‘ராக்கெட்ரி’ நம்பி நாராயணனின் நிஜக்கதை!
நடிகர் மாதவன் முதன்முறையாக இயக்கி, நடித்திருக்கும் ‘ராக்கெட்ரி நம்பி விளைவு’ படம் மிக அற்புதமாக உருவாகியுள்ளது. ஒரு சாதாரண போலீஸ் இன்ஸ்பெக்டர், உலகத்தின் தலை சிறந்த ராக்கெட் விஞ்ஞானியாக இருந்த ஒருவரின் வாழ்க்கையை பொய் வழக்கின் மூலமாக நொடிப் பொழுதில் வெட்டிச் சாய்த்த கதையை மிக அழகாகவும், உருக்கமாகவும் சொல்லியிருக்கிறார்கள்.
1994-ம் ஆண்டு இந்தியாவின் பிரதமராக இருந்தவர் பி.வி.நரசிம்மராவ். அதே ஆண்டில் கேரளாவை ஆண்டு கொண்டிருந்தது காங்கிரஸின் கே.கருணாகரன் தலைமையிலான அரசு.
இதே 1994-ம் ஆண்டு நவம்பர் 30-ம் தேதிதான் திருவனந்தபுரத்தில் தனது வீட்டின் அருகேயிருந்த கோவிலில் சாமி கும்பிட்டுவிட்டு வெளியே வந்த இஸ்ரோ அமைப்பின் மூத்த விஞ்ஞானியான நம்பி நாராயணன் போலீஸாரால் பிடிக்கப்பட்டு இழுத்துச் செல்லப்பட்டார்.
பாகிஸ்தானுக்கு கிரையோஜெனிக் என்ஜினின் ரகசியங்களை விற்றதாகக் குற்றம்சாட்டப்பட்டு கைதானார்.
இவரிடமிருந்து ரகசியங்களைப் பெற்றதாக மாலத்தீவை சேர்ந்த மரியம் ரஷீதா, பவுசியா ஹாசன் என்ற இரண்டு பெண்கள் வாக்குமூலம் அளித்திருந்தார்கள். இதன்படிதான் நம்பி நாராயணன் கைதானார்.
கைதாகி போலீஸ் கஸ்டடிக்கு வந்து 5 நாட்கள் தொடர்ச்சியாக இடைவிடாமல் கேரள போலீஸார் தங்களுக்குத் தெரிந்த அத்தனை சித்ரவதை வகைகளையும் நம்பி நாராயணனிடம் காட்டி அவருடைய உடலைப் புண்ணாக்கிவிட்டார்கள்.
இதற்கு மேல் அடித்தால் செத்துவிடுவார் என்று நினைத்து மருத்துவமனையில் சேர்த்துவிட்டார்கள்.
நல்லவேளையாக 6-வது நாளே இந்த வழக்கை சி.பி.ஐ. கையில் எடுத்துக் கொண்டாலும் அங்கும் வேறுவிதமான சித்ரவதையை அனுபவித்துவிட்டார் நம்பி நாராயணன்.
சி.பி.ஐ.யினர் வழக்கமாக செய்யும் விசாரணை முறையுடன் அவர்களுக்கே உரித்தான ஐஸ்கட்டி ட்ரீட்மெண்ட்டும் அவருக்குத் தரப்பட்டது.
ஆனாலும் 3-வது நாளே நம்பி சொல்வது உண்மை என்பதை தெரிந்து கொண்டு சி.பி.ஐ. கடுமையை முற்றிலுமாக விலக்கிக் கொண்டது.
ஆனால் இந்தப் படத்தில் சி.பி.ஐ. மென்மையாக நடந்து கொண்டதாக மட்டுமே காட்டியிருக்கிறார்கள். சி.பி.ஐ.யினால்தான் நம்பி நாராயணன் இந்த வழக்கில் இருந்து வெளியில் வந்தார் என்பதால் அந்தப் பாசத்தில் அதையெல்லாம் படத்தில் வைக்கவில்லை போலும்.
சி.பி.ஐ. 1996-ம் ஆண்டு “இந்த வழக்கு ஜோடிக்கப்பட்டது. பொய்யானது. உண்மையில்லாதது” என்று நீதிமன்றத்தில் அறிக்கையை சமர்ப்பிக்க.. 1998-ம் ஆண்டுதான் சுப்ரீம் கோர்ட்டில் நம்பி நாராயணனும் மற்றவர்களும் நிரபராதிகள் என்று விடுவிக்கப்பட்டார்கள்.
50 நாட்கள் சிறையில் இருந்து நம்பி நாராயணன் வெளியில் வந்த பின்பும் அவருடைய அக்கம்பக்கத்தினர், ஊரார்கள் அவரைத் தூற்றிக் கொண்டிருந்தனர்.
அவருடைய குடும்பத்தினர் பட்ட கஷ்டங்களை கேள்விப்பட்டால் கேரளக்காரர்கள் அத்தனை பேருமே கல்நெஞ்சக்காரர்கள் என்றுதான் சொல்லத் தோன்றுகிறது.
அந்த அளவுக்கு போலீஸார் கொடுத்த பொய்யான கதையை உண்மை என்று நம்பி மீடியாக்கள் தினமும் பரப்புரை செய்து வந்ததுதான் அதற்குக் காரணம்.
இதில் இன்னும் அதிகமாகத் துன்பப்பட்டது அந்த மாலத்தீவை சேர்ந்த பெண்கள்தான்.
விசா காலம் முடிந்த பின்பும் கேரளாவில் இருந்ததால் அதற்கு அனுமதி வேண்டி வந்த அவர்களை படுக்கைக்கு அழைத்திருக்கிறார் அந்த போலீஸ் இன்ஸ்பெக்டர். அவர்கள் வர மறுத்து இன்ஸ்பெக்டரை திட்டியனுப்பியிருக்கிறார்கள்.
இதனால் வெகுண்டெழுந்த அந்தக் கயவன், அவர்கள் மீது பொய்யான வழக்கினை பதிவு செய்து.. அவர்கள் மாலத்தீவின் ரகசிய உளவாளிகள் என்றும், மாலத்தீவில் இருக்கும் பாகிஸ்தான் தூதரகத்திற்கு அடிக்கடி சென்று வருபவர்கள் என்றும், இந்திய ராணுவ ரகசியங்களை இங்கேயிருப்பவர்களிடமிருந்து பெற்று பாகிஸ்தானுக்கு கடத்துபவர்கள் என்றும் கற்பனைகூட செய்து பார்க்க முடியாதபடி எப்.ஐ.ஆரில் பதிவு செய்தான்.
போலீஸ் கஸ்டடியில் இந்தப் பெண்கள் இருந்த நாட்களில் இவர்களது உடம்பில் துணி இருந்தது அதிகப்பட்சம் சில மணி நேரங்கள்தானாம்.
வீரப்பனை தேடுகிறோம் என்ற போர்வையில் பழங்குடியின மக்கள் மீது தமிழ்நாடு, கர்நாடக அதிரடிப் படையினர் நடத்திய அத்தனை கொடூரங்களையும் இந்த மாலத்தீவு பெண்கள் மீதும் கேரள போலீஸ் நடத்தியது.
அம்மணமாக ஸ்டேஷனிலேயே படுக்க வைத்து எட்டி உதைத்திருக்கிறார்கள். கால்பந்தை போல உருட்டியிருக்கிறார்கள். அறைக்குள்ளேயே ஓடி ஓடி வந்தால்தான் தண்ணியாவது குடிக்கத் தருவோம் என்று அலங்கோலப்படுத்தியிருக்கிறார்கள்.
இந்தப் பெண்கள் ஜாமீனில் வெளியே வந்து தாங்கள் பட்ட சித்ரவதைகளை கண்ணீரோடு சொன்னபோது படித்தவர்கள் அதிகம் இருந்த கேரளாவும் கொஞ்சம் அதிர்ச்சியடையத்தான் செய்தது. தமிழில் நிறைய பத்திரிகைகள் அதை மொழிபெயர்த்து அப்போது வெளியிட்டன.
இதில் மரியம் ரஷீதாவின் மன நிலை பாதிக்கப்பட்டு மனம் பிறழ்ந்த நிலையில்தான் கடைசியாக தனது சொந்த நாடான மாலத்தீவுக்கு பயணமானார்.
அவர் ஜாமீனில் வெளிவந்து கேரளாவில் தங்கியிருந்தபோது அவரை சந்திக்கச் சென்ற பத்திரிகையாளர்களின் தலையில் பீரை ஊற்றுவது.. தண்ணீரை ஊற்றுவது.. என்று பைத்தியம்போல் நடந்து கொண்டார். இது தமிழ்ப் பத்திரிகையாளர்களுக்கும் நடந்தது.
நம்பி நாராயணன் மட்டும் திடமாக தைரியமாக எதிர்த்து நின்று தனக்கு நீதி கேட்டு நெடும் பயணத்தை நீதித்துறையில் நடத்தினார்.
இதன் காரணமாக இவருக்கு 50 லட்சம் ரூபாய் நஷ்ட ஈடு கொடுக்கும்படி 2018-ம் ஆண்டுதான் சுப்ரீம் கோர்ட் தீர்ப்பளித்தது.
ஆனால் நம்பி நாராயணன் தன்னை சித்ரவதை செய்த போலீஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை வைத்திருந்ததால் அதற்கும் சி.பி.ஐ.யை விசாரிக்கும்படி சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டிருந்தது.
இடையில் புகுந்த கேரள மாநில அரசு.. அந்தக் கொடிய போலீஸ்காரர்களைக் காப்பாற்ற வேண்டி நஷ்ட ஈட்டுத் தொகையை 1 கோடியே 30 லட்சமாக உயர்த்தி நம்பி நாராயணனுக்கு கொடுத்து அந்த வழக்கினை வாபஸ் வாங்க வைத்தது.
இப்போதும் இந்தப் படத்தில்கூட சொல்லப்படாத விஷயம்… நம்பி நாராயணனுக்கு எதிராக இஸ்ரோவில் செயல்பட்டவர்கள் யார்..? அவரை இந்த வழக்கில் கோர்த்துவிட்டது யார்..? என்பதுதான். இதற்கு நம்பி நாராயணன் படத்திலும் மெளனம் காக்கிறார்.
நம்பி நாராயணன் இந்திய விண்வெளி ஆராய்ச்சி கழகத்தின் ஸ்தாபகரான விக்ரம் சாராபாயின் நேரடி மாணவர். சதீஷ் தவானுடன் இணைந்து பணியாற்றியவர்.
இவர் கைதானபோது இஸ்ரோவின் தலைவராக இருந்தவர் கி.கஸ்தூரிரங்கன். ஆனால் இவர் நம்பி நாராயணனுக்கு எந்த உதவியும் செய்யவில்லையாம்.
அதேபோல் நம்பி நாராயணன் ரஷ்யாவிடமிருந்து கிரையோஜெனிக் என்ஜினை பெற்று வருவதற்கு இந்திய அரசிடம் பேசி பண உதவியைப் பெற்றுத் தந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம்கூட நம்பி நாராயணனை கை விட்டதுதான் மிகப் பெரிய துயரம்.
இந்தக் களேபரத்தில் போலீஸின் தவறான நடவடிக்கைளுக்கு ஒத்துப் போனதாக முதல்வர் கருணாகரன் மீது ஆளும் காங்கிரஸ் கட்சியிலேயே கடும் எதிர்ப்புகள் எழுந்து, வழக்கம்போல முதல்வரை பதவியிலிருந்து விலக வைத்து, ஏ.கே.அந்தோணி 1996-ம் ஆண்டு முதல்வராகியிருக்கிறார்.
இந்தியாவில் அதிகாரமும், அரசியல் செல்வாக்கும் ஒன்று சேர்ந்தால் எப்பேர்ப்பட்ட மனிதனும் மண்ணோடு மண்ணாவான் என்பதற்கு இந்த விஞ்ஞானி நம்பி நாராயணனின் வழக்கும் ஒரு உதாரணம்..!
அவசியம் பார்க்க வேண்டிய படம் இது. மிஸ் பண்ணிராதீங்க..!
Saravanan Savadamuthu