’ழ’ எழுத்தை ஆயுதமாக ஏந்திய தமிழணங்கு மூலம் அமித்ஷாவின் பேச்சுக்கு பதிலடி கொடுத்த ஏ.ஆர்.ரஹ்மான்!
”இந்தியைத்தான் ஆங்கிலத்துக்கு மாற்றாக கருத வேண்டும். உள்ளூர் மொழிகளை அல்ல. இந்தியாவில் தேசிய மொழி இல்லை என்றாலும், இந்திதான் நாட்டின் அதிகாரபூர்வ மொழியாகும்” என ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
அமித்ஷாவின் கருத்துக்கு முதலமைச்சர் ஸ்டாலின் உள்ளிட்ட தமிழக அரசியல் தலைவர்கள் கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர். மேலும், #இந்தி_தெரியாது_போடா, #StopHindiImposition ஹேஷ்டேக்குகள் சமூகவலைத் தளங்களில் மீண்டும் ட்ரெண்டாகி வருகிறது.
இந்த நிலையில், அமித்ஷாவின் பெயரைக் குறிப்பிடாமல் அவரது இந்தி திணிப்பு பேச்சுக்கு மறைமுகமாகவும், வலிமையாகவும் எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில், இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் பதிவிட்டுள்ள சமூகவலைதள பதிவு ஒன்று வைரலாகி வருகிறது.
ஏ.ஆர்.ரஹ்மானின் அந்த பதிவில், தமிழ்மொழிக்கே உரிய சிறப்பு எழுத்தான ‘ழ’ எழுத்தை ஆயுதமாக ஏந்தி ஆவேசமாக நடனமாடும் தமிழணங்கின் ஓவியமும், ‘இன்பத் தமிழ் எங்கள் உரிமைச்செம் பயிருக்கு வேர்’ என்ற புரட்சிக்கவிஞர் பாரதிதாசனின் எழுச்சிமிக்க கவிதை வரியும் இடம் பெற்றுள்ளது.
ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துப் பாடிய “மூப்பில்லா தமிழே தாயே” என்ற தமிழ்கீதம் சமீபத்தில் வெளியானது குறிப்பிடத்தக்கது.
கவிஞர் வைரமுத்து
அமித்ஷாவின் இந்தித் திணிப்பு பேச்சுக்கு எதிர்வினையாக கவிஞர் வைரமுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பதிவு:-
”வடக்கே வாழப்போன தமிழர் இந்தி கற்கலாம்
தெற்கே வாழவரும் வடவர் தமிழ் கற்கலாம்
மொழி என்பது தேவை சார்ந்ததே தவிர திணிப்பு சார்ந்ததல்ல
வடமொழி ஆதிக்கத்தால் நாங்கள் இழந்த நிலவியலும் வாழ்வியலும் அதிகம்
இதற்குமேலும் இந்தியா?
தாங்குமா இந்தியா?”