இந்திய தேசிய சின்னம் இஸ்லாமியருக்கு, கிறிஸ்துவருக்கு, பகுத்தறிவுவாதிக்கு இல்லையா?

யாத்வஷேம் நாவலில் நம் மனதைத் தைக்கும் கேள்வி ஒன்று எழுப்பப்பட்டது:

‘இனவழிப்பு கோரம் ஜெர்மனியில் நடந்து கொண்டிருக்கும்போது எப்படி அங்கிருந்த மக்களால் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்க முடிந்தது? எப்படி உலகால் வேடிக்கை மட்டும் பார்த்துக் கொண்டிருக்க முடிந்தது?’

மனித குலமாக நாம் தோற்றதற்கான அடையாளம் அக்கேள்வி.

புதிய நாடாளுமன்றத்தின் மேலே நிறுவப்படவிருக்கும் தேசியச் சின்னத்தை நேற்று மோடி திறந்து வைத்தார்.

தேசியச் சின்னத் திறப்புக்கு முன் ஒரு பூஜை நடக்கிறது. ஒரு பார்ப்பனர் பூஜை செய்ய, மோடி பயபக்தியுடன் பார்ப்பனர் சொல்பவற்றைச் செய்கிறார். பின்பு பார்ப்பனர் மந்திரங்கள் ஓத, சின்னத்தைச் சுற்றிச் சென்று மோடி சின்னத்தில் பொட்டு வைக்கிறார்.

எல்லா பத்திரிகைகளும் ஊடகங்களும் ‘தேசியச் சின்னச்’ செய்தியைப் பதிவு செய்தன. இத்தனை உயரமாம், இவ்வளவு எடையாம், நாடாளுமன்றத்தின் க்ரீடமாம் என்றெல்லாம் கூவிக் கொண்டிருக்கின்றன.

காணொளிகள் எடுத்த ஊடகங்களுக்கும் ‘ஏன் பூஜை’ என்ற கேள்வி எழவில்லை. பார்க்கும் நமக்கும் எழவில்லை. பெரும்பாலான கட்சிகளுக்கும் எழவில்லை. தேசியச் சின்னத்தைத் திறக்கும்போது நடத்தப்பட்ட பூஜையும் தேசியச் சின்னமாக்கப்பட்ட அரசியல் எவருக்கும் உறைக்கவில்லை.

அத்தனை இயல்பாக பூஜைச் சடங்கு மாற்றப்பட்டிருக்கிறது. அல்லது நம் மனங்களில் இந்துத்துவம் ஊடுருவி இருக்கிறது.

இடதுசாரி கட்சிகள் மட்டும்தான் பூஜையை விமர்சித்திருக்கின்றன.

பிற கட்சிகளுக்கு தர்க்கப்பூர்வமாகவே இது சரியாக இருந்திருக்கலாம். இன்னும் பிற கட்சிகளுக்கு இப்பிரச்சினையில் அமைதி காத்துக் கொள்வது சரியாக இருந்திருக்கலாம்.

இஸ்லாமியர்களுக்கு இந்திய தேசியச் சின்னம் இல்லையா, கிறித்துவர்களுக்கு, பகுத்தறிவுவாதிக்கு இல்லையா என்ற கேள்விக்கெல்லாம் செல்லப் போவதில்லை.

ஓர் இனவழிப்பை ஜெர்மனி எப்படி வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தது என்பதற்கான பதில்கள் மட்டும் கிடைத்துக் கொண்டிருக்கிறது, தொடர்ச்சியாக!

RAJASANGEETHAN