”நூபுர் சர்மாவின் வார்த்தை ஒட்டுமொத்த நாட்டையும் தீக்கிரையாக்கி விட்டது”: உச்ச நீதிமன்றம் கண்டனம்
”நபிகள் நாயகம் குறித்து சர்ச்சை கருத்து தெரிவித்த நூபுர் சர்மாவின் வார்த்தை ஒட்டுமொத்த நாட்டையும் தீக்கிரையாக்கிவிட்டது, ஒட்டுமொத்த நாட்டிடமும் அவர் மன்னிப்பு கேட்க வேண்டும்” என்று உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
கடந்த மே மாதம் இஸ்லாமிய இறைத் தூதர் நபிகள் நாயகம் குறித்து அப்போதைய பாஜக தேசிய செய்தித் தொடர்பாளர் நூபுர் சர்மா தெரிவித்த கருத்துக்களால் நாடு முழுவதும் வன்முறை மற்றும் கலவரம் வெடித்தது.
அதுமட்டுமின்றி சர்வதேச அளவில் இந்தியாவிற்கு தலைகுணிவை உண்டாக்கியது. இவர் கூறிய கருத்துக்கள் ஒன்றிய அரசுக்கு எதிர்பாராத பெரும் நெருக்கடியை ஏற்படுத்தின.
கத்தார், சவூதி அரேபியா, ஒமன், ஐக்கிய அரபு நாடுகள், ஈரான், குவைத், பாகிஸ்தான் உள்ளிட்ட இஸ்லாமிய நாடுகள் நூபுர் சர்மாவின் கருத்துக்கு கண்டனம் தெரிவித்தன. மேலும், இந்தக் கருத்து குறித்து இந்திய அரசு பொது மன்னிப்பு கோர வேண்டும் என்ற கோரிக்கையும் முன்வைக்கப்பட்டது.
இந்நிலையில், நூபுா் சா்மா, தனக்கு எதிராக பல்வேறு மாநிலங்களில் தொடரப்பட்ட வழக்குகளை டெல்லிக்கு மாற்றக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். தொடர் கொலை மிரட்டல்கள் வருவதால், பல மாநிலங்களுக்கு சென்று வழக்கை எதிர்கொள்ள அச்சமாக இருப்பதாக அவர் அந்த மனுவில் தெரிவித்திருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் கூறுகையில், ”ஜனநாயகம் அனைவருக்கும் பேச்சுரிமையை வழங்கியுள்ளது. அது ஜனநாயகத்தின் வரம்பை மீறி அனுமதிக்க முடியாது. நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் ஒரு சிக்கலை எவ்வாறு விவாதிக்க முடியும். ஒரு கட்சியின் செய்தித் தொடர்பாளராக இருப்பதால் எதையும் கூறிவிட முடியாது. உதய்பூரில் நடந்த துரதிஷ்டவசமான கொலைக்கு உங்களது பொறுப்பற்ற செயல்களே காரணம். நீங்கள் நடந்துகொண்ட விதம், அதன்பிறகு உங்களது வழக்கறிஞர் சொல்வதும் பொறுப்பற்றதாக உள்ளது” என்றனர்.
மேலும், ”நாட்டு மக்களால் நூபுர் சர்மாவுக்கு அச்சுறுத்தலா? அல்லது நூபுர் சர்மாவால் நாட்டுக்கு அச்சுறுத்தலா ?” என கேள்வி எழுப்பிய உச்ச நீதிமன்றம், ”நூபுர் சர்மாவின் சர்ச்சை பேச்சால் நாடே பற்றி எரிகிறது” என்றும், ”கட்சியிலிருந்து நீக்கப்பட்ட நூபுர் சர்மா ஒட்டுமொத்த நாட்டிடமும் தொலைக்காட்சியில் தோன்றி மன்னிப்பு கேட்க வேண்டும்” என்றும் குறிப்பிட்டுள்ளது.
இதையடுத்து தனது மனுவை திரும்பப் பெற்றுக் கொள்வதாக நூபுர் சர்மா உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்தார்.