இரவின் நிழல் – விமர்சனம்
![](http://www.heronewsonline.com/wp-content/uploads/2022/07/0a1a-14.jpg)
நடிப்பு: பார்த்திபன், வரலட்சுமி சரத்குமார், பிரிகிடா, ரேகா நாயர் மற்றும் பலர்
இயக்கம்: பார்த்திபன்
இசை: ஏ.ஆர்.ரஹ்மான்
ஒளிப்பதிவு: ஆர்தர் வில்சன்
மக்கள் தொடர்பு: நிகில்
பிணமாகக் கிடக்கும் ஏழைத்தாயின் மார்பில் பசிக்காக பால் குடிக்கும் ஒரு சிசு, சிறுவனாகி, அனாதையாகத் திரிந்து, அதிர்ச்சியூட்டும் பல துயரங்களை அனுபவிக்கிறான். அவன் வளர்ந்து, திடுதிப்பென பல கோடிகளுக்கு அதிபதியானால், அவன் வாழ்க்கை எப்படியிருக்கும் என்பதை ‘ நான்லீனியராக’ – முன்னும் பின்னுமாக – காட்சிப்படுத்திருக்கிறார் இயக்குனர் பார்த்திபன். இதுதான் ’இரவின் நிழல்’ படத்தின் இரண்டுவரிக் கதை!
படம் ஆரம்பமாகும்போது, சினிமா ஃபைனான்சியராக இருக்கிறார் நடுத்தர வயது கோடீஸ்வரர் நந்து (பார்த்திபன்). மனைவி மற்றும் பெண் குழந்தையுடன் ஆடம்பரமாக வாழ்ந்து வருகிறார். அவரிடம் திரைப்படம் எடுப்பதற்காக வட்டிக்கு பணம் வாங்கும் இயக்குனர் ஒருவர், சில சிக்கல்களால் கடனைத் திருப்பித் தர இயலாத நிலை ஏற்பட, தற்கொலை செய்துகொள்கிறார். அவரது தற்கொலைக்கு நந்துதான் காரணம் என நினைக்கும் நந்துவின் மனைவி, தனது கணவரை வெறுக்கிறார். குழந்தையை அழைத்துக்கொண்டு வீட்டைவிட்டே வெளியேறுகிறார்.
இயக்குனரை தற்கொலைக்குத் தூண்டியதாக வழக்குப்பதிவு செய்யும் போலீஸ், நந்துவை கைது செய்ய வலைவீசி தேடுகிறது. அவரோ, நாதியற்று கிடக்கும் பாழடைந்த ஆசிரமம் ஒன்றின் வளாகத்துக்குள் ஒளிந்துகொண்டு, தான் பிறந்தது முதல் தற்போது வரையிலான தன் வாழ்க்கையை, வரிசைகிரமமாக இல்லாமல் ’நான்லீனியராக’ அசை போடுகிறார். அவரை போலீஸ் கைது செய்ததா? அவர் என்ன ஆனார்? என்பது கிளைமாக்ஸ்.
இந்த கதையில் நாயகனாக நடித்து, கதை – திரைக்கதை – வசனம் – பாடல்கள் எழுதி, எடிட்டிங் செய்து, இயக்கி, ”உலக அளவில் முதல் நான்லீனியர் சிங்கிள் ஷாட் ஃபிலிம்” என்ற உலக சாதனையை நிகழ்த்தியிருக்கிறார் பார்த்திபன். சுமார் 95 நிமிட படத்தை ஒரே ஷாட்டில் எடுக்க வேண்டும் என்பதற்காக 22 டேக்குகளை வீணாக்கி, 23-வது டேக்கை ஓ.கே. செய்திருக்கிறார். இதற்காக அவரும், நடிப்புக் கலைஞர்களும். தொழில்நுட்பக் கலைஞர்களும் ரத்தத்தை வியர்வையாக்கி, அசுரத்தனமாக உழைப்பைக் கொட்டியிருக்கிறார்கள். குறிப்பாக, ‘உலக அளவில் முதல் நான்லீனியர் சிங்கிள் ஷாட் ஃபிலிம்’ என்ற பார்த்திபனின் கனவை நனவாக்க ஒளிப்பதிவாளர் ஆர்தர் வில்சன் மிகுந்த பொறுமையுடன் எவ்வளவு சிரமங்களை அனுபவித்திருப்பார் என்பதை நினைக்கும்போது கண்கள் கலங்குகின்றன. பாராட்டுகள் ஆர்தர் வில்சன்.
ஏ.ஆர்.ரஹ்மானின் இசையில் “பாவம் செய்யாதிரு மனமே” என்ற பாடல் நம் உள்ளத்தை உருக்குகிறது. அவரது பின்னணி இசையும் காட்சிகளுக்கு வலிமை சேர்த்துள்ளது.
இந்த படம் அனைத்துத் தரப்பு ரசிகர்களையும் சென்றடையுமா என்பது சந்தேகமே. என்றாலும் குறைந்த அளவு திரைப்பட தொழில்நுட்பம் தெரிந்தவர்களைக்கூட வியப்பில் மலைக்கச் செய்துவிடும்.
தமிழ் சினிமாவை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்லும் முயற்சியில் இருந்த பார்த்திபன், திடீர் பாய்ச்சலாய் உலக சினிமாவையே அடுத்த கட்டத்துக்கு நகர்த்திச் செல்வதில் வெற்றி பெற்றிருக்கிறார் என்பது நமக்கெல்லாம் பெருமை.
’இரவின் நிழல்’ – புத்தம்புது வெளிச்சம்!