மகான் – விமர்சனம்
நடிப்பு: விக்ரம், துருவ் விக்ரம், பாபி சிம்ஹா, சிம்ரன் மற்றும் பலர்
இயக்கம்: கார்த்திக் சுப்பராஜ்
தயாரிப்பு: ’செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோ’ லலித்குமார்
இசை: சந்தோஷ் நாராயணன்
ஒளிப்பதிவு: ஷ்ரேயஸ் கிருஷ்ணா
ஓ.டி.டி.தளம்: அமேசான் பிரைம்
ஒழுக்கமாக வாழ்ந்துவரும் ஒரு சராசரி மனிதன், எப்படி அதற்கு நேரெதிரான ஒழுக்கக்கேடான வாழ்க்கைக்கு மாறிப் போகிறான் என்பதும், அதன் விளைவுகள் என்ன என்பதும் தான் ‘மகான்’ படத்தின் கதைக்கரு.
காந்தியக் கொள்கைகளை தீவிரமாகப் பின்பற்றும் ஆடுகளம் நரேன், தன் மகனான விக்ரமுக்கு ‘காந்தி மகான்’ என்று பெயர் சூட்டுகிறார். இப்பெயரின் சுருக்கமே ‘மகான்’. இதுதான் படத்தின் தலைப்புக்கான பெயர்க்காரணம்.
படம் ஆரம்பமாகும்போது, கலங்கியிருக்கும் நாயகன் விக்ரம், தனிமையில் அலறிக்கொண்டிருக்கிறார். தன் காரை தானே எரிக்கிறார்.
கதை அடுத்து 1968-ம் ஆண்டுக்கு பின்னோக்கி நகருகிறது. பால்ய சினேகிதர்களாக இருக்கும் காந்தி மகான், சத்யவான், ஞானம் என்னும் மூன்று சிறுவர்கள், தங்களுக்குள் சண்டை போட்டு பிரிந்து செல்கிறார்கள்.
பல ஆண்டுகளுக்குப்பின், அவர்களில் ஒருவரான காந்தி மகான் (விக்ரம்), அரசுப்பள்ளி ஆசிரியராக இருக்கிறார். அவர் உயர் இலட்சியம் ஏதுமில்லாத சராசரி மனிதனாக வாழ ஆசைப்படுகிறார். ஆனால், காந்தியின் கொள்கைகள் மீது தீவிர ஈடுபாடு கொண்ட அவரது மனைவி நாச்சியார் (சிம்ரன்) மற்றும் குடும்பத்தினர், காந்தி மகான் காந்திய வாழ்க்கை தான் வாழ வேண்டும் என்று விரும்புகிறார்கள்.
காந்தி மகான் தனது 40-வது பிறந்த நாளன்று, பால்ய நண்பரான சத்யவானையும் (பாபி சிம்ஹா), அவரது மகன் ராக்கியையும் (சனந்த்) தற்செயலாக சந்திக்கிறார். அன்றே காந்தி மகானின் வாழ்க்கை தலைகீழாக மாறிவிடுகிறது.
காந்தியக் கொள்கைக்கு விரோதமாக மது அருந்திவிட்டு வீட்டுக்கு வருகிறார் காந்தி மகான். இதைக் கண்டு அதிர்ச்சி அடையும் மனைவி நாச்சியாரும், மகன் தாதாவும் (துருவ் விக்ரம்), அவரைவிட்டு விலகி பிரிந்து சென்றுவிடுகிறார்கள்.
காந்தி மகானும், சத்யவானும் சேர்ந்து சொந்தமாக மதுபானம் தயாரித்து, மிகப்பெரிய தொழிலதிபர்களாக மாறுகிறார்கள். அவர்களுடைய மற்றொரு பால்ய நண்பரான ஞானம் (முத்துகுமார்) – இப்போது அரசியல்வாதியாக இருப்பவர் – அவர்களுக்கு உதவுகிறார்.
எல்லாம் நல்லபடியாக போய்க்கொண்டிருக்கும்போது, காந்தி மகானின் மகன் தாதா (துருவ் விக்ரம்), இந்த நண்பர்களுக்கு இடையூறு செய்யும் போலீஸ் அதிகாரியாக பிரவேசிக்கிறார். மதுபான சாம்ராஜ்ஜியத்தை சிதைக்க முயலும் மகன் தாதாவை, தந்தை காந்தி மகான் எப்படி எதிர்கொள்கிறார் என்பது திருப்பங்கள் நிறைந்த மீதிக்கதை.
காந்தி மகான் என்ற வித்தியாசமான கதாபாத்திரத்தில் விக்ரம். படம் முழுக்க தன்னுடைய சிறப்பான நடிப்பால் தூள் பரத்தியிருக்கிறார். கோபம், அழுகை, விரக்தி, மகிழ்ச்சி என விக்ரமின் சகலகலா ராட்சச நடிப்புக்கு சரியான தீனி போட்டிருக்கிறார் இயக்குநர்.
தாதா என்ற பெயரில் வரும் துருவ் விக்ரம், படத்தின் இடைவேளையின் போதுதான் அறிமுகம் ஆகிறார். அவர் அறிமுகமான பிறகு கதையில் சுவாரஸ்யம் கூடுவதால், படத்தின் இரண்டாவது பாதி பாராட்டும்படியாக வேகம் எடுக்கிறது. ‘ஆதித்ய வர்மா’வைக் காட்டிலும் ’மகான்’ படத்தில் நடிப்பை வெளிப்படுத்த அதிக வாய்ப்பு கிடைத்துள்ளதால் அதனை சரியாகப் பயன்படுத்தி அசர வைத்திருக்கிறார் துருவ் விக்ரம்.
விக்ரமும், துருவ் விக்ரமும் பயங்கரமாக மோதிக்கொள்ளும் சண்டைக் காட்சி, படத்தின் மிகச் சிறந்த காட்சியாக உருவாகியுள்ளது.
பாபி சிம்ஹா விக்ரமுக்கு இணையாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். சிம்ரன், முத்துகுமார், சனந்த் உள்ளிட்ட அனைத்து நடிப்புக் கலைஞர்களும் தங்கள் வேலையை குறையின்றி செய்திருக்கிறார்கள்.
ஆக்க்ஷன், செண்டிமெண்ட், காதல் என அனைத்தையும் கலந்து ஒரு சிறந்த கமர்ஷியல் படத்தை ரசிகர்களுக்கு படைத்திருக்கிறார் இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ். அவருக்கே உரித்தான தனித்துவமான இயக்குனர்டச் படம் முழுக்க ஆங்காங்கே விரவி இருப்பது சிறப்பு.
சந்தோஷ் நாராயணனின் இசையும், ஷ்ரேயஸ் கிருஷ்ணாவின் ஒளிப்பதிவும் அருமை. இந்த இரண்டும் பல காட்சிகளில் பலம் சேர்க்கின்றன.
திரைக்கதையைப் பொறுத்தவரை, படத்தின் இரண்டாவது பாதி அளவிற்கு முதல் பாதியிலும் இயக்குனர் சிரத்தை எடுத்து மெனக்கெட்டிருந்தால், தமிழ் சினிமாவின் மிகச் சிறந்த கேங்ஸ்டர் படங்களில் ஒன்றாகவும், இயக்குனர் கார்த்திக் சுப்பராஜின் மிகச் சிறந்த திரைப்படங்களில் ஒன்றாகவும் ’மகான்’ மாறி இருக்கும்.
எனினும், விறுவிறுப்பான, தரமான ஒரு ஆக்சன் த்ரில்லர் திரைப்படத்தைப் பார்த்து ரசிக்கும் நல்ல அனுபவத்தை பார்வையாளர்களுக்குக் கொடுப்பதில் ‘மகான்’ வெற்றி பெற்றிருக்கிறது. இது திரையரங்குகளில் வெளியாகியிருந்தால், ரசிகர்கள் தலையில் வைத்துக் கொண்டாடுவதை கண் குளிரக் கண்டு ரசித்திருக்கலாம்.
‘மகான்’ – ஆக்சன் பிரியர்களுக்கு செம விருந்து!