வாய்தா – விமர்சனம்
நடிப்பு: மு.இராமசாமி, புகழ் மகேந்திரன், ஜெசிகா பவுல், நாசர் மற்றும் பலர்
இயக்கம்: மகிவர்மன் சி.எஸ்.
இசை: சி.லோகேஷ்வரன்
ஒளிப்பதிவு: சேதுமுருகவேல் அங்காகரகன்
மக்கள் தொடர்பு: யுவராஜ்
சமீப காலமாக பல தமிழ் திரைப்பட இயக்குனர்கள் சாதிபேதம் மற்றும் சமூக அநீதிகளுக்கு எதிராக உரக்க குரல் கொடுக்கும் திரைப்படங்களை உருவாக்கி வருகிறார்கள். அவற்றில் சில கதைகள் மேலோட்டமாக இருக்கின்றன. சில கதைகள் நம்மை ஆழமாகப் பாதிக்கின்றன. இந்த இரண்டாவது ரகத்தைச் சேர்ந்தது இயக்குனர் மகிவர்மனின் ’வாய்தா’.
நீதித்துறை அமைப்பில் உள்ள ஓட்டைகள் ஒரு அப்பாவி சலவைத் தொழிலாளி மற்றும் அவரது குடும்பத்தினரின் வாழ்க்கையை எவ்வாறு பாதிக்கின்றன என்பதை உணர்வுபூர்வமான சொல்லும் கதை இது.
படம் ஒரு விபத்தில் தொடங்குகிறது, அந்த விபத்தில் வயதான சலவைத் தொழிலாளியான அப்புசாமி (மு இராமசாமி) படுகாயமடைகிறார். உள்ளூர் அரசியல்வாதி ஒருவர், விபத்தை ஏற்படுத்திய பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த அன்பழகனிடம் இழப்பீடு பெறுமாறு அப்புசாமியின் குடும்பத்தினருக்கு அறிவுரை வழங்குகிறார். ஆனால் விபத்தில் பாதிக்கப்பட்ட அப்புசாமி தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால், அன்பழகனும் அவரது தந்தை முத்துசாமியும் பிரச்சினையை சுமுகமாகத் தீர்க்கக்கூட தயாராக இல்லை. அவர்கள் அப்புசாமி மீது மோட்டார் சைக்கிள் திருட்டு வழக்கை பதிவு செய்கிறார்கள். மேலும், காவல் துறை அதிகாரிகள் கூட காரணம் இல்லாமல் முதியவர் அப்புசாமியின் மகன் விக்கியை (புகழ் மகேந்திரன்) வதை செய்கிறார்கள். இதனால், அப்புசாமியும் அவரது குடும்பத்தினரும் நீதிமன்றத்தில் நீதிக்காக போராட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இந்த வழக்கின் போக்கு என்ன? முடிவு என்ன? என்பது மீதிக்கதை.
சலவைத் தொழிலாளியாக வரும் மு.இராமசாமி, அந்தப் பாத்திரமாகவே மாறி, காண்போர் மனதைக் கலங்க வைக்கிறார். அவருடைய மகனாகவும், விசைத்தறி தொழிலாளியாகவும் வரும் அறிமுக நடிகர் புகழ் மகேந்திரன், ஆதிக்க சாதி இளைஞர்களுக்கு எதிராக ஆவேசம் கொள்ளுமிடத்தில் அப்ளாஸ் வாங்குகிறார்.
புகழ் மகேந்திரனின் காதலியாக வரும் ஜெசிகா பவுல் இயற்கையான அழகுடன் எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். நாசர், நக்கலைட்ஸ் புகழ் பிரசன்னா உட்பட எல்லா நடிகர்களும் தத்தமது கதாபாத்திரத்துக்கு நியாயம் செய்திருக்கிறார்கள்.
கிராமப்புறத்தில் நிலவும் சாதிப்பாகுபாடும், நீதித்துறையில் நிலவும் ஆணவப்போக்கும் ஒடுக்கப்பட்ட எளிய மனிதர்களை எத்தகைய துயரத்துக்கு ஆளாக்குகின்றன என்பதை பட்டவர்த்தனமாக படம் பிடித்துக் காட்டியிருக்கும் இயக்குனர் மகிவர்மன் சி.எஸ்ஸுக்கு பாராட்டுகள்.
சேதுமுருகவேல் அங்காகரகன் ஒளிப்பதிவும், சி.லோகேஷ்வரன் இசையமைப்பும் ஓ.கே. ரகம்.
’வாய்தா’ – அவசியம் பார்க்க வேண்டிய படம்!