பார்ப்பனியத்தை அடையாளம் காண முடியாத வரை உழைக்கும் வர்க்க விடுதலை சாத்தியப்படாது!
இந்திய ஒன்றியத்தின் இரு முனையில் இருக்கும் நாடுகளிலும் ஆட்சி மாற்றத்தைக் கோரும் போராட்டங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. அவை புரட்சிக்கான யத்தனமாகவும் இருக்கலாம். பொருளாதாரம் பெரும் பாதிப்புக் கொண்டதால் பாகிஸ்தானிலும் இலங்கையிலும் மக்கள் தெருக்களுக்கு வந்திருக்கின்றனர்.
இந்தியாவில் பொருளாதாரம் சிறப்பாக இருக்கிறதா? இல்லை. அந்த இரு நாடுகளைக் காட்டிலும் அதல பாதாளத்தில்தான் நாம் இருக்கிறோம். எனினும் இந்திய ஒன்றியத்தில் பெரும் போராட்டமோ புரட்சியோ நடப்பதில்லை.
இந்திய ஒன்றியத்தில் கிட்டத்தட்ட எல்லாரையும் பாதித்த நடவடிக்கை பணமதிப்பு நீக்கம். நவம்பர் 8 2016 அன்று மோடி தொடங்கி வைத்த சீரழிவு அது. ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்டபோதும் நாம் வரிசையில் சென்று நின்றோம். ஆங்காங்கே சில வங்கிகளில் மக்கள் பதற்றத்தில் சிறு சிறு பிரச்சினைகள் செய்தனர். எதிர்கட்சிகள் கறுப்பு பணம் வெளிவரக் காத்திருந்தன. ஒன்றும் நடக்கவில்லை. ஆறு மாதங்களுக்குப் பின் ’சொல்லப்பட்ட எதுவும் நடக்கவில்லை’ என ஒப்புக் கொண்டது அரசு.
ஒரு மாதம் கழித்து டிசம்பர் 11ம் தேதி வெனிசுலா நாட்டிலும் பணமதிப்பு நீக்கத்தை அறிவித்தார் ஜனாதிபதி. உடனே போராட்டம் வெடித்தது. இரண்டு நாட்களில் பணமதிப்புநீக்க நடவடிக்கை திரும்பப் பெறப்பட்டது.
ஆனால் இங்கு?
இந்திய ஒன்றியத்தைப் பொறுத்தவரை பல ஆயிரம் சாதிகளும் பல மதங்களும் பல மொழிகளும் பல பண்பாடுகளும் பல தளங்களைச் சேர்ந்த மக்கட்பிரிவுகளும் அவற்றின் உச்சத்தில் உட்கார்ந்து இயக்கும் பார்ப்பனீயமும் இருக்கிறது. ஒரு 10 பேர் திரண்டாலும் அவர்களுக்குள் சாதி மோதலை ஏற்படுத்தி விட முடியும். மத மோதலை உருவாக்கி விட முடியும். மொழிச் சிக்கல் முரணை உருவாக்கி விட முடியும்.
ஆங்கிலேயன் இங்கு இருந்தபோது divide and rule என்கிற பாணியைக் கொண்டு இந்திய நிலத்தை அடிமைப்படுத்தியதாக வரலாற்றில் படித்திருப்போம். ஆங்கிலேயனுக்கே divide and rule கற்றுக் கொடுத்தது வருணாசிரமத்தை உருவாக்கியப் பார்ப்பனர்கள்தான். ஆங்கிலேயன்தான் அந்த உத்தியைக் கண்டுபிடித்தான் எனப் பிறகு வந்து நமக்கு வகுப்பு எடுத்ததும் பார்ப்பனர்கள்தான்.
கலாச்சார மேலாதிக்கம் என்ற வார்த்தையைக் கேட்டதுமே ஒருவன் அச்சுறுத்தலுக்கு உள்ளாகிறான் எனில் அவனிடம் பார்ப்பனீயம் இருப்பதை அறிந்து கொள்ள முடியும். நீங்கள் முயன்று பாருங்கள். உங்கள் அலுவலகம், கட்சி, வீடு முதலிய இடங்களில் பார்ப்பனர், பார்ப்பனீயம் என்கிற வார்த்தைகளைப் பேசிப் பாருங்கள். ‘இது ரிவர்ஸ் ரேசிஸம் இல்லையா ப்ரோ’, ‘ஆயிரமே இருந்தாலும் அப்படி பேசலாமா’, ‘எனக்கு தெரிஞ்ச ஒரு பிராமின் எத்தனை கஷ்டப்படறாரு தெரியுமா’ போன்ற நகைச்சுவைத் துணுக்குகள் வந்து விழும்.
பல நூறு வேற்றுமைகளும் அவற்றை இயக்கும் பார்ப்பனீயமும் பார்ப்பனீயத்தை ஊட்டி வளர்க்கும் முதலாளித்துவமும் நீக்கமற நிறைந்திருக்கும் சமூகத்தில் அண்டை நாட்டு வெகுமக்கள் திரட்சியை மட்டுமே நாம் வேடிக்கைப் பார்த்திருக்க முடியும்.
பாகிஸ்தானில் சிறுபான்மை, பெரும்பான்மை இஸ்லாமியப் பிரிவுகளைத் தூண்டி விட்டோ இலங்கையில் சிங்கள பவுத்த இனவாத ஒடுக்குமுறை வளர்த்தெடுக்கப்பட்டோ அந்த இரண்டு நாடுகளின் பொருளாதாரப் பிரச்சினை கலாச்சார மோதலாக மாற்றப்படலாம். மாறவும் செய்யலாம்.
‘பார்ப்பனீய வருணாசிரமத்தைக் கொண்டு இயங்கும் அரசனின் கீழ் செயல்படும் பாராளுமன்றம்’ என நேபாள் சமூகத்தை வரையறுக்க முடிந்ததால்தான் அங்கு நேர்ந்து கொண்டிருந்த கொந்தளிப்பை போராட்டமாக வளர்த்தெடுத்து பிரசண்டா வெற்றி காண முடிந்தது. ’அரசனின் கீழ் இயங்கும் நாடு’ என்றோ ’பாராளுமன்ற அரசு கொண்ட நாடு’ என்றோ அதை குறைத்து மதிப்பிட்டிருந்தால் வெகுமக்கள் திரட்சி அதிகாரத்தை வெல்லும் சக்தியாக மாற்றப்பட்டிருக்காது.
14 ஆகஸ்டு 1947 நள்ளிரவு, இரண்டு தென்னிந்திய பார்ப்பனப் புரோகிதர்கள் நேருவின் மீது கங்கை நீர் தெளித்து திலகமிட்டு ஆசிர்வதித்து அனுப்பியும் மறுபுறம் ராஜேந்திரப் பிரசாத் வீட்டில் பார்ப்பனர் தலைமையில் யாகம் வளர்க்கப்பட்டப் பிறகும்தான் இந்திய விடுதலையே அறிவிக்கப்பட்டது என்கிற உண்மை உரைக்காத வரை, 15 ஆகஸ்ட் 1947 காலையில் சனி மற்றும் ராகு இருக்கும் ஸ்தானங்கள் நன்றாக இல்லை என ஜோதிடர்கள் சொன்னதால்தான் நள்ளிரவில் இந்திய விடுதலை அறிவிக்கப்பட்டது என்பது நினைவில் இருக்காத வரை இந்திய அரசும் அதை இயக்கும் நாடாளுமன்றமும் மணி அடித்து யாகம் வளர்க்கப்பட்டு பார்ப்பனர்களின் ஆசிர்வாதத்தோடு தொடங்கப்பட்டதன் ஆதிக்க உணர்வு நமக்குள் சுரணையைக் கொடுக்காத வரை இச்சமூகத்தின் அசலான பிரச்சினையான பார்ப்பனீயத்தை அடையாளம் காண முடியாது. புரட்சியோ உழைக்கும் வர்க்க விடுதலையோ சாத்தியப்படாது.
Graded Inequality எனப்படும் ‘படிநிலைப்படுத்தப்பட்ட அசமத்துவம்’ நிலவும் சமூகம் இந்தியச் சமூகம் என்ற அம்பேத்கரையோ ‘பார்ப்பனியத்தை அடியோடு ஒழிப்பது என்பதுதான் எனது முக்கியமானதும் முதன்மையானதுமான காரியம்’ என கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை வெளியிட்ட பெரியார் சொன்னதையோ தூர வைத்துவிட்டு இச்சமூகத்தின் அடிப்படையாக உள்ள எதையும் அசைத்துக் கூட பார்க்க முடியாது.
RAJASANGEETHAN