தமிழராக இருக்க விரும்பும் ராகுல் ஆதிக்க நூலையும், பேரரசு கிரீடத்தையும் அணியாமல் வரட்டும்!

“மத்திய அரசு பலமாக இருந்தது குப்த சாம்ராஜ்யத்தில்! மத்திய அரசு பலமாக இருந்தது மொகலாய சாம்ராஜ்யத்தில்! மத்திய அரசு பலமாக இருந்தது பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தில்! ஆனால் இன்று அந்த சாம்ராஜ்யங்கள் எங்கே? சரிந்த சாம்ராஜ்யங்களுடன் இப்போது இருக்குற சாம்ராஜ்யத்தை ஒப்பிடுவதற்கு உள்ளபடியே வருத்தப்படுகிறேன். அந்த சாம்ராஜ்யவாதிகள் – தமது சாம்ராஜ்யங்களுக்கு அதிகமான வலிவு தேட முயற்சி செய்த ஒவ்வொரு நேரத்திலும் சரிவுதான் ஏற்பட்டது என்பதை சரித்திரம் உணர்ந்தவர்கள் அறிவார்கள்”

என மாநில சுயாட்சியின் முக்கியத்துவத்தைப் பற்றி பேரறிஞர் அண்ணா பேசியது 1968-ம் ஆண்டின் ஜூலை மாதத்தில். மத்திய அரசு என அவர் குறிப்பிடுவது காங்கிரஸ் அரசாங்கத்தை.

தமிழ்நாடு குறித்து ராகுல் பேசியிருப்பது சந்தோஷமெனினும் அது ராகுலுக்கும் பொருந்தும் என்பதில் இருந்துதான் நாம் நிலைப்பாட்டை எடுக்க வேண்டியிருக்கிறது. ராமர் கோவிலுக்கு வாழ்த்துத் தெரிவிக்கும் கட்சியையும் “என்னுடைய கோத்திரம் தத்தரேய கோத்திரம். நான் காஷ்மீரிய பிராமணன்” என சொல்பவரையும் தமிழ்நாடால் நிச்சயம் புரிந்து கொள்ள முடியும்.

வரலாற்றினூடாக எல்லா காலங்களிலும் தக்காண விளிம்பு வரை கூட பேரரசுகள் வந்திருக்கின்றன. ஆனால் தமிழர் நிலம் தனக்கான அரசியல் என்னவென தெளிவாகவே எப்போதும் இருந்திருக்கிறது. எந்தப் பேரரசையும் எந்த ஆதிக்கத்தையும் எந்த மையக் குவிப்பையும் எந்தச் சுரண்டலையும் எல்லா காலங்களிலும் எதிர்த்தே வந்திருக்கிறோம்.

இந்த நிலத்துக்கென ஓர் அரசியல் பண்பாடு உண்டு. இன்று நேற்றல்ல, நாம் கொண்டிருக்கும் இந்த அரசியல் நிலைப்பாடு சிந்துவெளியில் இருந்து வடிந்து வந்திருக்கும் பண்பாடு. அது ஜனநாயகத்துக்கான பண்பாடு. ஓர் இனத்தை அழிக்க உதவும் வல்லாதிக்க பண்பாடு அல்ல. கலாச்சார ஆதிக்கத்தை நிறுவ முயலுவோரின் பண்பாடும் அல்ல. அதை அமைதியாக ஏற்றுக் கொள்வோரின் பண்பாடும் அல்ல.

ராகுல் தமிழராக இருக்க விரும்புவதில் நமக்குப் பிரச்சினை இல்லை. ஆதிக்க நூலையும் பேரரசுக் கிரீடத்தையும் அணியாமல் வரட்டும்.

தமிழராக இருந்தாலும் வேந்தரின் ஆதிக்கத்தையும் சேர்த்தே எதிர்த்த பாரிகளின் நிலம் இது!

RAJASANGEETHAN