தேமுதிக – மக்கள் நலக் கூட்டணியில் இணைந்தார் ஜி.கே.வாசன்!
காங்கிரஸ் கட்சியிலிருந்து பிரிந்து வந்த முன்னாள் மத்திய அமைச்சரும், மறைந்த ஜி.கே.மூப்பனாரின் மகனுமான ஜி.கே.வாசன், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியை தொடங்கினார். நடைபெறவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலில் அவர் அதிமுகவுடன் இணைந்து தேர்தலை சந்திக்க விரும்பினார். அதிமுக தலைமை குறைவான தொகுதிகள் வழங்க முன்வந்ததோடு, இரட்டை இலை சின்னத்திலேயே போட்டியிட வலியுறுத்தியதால், தயக்கம் காட்டி வந்தார் ஜி.கே.வாசன்.
இந்நிலையில், மக்கள் நலக் கூட்டணியைச் சேர்ந்த வைகோ, முத்தரசன், ஜி.ராமகிருஷ்ணன், தொல்.திருமாவளவன் ஆகியோர் இன்று பிற்பகல் தமாகா அலுவலகத்துக்கு சென்று ஜி.கே.வாசனை சந்தித்தனர்.
பின்னர் அவர்கள் அனைவரும் தேசிய முற்போக்கு திராவிட கழகம் தலைமை அலுவலகம் அமைந்துள்ள கோயம்பேட்டுக்கு புறப்பட்டு சென்றனர். அங்கு அவர்கள் அனைவருடனும் விஜயகாந்த் ஆலோசனை நடத்தினார்.
அதன்பின்னர் தேமுதிக – மக்கள் நலக் கூட்டணியில் தமாகா இணைந்தது பற்றி முறையாக அறிவிக்கப்பட்டது.