“எனக்கு எல்லாமே நீங்கள் தான்”: பிரச்சாரத்தை தொடங்கினார் ஜெயலலிதா!

வருகிற சட்டப் பேரவைத் தேர்தலை முன்னிட்டு அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா, தனது தேர்தல் பிரச்சாரத்தை சென்னை தீவுத்திடலில் இன்று மாலை தொடங்கினார். இந்தப் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் ஜெயலலிதா பேசியதாவது:

தமிழகம் வளர்ச்சிப் பாதையில் செல்ல குடும்ப ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று அதிமுகவுக்கு ஆதரவளித்து என்னை வெற்றி பெறச் செய்தீர்கள். எனக்கு எல்லாமே நீங்கள் தான். உங்களுக்காகவே அர்ப்பணிக்கப்பட்டதுதான் என் தவ வாழ்வு. உங்கள் மகிழ்ச்சியே என் லட்சியம்.

நான் ஆட்சி பொறுப்பேற்கும் முன் தமிழகத்தில் 15 மணிநேர மின்வெட்டு தினசரி இருந்தது. மின்வெட்டால் படிக்க முடியவில்லை, தொழில்கள் முடங்கின. துன்பம் பெருகியது. அது அந்தக் காலம்.

தற்போது தமிழகம் மின்சார உற்பத்தியில் தன்னிறைவு பெற்றிருக்கிறது. தமிழகம் மின்மிகை மாநிலம் ஆகியுள்ளது. தடையில்லா மின்சாரம் எங்கும் எப்போதும் அளிக்கப்படுகிறது.

உள்ளாட்சி பதவிகளில் பெண்களுக்கு 50% இட ஒதுக்கீடு, ஏழை பெண்கள் திருமணத்துக்கு தாலிக்கு தங்கம் மற்றும் 50 ஆயிரம் ரூபாய் ரொக்கம் உதவி, கைவிடப்பட்ட கிராமப்புற பெண்களின் பொருளாதார மேம்பாட்டுக்கு வீட்டுக்கு வீடு விலையில்லா மிக்சி, கிரைண்டர், மின்விசிறி கொடுத்த அதிமுகவின் சின்னமான இரட்டை இலைக்கு வாக்களிப்பீர்.

தமிழக பெண்களின் தேவைக்கு தருவதே என் லட்சியம். பாலூட்டும் தாய்மார் அறை, நலிந்த பிரிவினருக்கு ஓய்வூதியம் என தமிழக பெண்களுக்கு ஊன்றுகோலாக இருப்பது உங்கள் அன்புச் சகோதரியின் அரசு.

தமிழகம் எதற்கும் கையேந்தும் நிலையை மாற்றி தமிழர்கள் தலை நிமிர்ந்து சொந்தக் காலில் நிற்கவும், கல்வி, மின்சாரம், விவசாயம் என்று தமிழகத்தை தலை நிமிரச் செய்வதும்தான் அதிமுகவின் லட்சியம் என்று 2011-ம் ஆண்டு தேர்தல் அறிக்கையில் 54 தலைப்புகளில் தெரிவித்திருந்தோம். அவை அனைத்தும் நிறைவேற்றப்பட்டன.

விலையில்லா அரிசி, குறைந்த விலையில் பருப்பு வகைகள், சமையல் எண்ணெய், பசுமை வீடுகள் திட்டம், கறவை மாடு, ஆடுகள் வழங்கும் திட்டம், மீனவர்களுக்கு உதவி, விலையில்லா மிக்சி, கிரைண்டர், மின்விசிறி, மகப்பேறு நிதியுதவி திட்டம், ஆறு மாத பேறுகால விடுமுறை, திருமண நிதியுதவி திட்டம், முதியோர் உதவித்தொகை, மடிக்கணினி வழங்கும் திட்டம், பள்ளி, கல்லூரி மாணவர் விடுதிகளுக்கு உணவுக் கட்டணம் உயர்த்தல், சீரமைக்கப்பட்ட மருத்துவக் காப்பீட்டு திட்டம், மாணவர்களுக்கு ரூ.5000 உதவித்தொகை, மூத்த குடிமக்களுக்கு கட்டணமில்லா பேருந்து பயணம், மினரல் வாட்டர் திட்டம் என எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தினேன்.

தேர்தல் வாக்குறுதிகளை நினைத்துப் பார்க்காத அளவுக்கு நிறைவேற்றினேன். ஒவ்வொரு நாளும் என்ன திட்டங்களை செயல்படுத்தலாம் என நான் அல்லும் பகலும் யோசித்து யோசித்து திட்டங்களை செயல்படுத்தியுள்ளேன்.

மீண்டும் ஆட்சிக்கு வந்தால் மக்களுக்கு நலம் பயக்கும் இன்னும் பல திட்டங்களை செயல்படுத்துவேன். மக்கள் வாழ்க்கைத் தரம் உயர்வதற்கான செயல் திட்டங்களைக் கொண்டு வருவேன் என உறுதி அளிக்கிறேன்.

அண்மையில் ஏற்பட்ட வெள்ள பாதிப்பைப் பற்றி பலரும் பலவிதமாக கூறுகிறார்கள். அரசு எதுவுமே செய்யவில்லை என்று கூறிவிட்டு போய்விடுகிறார்கள். நூறாண்டுகளில் இல்லாத மழை கொட்டித் தீர்த்தது. மூன்று மாதங்களில் பெய்ய வேண்டிய மழை ஒரு நாளில் பெய்தது. பாதிக்கப்பட்டவர்களின் வங்கிக் கணக்குகளில் 658.42 கோடி ரூபாய் வரவு வைக்கப்பட்டது. திருவள்ளூர் மாவட்டத்தில் 300.63 கோடி ரூபாய் மதிப்பில் நிவாரணப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இரு மாவட்டங்களில் இதர நிவாரணம் 51.68 கோடி ரூபாய் அளவுக்கு மேற்கொள்ளப்பட்டன.

குடிசை மாற்று வாரிய குடியிருப்புகள் வழங்கப்பட்டன. அம்மா சிறு வணிகர் கடன் திட்டத்தின் மூலம் 111 கோடியே 26 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டது. விலையில்லா பாட புத்தகங்கள், நோட்டுப் புத்தகங்கள், சீருடைகள் வழங்கப்பட்டன. கல்விச் சான்றிதழ்கள், சொத்து பத்திரங்கள் போன்ற ஆவணங்கள் தொலைந்து போனவர்களுக்கு உடனடியாக மீண்டும் வழங்கப்பட்டன.

வெள்ள சேதத்தால் தொற்று நோய் பாதிப்பு ஏற்படவில்லை. அதுவே மிகப் பெரிய சாதனை. இதை நான் மட்டும் சொல்லவில்லை. வெள்ள பாதிப்பை ஆராய வந்த மத்திய குழுவினர் மத்திய அரசுக்கு சமர்ப்பித்த அறிக்கையில் கூறியுள்ளனர்.

குடிநீர் திட்டங்கள், பெரிய வீராணம், கடல் நீரை குடிநீராக்கும் திட்டங்கள், மருத்துவ வசதிகள், பல்நோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை, ராயப்பேட்டை மருத்துவமனை, பொது மருத்துவமனை, ராயபுரம் ஆர் எஸ் ஆர் எம் மருத்துவமனை, கீழ்ப்பாக்கம் மருத்துவமனை, எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனை, அடையாறு புற்றுநோய் நிலையம் ஆகியவற்றில் மேம்பாட்டுப் பணிகள் பல கோடி ரூபாய் செலவில் மேற்கொள்ளப்பட்டன.

நெடுஞ்சாலைத் துறையில் 2,215 கோடி ரூபாய் மதிப்பிலான பணிகள் துவங்கப்பட்டு 615 கோடி ரூபாய் மதிப்பிலான பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. 125 கி.மீ சாலை மேம்பாடு, 12 பாலங்கள் முடிக்கப்பட்டுள்ளன. இன்னும் 12 பாலங்கள் கட்டப்பட்டு வருகினறன. அரசு சேவைகள் பெற 10,457 இ-சேவை மையங்கள் ஏற்படுத்தப்பட்டன. சேத்துப்பட்டு ஏரியில் ரூ.42 கோடியில் பசுமைப் பூங்கா அமைக்கப்பட்டது.

கருணாநிதி இடித்த கலைவாணர் அரங்கம் மீண்டும் கட்டப்பட்டது. 24 மணிநேரம் செயல்படும் அம்மா சேவை மையம், அம்மா முழு உடல் பரிசோதனை திட்டம், அம்மா குழந்தைகள் நலப் பெட்டகம், மகளிருக்கு விலையில்லா சானிட்டரி நாப்கின்கள் வழங்கும் திட்டம் போன்ற பல திட்டங்களையும் செயல்படுத்தியுள்ளோம்.

எவ்வளவு செய்திருக்கிறோம் என்பதை கூறினால் எதிரிகள் மூர்ச்சை அடைந்துவிடுவார்கள். மக்கள் மகிழ்ச்சி வெள்ளத்தில் மிதப்பார்கள்.

மதுவிலக்கைப் பற்றி பேசிக்கொண்டிருக்கிறார்கள். தமிழகத்தில் மதுவிலக்கைக் கொண்டு வருவது பற்றி இன்று பல அரசியல் கட்சித் தலைவர்களும் பேசி வருகின்றனர்.

மதுவைப் பற்றி அறியாத தலைமுறைக்கு மதுவை அறிமுகபப்டுதிய திமுக தலைவர் கருணாநிதியும், திமுகவினரும் மதுவிலக்கு பற்றி பேசுவது வினோதமாக இருக்கிறது. மதுவிலக்கை பற்றி யார் வேண்டுமானாலும் பேசலாம். கருணாநிதியும், திமுகவினரும் பேசக் கூடாது.

வரலாறு மக்களுக்கு தெரியாது என்று நினைத்துவிட்டாரா கருணாநிதி? மதுவிலக்கு பற்றி பேசி வாக்குகள் பெற கருணாநிதி முயற்சிக்கிறார்.

மதுவிலக்கு குறித்து என் நெஞ்சார்ந்த குறிக்கோள் பூரண மதுவிலக்கு கொண்டு வர வேண்டும் என்பதுதான்.

மதுவிலக்கு பற்றி தீவிரமாக ஆராய்ந்துதான் முடிவெடுக்க முடியும் என்பதால் இதுபற்றி இதுவரையில் பேசாமல் இருந்தேன். அவ்வாறு நான் மதுவிலக்கு அறிவித்துவிட்டால் அதை எப்படியும் நிறைவேற்றுவேன் என்று மக்களுக்கு நன்றாகத் தெரியும் என்பதால்தான் கருணாநிதி தன் அச்சத்தை வெளியிட்டுள்ளார்.

திமுக தலைவர் கருணாநிதிக்கு வரும் தேர்தலில் திமுக ஜெயிக்கப்போவதில்லை என்று நன்றாக தெரியும். எனவே தான் அரசியல் காரணங்களுக்காக மதுவிலக்கைப் பேசி வருகிறார். அதிமுக தேர்தல் அறிக்கையில் மதுவிலக்கைப் பற்றி குறிப்பிட்டால் அதை மக்கள் நம்பக்கூடாது என அறிக்கை வெளியிட்டுள்ளார்.

எந்த ஒரு செயலையும் ஆராய்ந்து, எந்த ஒரு உறுதிமொழியையும் செயல்படுத்த முடியுமா? என்று நன்கு சிந்தித்த பின்னரே இந்த ஜெயலலிதா வழங்குவார் என்று மக்களுக்கு தெரியும்.

பூரண மதுவிலக்கை கொண்டு வர வேண்டும் என்பதுதான் என் நோக்கம். ஆனால், ஒரே கையெழுத்தில் பூரண மதுவிலக்கை கொண்டு வருவது சாத்தியமில்லை. இதை படிப்படியாகத்தான் கொண்டு வர முடியும். மதுவை ஒரே நாளில் அழிக்க முடியாது

அதிமுக மீண்டும் ஆட்சியமைத்தால் மதுவிலக்கு படிப்படியாக அமல்படுத்தப்பட்டு, மதுக்கடைகள் குறைக்கப்பட்டு பூரண மதுவிலக்கு அமல்படுத்தப்படும்.

முதலாவதாக மது விற்பனையின் நேரம் குறைக்கப்படும். சில்லறைக் கடைகள், பார்கள் குறைக்கப்படும். மதுவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படும். இவை அனைத்தும் செயல்படுத்தப்பட்டு பூரண மதுவிலக்கு எனும் லட்சியத்தை அடைவோம்.

இவ்வாறு ஜெயலலிதா பேசினார்.