிழகத்தில் திமுக கூட்டணி தொடரும். இது வெறும் தேர்தல் கூட்டணி அல்ல. கொள்கை ரீதியான கூட்டணி” என்று கூறினார்.
கடந்த 28ஆம் தேதி செஸ் ஒலிம்பியாட் துவக்க விழாவிற்கு ஒன்றிய முதன்மை அமைச்சர் நரேந்திர மோடி சென்னை வந்திருந்தார். அப்போது அவரும், முதல்வர் ஸ்டாலினும் ஆத்மார்த்தமாக பேசிக்கொள்ளும் புகைப்படங்கள் வெளியாகின. இருவருக்கும் இடையே நிலவிய இணக்கமான சூழலைக் குறிப்பிட்டு, தமிழகத்தில் திமுக, பாஜக கூட்டணி அமையலாம் என்று பேசப்பட்டது. இந்நிலையில், பாஜக திமுக கூட்டணி தொடர்பான வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் முதல்வர் ஸ்டாலின் இன்று பேசியுள்ளார்.
அவர் மேலும் பேசுகையில், “மாநில நிதி ஆதாரத்தின் சுதந்திரத்தை ஜிஎஸ்டி பறித்துள்ளது. மாநிலங்களுக்கு ஜிஎஸ்டியை பிரித்துக் கொடுக்க வேண்டும் என்றாலும் கூட அவை உரிய நேரத்தில் மாநிலங்களுக்கு வந்து சேர்வது இல்லை. நீட் போன்ற நுழைவுத் தேர்வுகளால் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு மருத்துவக் கல்வி எட்டாக்கனியாகி உள்ளது. நீட் ஒரு மக்கள் விரோத கொள்கை” என்று கண்டனம் தெரிவித்தார்.
“ஆளுநர்களைக் கொண்டு மாநிலங்களில் பக்கவாட்டில் ஓர் அரசு நடத்த ஒன்றிய அரசு முயல்கிறது. இத்தனை சவால்களுக்கும் இடையே தான் நாம் ஆட்சி செய்ய வேண்டி உள்ளது. சில மோசமான சக்திகள் நம்மை ஆட்கொள்ள நாம் இடம் கொடுக்கக் கூடாது” என்று மாநில சுயாட்சியை மையப்படுத்தி முதல்வர் ஸ்டாலின் பேசினார்.