மாயோன் – விமர்சனம்
நடிப்பு: சிபிராஜ், தான்யா ரவிச்சந்திரன், ஹரிஷ் பராடி, பகவதி பெருமாள், கே.எஸ்.ரவிக்குமார், ராதாரவி மற்றும் பலர்
இயக்கம்: என்.கிஷோர்
தயாரிப்பு: ‘டபுள் மீனிங் புரொடக்சன்ஸ்’ அருண்மொழி மாணிக்கம்
ஒளிப்பதிவு: ராம் பிரசாத்
கலை: பாலசுப்பிரமணியம்
இசை: இளையராஜா
மக்கள் தொடர்பு: யுவராஜ்
புதையல் வேட்டை பற்றிய கதை இது. வழக்கமாக புதையல் வேட்டை பற்றிய கதைகளில் ஒரு குழு மிகவும் சிரமப்பட்டு கடல், மலை தாண்டிச் சென்று புதையல் தேடும். ஆனால் தற்போது திரைக்கு வந்திருக்கும் ’மாயோன்’ படக்கதையில் புதுமை என்னவென்றால், மர்மமும், பயங்கர அமானுஷ்ய நிகழ்வுகளும், ஆபத்துகளும் நிறைந்த பிரமாண்டமான பழங்கால பெருமாள் (மாயோன்) கோயிலுக்குள் புதையல் வேட்டை நடத்தப்படுகிறது.
தமிழ்நாட்டின் புதுக்கோட்டை மாவட்டத்தில், (கற்பனையான) மாயோன் மலையில், பிரமாண்டமான பழங்கால மாயோன் கோயில் இருக்கிறது. அக்கோயிலுக்குள் இருக்கும் ரகசிய அறையில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள தங்க – வைர பொக்கிஷங்கள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக பல நூற்றாண்டுகளாகவே ஒரு பேச்சு உண்டு.
இது பற்றி கேள்விப்படும் சர்வதேச கொள்ளைக்கும்பல் தலைவன், அந்த பொக்கிஷங்களைக் கைப்பற்ற திட்டமிடுகிறான். இதை வெற்றிகரமாக செய்து முடிக்க அர்ஜுன் (சிபிராஜ்), தேவராஜ் (ஹரிஷ் பராடி) ஆகியோர் தலைமையிலான ஒன்றிய அரசின் தொல்பொருள் ஆராய்ச்சிக் குழுவினரை கைக்குள் போட்டுக்கொண்டு, அவர்களை களத்தில் இறக்கிவிடுகிறான்.
கோயிலுக்குள் இருக்கும் ரகசிய அறையைக் கண்டுபிடிப்பது, திறப்பது சம்பந்தப்பட்ட கிருஷ்ணர், கந்தர்வர் பற்றிய பழங்கால தொன்மங்களைப் புரிந்துகொளவது சிரமம்; மாலை 6 மணிக்கு மேல் கோயிலுக்குள் சென்றால் பைத்தியம் பிடிக்கும்; மேலும், அங்குள்ள அச்சமூட்டும் அரக்கக் குள்ளன், வெறிகொண்ட மோகினி, ராட்சதப் பாம்பு இவற்றால் உயிருக்கே ஆபத்து ஏற்படும்.
இத்தகைய அபாயங்களை எல்லாம் சமாளித்து, தொல்பொருள் ஆராய்ச்சிக் குழு, ரகசிய பொக்கிஷங்களைக் கைப்பற்றியதா, இல்லையா என்பதை விறுவிறுப்பாகச் சொல்லுகிறது மீதிக்கதை.
தொல்பொருள் ஆராய்ச்சித் துறை அதிகாரி அர்ஜுன் கதாபாத்திரத்தில் நாயகன் சிபிராஜ் வருகிறார். ஏற்றுக்கொண்ட ’ஷேடோ கேரக்டருக்கு’ பொருத்தமான நடிப்பை வழங்கியிருக்கிறார். அவருடன் படம் முழுக்க பயணிக்கும் வாய்ப்பு நாயகி தான்யா ரவிச்சந்திரனுக்கு. வாய்ப்பை சரியாக பயன்படுத்திக்கொண்டிருக்கிறார்.
ஹரீஷ் பராடி, கே.எஸ்.ரவிக்குமார், ராதாரவி, பகவதி பெருமாள் உள்ளிட்ட அனைவரும் தத்தமது கதாபாத்திரத்துக்கு ஏற்ற நடிப்பை வழங்கி, கதை உயிரோட்டத்துடன் நகர உறுதுணையாக இருந்திருக்கிறார்கள்.
கமர்ஷியல் சினிமா தானே என்று ஏனோதானோ என்று திரைக்கதை அமைக்காமல், நிறைய தகவல்களைத் திரட்டி, ஆய்வு செய்து, நாத்திகர்கள், ஆத்திகர்கள் ஆகிய இரு தரப்பாரும் ஏமாற்றம் அடைந்துவிடாத வகையில், அறிவியலையும், புராணத் தொன்மங்களையும் சரிவிகிதத்தில் கலந்து அனைத்துத் தரப்பினரும் ஏற்றுக்கொள்ளும் வகையில் விறுவிறுப்பாகவும் சுவாரஸ்யமாகவும் திரைக்கதை அமைத்திருக்கிறார் அருண்மொழி மாணிக்கம். பாராட்டுகள்.
நடிப்புக் கலைஞர்களையும், தொழில்நுட்பக் கலைஞர்களையும் சிறப்பாக வேலை வாங்கி, திரைக்கதையை மேலும் மெருகூட்டும் வகையில் படமாக்கியிருக்கிறார் இயக்குனர் என்.கிஷோர்.
பிரமாண்டமான பழங்கால கோயிலை கண்முன் கொண்டுவந்து நிறுத்தும் சவாலான பணியை சிறப்பாக செய்திருக்கும் கலை இயக்குனர் பாலசுப்பிரமணியம், கோயிலின் உள்ளும் புறமும் இருக்கும் பிரமாண்டத்தையும், அமானுஷ்யங்களையும் காமிராவில் அள்ளிக்கொடுத்திருக்கும் ஒளிப்பதிவாளர் ராம் பிரசாத், செவிக்கு இனிமை சேர்க்கும் பாடல்களையும், காட்சிகளுக்கு வலுசேர்க்கும் பின்னணி இசையையும் வழக்கம் போல் மிக நேர்த்தியாகத் தந்திருக்கும் இசையமைப்பாளர் இளையராஜா ஆகியோர் இயக்குனருக்கு பக்கபலமாக இருந்து, தரமான வெற்றிப்படமாக இப்படம் உருவாக பேருதவி புரிந்திருக்கிறார்கள்.
‘மாயோன்’ – அறிவியலையும், ஆன்மிகத்தையும் இணைக்கும் புதுமையான முயற்சி! ஆத்திகர்கள், நாத்திகர்கள் என்ற பேதமில்லாமல் அனைவரும் பார்த்து ரசிக்கலாம்!