இது எந்த உயரிய மாற்றத்தையும் உருவாக்கி விடாது!
ஒழுக்கமும் அரசியல் புரிதலும் இல்லாத புரட்சி என்பது ஒரு உணர்வுபூர்வமான கும்பலின் வன்முறைச்செயல் மட்டுமே. அது எந்த உயரிய மாற்றத்தையும் உருவாக்கி விடாது.
முகநூலில் பல தோழர்கள் ராஜபக்சேக்கள் பயந்து ஓடியதையும், அவர்களின் மாளிகை பொதுமக்களால் முற்றுகையிடப்பட்டதையும் சூறையாடப்பட்டதையும் சிலாகித்து பதிவுகள் இடுவதின் பின்னாலிருக்கும் உளவியல் எனக்கு புரிகிறது. உங்கள் மகிழ்ச்சியில் நான் எந்த தவறும் காணவில்லை.
ஆனால் அதை அக்டோபர் புரட்சியுடனும் மாவோவின் நெடும்பயணத்துடனும் ஒப்பிடுவதை பார்க்கையில் உண்மையிலேயே கொஞ்சம் ஆயாசமாக இருக்கிறது.
கொடுங்கோலர்களும் பாசிச தலைவர்களும் அஞ்சி ஓடுவதை பார்க்க மகிழ்ச்சியாகத் தான் இருக்கிறது. ஆனால் இவர்கள் தனிமனிதர்கள் அல்ல, ஒரு அமைப்பின் பிரதிநிதிகள். ஒட்டுமொத்த உலகையும் அடக்கியாள நினைக்கும் ஒரு இயக்கத்தின், குழுவின், கருத்தியலின் பிரதிநிதிகள்.
அதுபோல், அங்கே போராடிக்கொண்டிருக்கும் மக்களும் அரசியல் கருத்தியலால் ஒன்றிணைந்தவர்கள் அல்ல.
அன்றாட உணவுக்கும், குழந்தைகள் உண்ணும் பாலுக்கும், எரிபொருளுக்கும் போராடும் மக்கள் இவர்கள். அந்த அடிப்படை தேவைகள் பூர்த்தியானால் அவர்களின் போராட்டமும் முடிந்துவிடும். மற்றபடி இடதுசாரி கருத்தியல் புடலங்காய் ஒன்றும் இல்லை இந்த போராட்டத்தில்.
சரி, இந்த நிலைக்கு இலங்கை வரக்காரணம் என்ன..? வெறும் பெட்ரோல் டீசல் தட்டுப்பாடு மட்டும்தானா..? இது இந்த சவப்பெட்டியின் இறுதி ஆணி என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. ஆனால் இதன் ஆதிமூலம் #அன்னியச்செலாவணிகையிருப்பு.
ஒரு காலத்தில் தென் இந்தியர்கள் ரங்கூனைப்போல் கொழும்புக்கு வேலைக்கும் வியாபாரத்திற்கும் சென்றிருந்தனர். என் தாய் வழி தாத்தாகூட கொழும்பில் தேயிலை கடை வைத்திருந்தவர்தான்.
அன்று முதல் இன்றுவரை இலங்கை பொருளாதாரம் மூன்று T -க்களை அடிப்படையாகக்கொண்டே அமைந்திருந்தது. அவை தேயிலை (Tea), சுற்றுலா (Tourism), ஜவுளி (Textiles). இம்மூன்றும் இலங்கையின் அன்னியச்செலாவணியின் முதுகெலும்பும்கூட..
நீண்ட உள்நாட்டுப்போரின் விளைவாக நேட்டோ மற்றும் பல்வேறு அயல்நாடுகளிடம் வாங்கிக் குவித்த போர்த்தளவாடங்களின் கடன் தலைக்குமேல் போய்விட்ட நிலையில் 2009-லேயே இலங்கை அரசு ஸ்தம்பித்துப்போனது. என்றாலும் இனவாதம், மதவாதம் போன்ற முகமூடிகள் பொருளாதாரத்தில் விழுந்திருந்த தழும்புகளை கொஞ்ச காலம் மறைக்க உதவின.
இப்போதைய ரஷ்ய-உக்ரைன் போர் முதல் எல்லா போர்களின்போதும் அமெரிக்கா இத்தனை கோடிகளுக்கு ஆயுதங்கள் வழங்கியது, இங்கிலாந்து அத்தனை கோடிகளுக்கு ராணுவ தளவாடங்கள் வழங்கியது என்று ஊடகங்கள் வழி அறிவோம் அல்லவா..? அந்த “வழங்கல்கள்” ஒன்றும் உதவிகள் அல்ல. அவை ஆயுத விற்பனைகள். அதுவும் அசாதாரண வட்டிக்கு திணிக்கப்படும் கடன் ஒப்பந்தங்கள்.
இந்த ஆயுதங்களை வாங்கி, போரிட்டு, நாட்டை சுடுகாடாக்கி வெற்றிபெறும் அரசுகள் கடனையும் கந்துவட்டியையும் கட்டும் சூழலிலா இருக்கும்..? பொருளாதார முதுகெலும்பு உடைந்து, நிற்கவே திராணியற்று ஆயுதங்கள் விற்றவர்களின் கால்களில் விழுந்து கிடக்கும். அதுதான் இலங்கைக்கும் நடந்தது.
என்றாலும், மூன்று T-க்களின் உதவியோடு கொஞ்சமேனும் மூச்சுவிட்டுக்கொண்டிருந்த தேசத்தில் 2019 ஈஸ்டர் குண்டு வெடிப்புகள் சம்மட்டி அடி கொடுக்க, தொடர்ந்து வந்த கோவிட் கட்டுப்பாடுகள் சுற்றுலா தொழிலுக்கு சாவுமணி அடித்தது.
அதோடு சேர்ந்து வீழ்ந்ததுதான் ஜவுளித்தொழிலும். கப்பல்களின் போக்குவரத்தே நின்றுபோனபின் எங்கிருந்து ஏற்றுமதி செய்வது.
தேயிலை தொழிலை பொறுத்தவரை, அது “சொந்தச்செலவில் சூனியம் வைத்துக்கொண்ட கதை”. இயற்கை சார்ந்த விவசாயம் நல்ல அணுகுமுறை, பாராட்டப்படவும் பின்பற்றப்படவும் வேண்டியதுதான். ஆனால் அது சரியாக திட்டமிடப்பட்டு படிப்படியாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டிய வேளாண் திட்டம்.
இந்தியாவில் ஒரே இரவில் பணமதிப்பு அமுல்படுத்தப்பட்டது போல் இலங்கையில் ஒரே சட்டத்தின்மூலம் இயற்கை விவசாயம் அமுல்படுத்தப்பட்டது. 2,22,000 ஹெக்டேர்களில் 3 லட்சத்திற்கும் அதிகமான தொழிலாளர்கள் கொண்ட ஒரு மிகப்பெரிய தொழிலகம் ஒரே நாளில் இயற்கை விவசாயத்திற்கு மாறுவதென்றால் சாத்தியமா..?
இப்படி மூன்றாவது துறையும் படுத்துவிட, அந்நிய செலாவணி வரத்து அறவே இல்லாமல்போனது. இலங்கையின் Import – Export deficit எவ்வளவு தெரியுமா..? USD 3 billion. பிற நாடுகள் மற்றும் நிறுவனங்களுக்கு அடைக்கவேண்டிய கடன் எவ்வளவு தெரியுமா..? சுமார் USD 60 billion. இத்தனைக்கும் செழிப்பாக இருந்த காலத்திலேயே இலங்கையின் GDP USD 80 billion தான். சுருக்கமாக சொல்வதென்றால் கடன்கொடுத்தவர்கள் கேட்டால் நாட்டையே அவர்களுக்கு எழுதிக்கொடுக்க வேண்டிய நிலை.
இத்தனை அகச்சிக்கல்கள் இருந்தும், அதற்குப்பின்னால் பாரிய அரசியல் காரணங்கள் இருந்தும் மக்கள் போராடுவது, “உணவில்லை, பால் இல்லை, பெட்ரோல் இல்லை” என்பதால்தான். இந்தப்பிரச்சினைகள் இறக்குமதி சார்ந்தவை. அவை தீரும் சாத்தியக்கூறுகள் குறைவே என்றாலும் அந்நியச்செலாவணி இருந்தால் 2 அல்லது 3 நாட்களில் இந்த பிரச்சினை தீர்ந்துவிடும். ஆனால் இலங்கை பிரச்சினை என்பது அது மட்டும்தானா..?
அதனால்தான் மீண்டும் சொல்கிறேன், “ஒழுக்கமும் அரசியல் புரிதலும் இல்லாத புரட்சி என்பது ஒரு உணர்வுபூர்வமான கும்பலின் வன்முறைச்செயலாக மட்டுமே அமையும். அது சமூகத்தில் எந்த உயரிய மாற்றத்தையும் உருவாக்கிவிடாது”.
மற்றபடி நாமும் வேண்டுமானால் “புரட்சி வாழ்க” என்று கொஞ்சம் சொறிந்து விட்டுக்கொள்ளலாம்.
தோழமையுடன்,
Fazil Freeman Ali
9 July 2022