முதலமைச்சர் ஸ்டாலின் 69-வது பிறந்த நாள்: திரை பிரபலங்கள் வாழ்த்து!
திமுக தலைவரும் தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் இன்று (மார்ச் 1) தனது 69-வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவர் தமிழக முதல்வராக பதவியேற்ற பின்னர் கொண்டாடப்படும் முதல் பிறந்தநாள் இது என்பதால், திமுக மற்றும் திமுக கூட்டணிக் கட்சியினர் கோலாகலமாகக் கொண்டாடி வருகிறார்கள்.
அவருக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும், பிரபலங்களும் தங்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். தமிழ் திரையுலகில் ரஜினிகாந்த், கமல்ஹாசன், பாரதிராஜா, அமீர் ஆகியோர் தெரிவித்துள்ள வாழ்த்து விவரம்…
ரஜினியின் வாழ்த்து…
இன்று பிறந்த நாள் காணும் இனிய நண்பர் மதிப்பிற்குரிய தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகள்.
கமலின் வாழ்த்து…
மனதிற்குகந்த நண்பர், தமிழக முதல்வர் முக ஸ்டாலின் பிறந்த நாள் காண்கிறார். எதிர்ப்போர் கருத்துக்கும் இடமளித்து, தன் எண்ணத்துக்கும் செயலுக்கும் வலு கூட்டிச் செயல்படும் அவருக்கு என் நெஞ்சார்ந்த வாழ்த்து. நீடு வாழ்க.
பாரதிராஜாவின் வாழ்த்து…
மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களுக்கு,
வணக்கம்.
வரலாற்று சிறப்புமிக்க தமிழ் நாட்டின் முதல்வராக மகுடம் சூட்டப்பட்டதிலிருந்தும், உள்ளாட்சித் தேர்தல்களில் வெற்றி வாகை சூடியதிலிருந்தும் மக்களின் நம்பிக்கை நீங்கள் எனத் தெளியத் தெரிகிறது.
அந்நம்பிக்கையை பொய்யாக்கிவிடாமல் நல் அறிவிப்புகளோடு , சிறந்த செயல்பாடுகளின் மூலம் நாளும் மகிழ்வை மக்களுக்கு திரும்பத் தந்துகொண்டிருக்கிறீர்கள்.
எங்கள் திரைத்துறையையும் கனிவோடு கவனித்துக் கொள்கிறீர்கள். மகிழ்ச்சி!
அதேபோல தங்கள் உடல் நலத்தையும் கவனித்துக் கொள்ளுங்கள். மக்கள் அபிமான முதல்வராக, தமிழகம் பார்த்த நல் முன்னோடிகளின் பட்டியலில் தாங்களும் ஒருவராக காலத்தால் என்றும் நிலைத்திருக்க அந்த இறைவன் அருள் புரியட்டும். திராவிட வளர்ப்பு நீங்கள்.
கடவுள் நம்பிக்கை உண்டா இல்லையான்னு தெரியாது. ஆனால் அடுத்தவர்களின் மனதை மதிப்பவர் என்பதை திருமதி. துர்க்கா அம்மா அவர்களின் இறை நம்பிக்கைக்கு மதிப்பளித்திருப்பதின் மூலம் தெரிந்திருக்கிறேன்.
எனவே என் இறை வேண்டுதலையும் ஏற்பீர்கள் என நினைக்கிறேன்.
நலமுடன், நிறைந்த மக்கள் பலத்துடன் தமிழகத்தின் முதல் மகனாக என்றும் வீற்றிருக்க வாழ்த்துகிறோம்.
இப்பிறந்த நாளில் நீங்கள் ஆசிக்கும் எல்லா வரமும் வாய்க்கட்டும்.
என் சார்பாகவும், தமிழ்த் திரைப்பட நடப்புத் தயாரிப்பாளர் சங்கம் சார்பாகவும் இனிய பிறந்த நாள் வாழ்த்துகளை முதல்வர் அவர்களுக்கு தெரிவித்துக் கொள்கிறேன்.. நீடூழி வாழ்க.
உங்கள் பாசத்திற்குரிய
இயக்குநர் பாரதிராஜா.
தமிழ்த் திரைப்பட நடப்புத் தயாரிப்பாளர் சங்கம்
அமீரின் வாழ்த்து…
இதுவரை பொதுவெளியில் யாருக்கும் பிறந்த நாள் வாழ்த்துச் சொல்லாத நான், ”சமூகநீதிக் காவலரின் வாரிசு”க்கு முதன் முறையாக இதயம் திறந்த வாழ்த்து மடல்.
சூரிய நெருப்பில் உதித்து..
காரிய இருளைத் தகர்த்து..
ஆருடத்தை பொய்யாக்கி
ஆரியத்தை பொடியாக்கி..
ஆட்சிக் கட்டிலை
அடித்தட்டு மக்களுக்கே..
அர்ப்பணித்த
இந்திய முதல்வனே..!
இன்னும் பல காலம் நீயிருக்க
எல்லாம் வல்ல இறைவனை
பிரார்த்திக்கிறேன் – அது
காலத்தின் தேவை..
சமூக நீதி தழைக்க..
சமய நீதி ஓழிக்க..
சமுதாயம் செழிக்க..
சனநாயகம் சிறக்க..
அன்புடன்
அமீர்
சென்னை – மார்ச் 01” 2022